�விவசாயிகளுக்கு ஆதரவாக முழுக் கடையடைப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

Published On:

| By Balaji

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி முழுக் கடையடைப்பு நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று ஏப்ரல் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவின் இரு அணிகள், பாஜக தவிர பிற கட்சிகளுக்கு திமுக சார்பில் தனித்தனியாக அழைப்பு அனுப்பப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை. விவசாயிகள் பிரச்னைக்காக திமுக சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டம் மூன்றாவது அனைத்துக் கட்சி கூட்டமாகும்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், காதர் மொய்தீன், சுப.வீரபாண்டியன், தனபாலன், ஆர்.எம்.வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏப்ரல் 16ஆம் தேதி இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பல்வேறு கட்சித்தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்தனர். இறுதியாக கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும், வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் முழுக்கடையடைப்பு நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது..�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share