போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக ஆட்சியில் கடந்த 2011-2015 காலகட்டத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அப்போது அவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட பணிகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி 95 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித்தராமல் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியில் இருந்த கணேஷ்குமார் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய குற்றப் பிரிவில் புகார் கொடுத்தார்.
அதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சகாயராஜ், பிரபு உள்ளிட்ட 4 பேர் மீது 2017 ஆம் ஆண்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘‘ அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு என் மீது போடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே எனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஜூன் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘குற்றம் நடைபெற்றதாக கூறப்படும் 2014 – 2015 காலகட்டத்தில் இருந்து 2 ஆண்டுகள் கடந்தே புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் ஜோடிக்கப்பட்ட ஒன்று. பணத்தை செந்தில் பாலாஜி எந்த இடத்திலும் நேரடியாக வாங்கவில்லை. புகார் அளித்த நபர் பின் வாசல் வழியாக பணி நியமனம் பெற முயன்றுள்ளார். அது குறித்து காவல் துறை விசாரிக்கவில்லை” எனத் தெரிவித்தார். எனவே அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அப்போது நீதிபதி, “குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ள நிலையில் விசாரணையை சந்திக்க மாட்டாரா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், தற்போது விசாரணையில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவே எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தார். தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர், கூடுதல் நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்யவுள்ளதாகவும், விசாரணை தள்ளிவைக்க வேண்டும் எனவும் கோரினார்.
இதனையடுத்து கூடுதல் நீதிமன்ற உத்தரவு தொடர்பான விபரங்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
**
மேலும் படிக்க
**
**
[அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/11/26)
**
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்](https://minnambalam.com/k/2019/06/11/21)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”