�விக்கிரவாண்டி: விசிகவைக் குறிவைக்கும் அதிமுக, பாமகவை குறிவைக்கும் திமுக!

Published On:

| By Balaji

விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணிகளில் அதிமுக, திமுக என இரு கட்சியினரும் விறுவிறுப்போடு உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ளது. அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனும், திமுக வேட்பாளர் புகழேந்தியும் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர். இரு கட்சிகளுக்கு இடையேயான வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி, திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அதிமுக அமைச்சர் சி.வி சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸ் மூவரும் விக்கிரவாண்டி தேர்தலை தங்களது கவுரவப் பிரச்சினையாகப் பார்த்து உன்னிப்பாக களப்பணியாற்றுகிறார்கள்.

முத்தமிழ்ச்செல்வனுக்கு வாக்கு கேட்டு அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என பலரும் தொகுதி முழுவதும் பரவி செயல்படுகிறார்கள். திமுகவினர் இன்னும் பரவலாக தங்களது பணியை கொண்டுசெல்லவில்லை. காரணம் கேட்டபோது, தொகுதியில் தேர்தல் பணியாற்ற அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களைத் தவிர மற்றவர்கள் களத்திற்கு வர வேண்டாம். எம்.எல்.ஏ.க்களும் இப்படித்தான். இவர்கள், தொகுதிக்குச் சென்று செலவு செய்யக்கூடிய பணத்தை தொகுதியில் உள்ள பொறுப்பாளர்களிடம் கொடுத்துவிட சொல்லி தற்போது ஸ்டாலின் உத்தரவிட்டதனால்தான் இந்த நிலை என்கிறார்கள்.

திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தொகுதிக்குள் கணிசமாக உள்ள குறிப்பிட்ட சமூகங்களின் வாக்குகளை கவர்ந்து வருகிறார்கள். அதுபோலவே மாற்றுக் கட்சியினரிடமும் பேசி அவர்களின் வாக்குகளையும் திமுகவுக்கு உறுதி செய்துவருகிறார்கள்.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள பாமகவின் வன்னியர் வாக்குகளையும், அக்கட்சி முக்கிய நிர்வாகிகளின் குடும்ப வாக்குகளையும் திமுகவினர் பேசி வேட்டையாடிவருகின்றனர். இதையறிந்த அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன், திமுக கூட்டணியில் உள்ள விசிகவின் பட்டியலின வாக்குகளை கைப்பற்ற கடந்த மூன்று நாட்களாக பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் வலம் வந்துகொண்டிருக்கிறார். பணம் இப்பகுதிகளில் தாராளமாக புழங்க ஆரம்பித்திருக்கிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share