�வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!

public

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று ஆரம்பித்தது. இடைக்காலச் சபாநாயகராகப் பொறுப்பேற்றுக் கொண்ட வீரேந்திர குமார், முதலாவதாகப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். நேற்று பாஜக அமைச்சர்கள், மூத்த உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

மக்களவைக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று (ஜூன் 18) தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். முதலில் வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி பதவியேற்றுக்கொண்டார்.

“மக்கள் சபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலாநிதி வீராசாமி என்னும் நான், சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசமைப்பில் உண்மையான நம்பிக்கையும் பற்றுதலையும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதி கூறுகிறேன்” என்று தமிழில் உறுதிமொழியேற்று பதவிப் பிரமாணம் எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து தொகுதி வாரியாக தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, செல்வம் என வரிசையாக தமிழிலேயே பதவியேற்றுக்கொண்டனர். தயாநிதி மாறன் பதவியேற்கையில் தமிழ் வாழ்க, வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என்று கூறினார். தொடர்ந்து, கோப்பில் கையெழுத்திட மறந்து சபாநாயகரை நோக்கிச் சென்றுவிட்டார். அங்கிருந்த அதிகாரி அழைத்த பிறகு சிரித்துக் கொண்டே கையெழுத்திட்டுச் சென்றார்.

டி.ஆர்.பாலு பதவியேற்று முடித்தவுடன் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிஷங்கர் பிரசாத், ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோருக்கு கைகுலுக்கிவிட்டுச் சென்றார். கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி செல்லகுமார் பதவியேற்கச் செல்லும் முன்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை நோக்கி வணங்கிவிட்டுச் சென்றார். பதவியேற்பு நிகழ்விற்கு தருமபுரி எம்.பி செந்தில் குமார் கறுப்புச் சட்டை அணிந்துவந்திருந்தார். திராவிடம் வெல்க, கலைஞரின் புகழ் ஓங்குக என்று கூறி அவர் பதவிப் பிரமாணத்தை முடித்தார்.

ஆரணி காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பதவியேற்கையில், கடவுள் மீது உறுதிகூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கோவை தொகுதி எம்.பி பி.ஆர்.நடராஜன் பதவியேற்கையில் உலகத் தொழிலாளர்களே ஒன்றுகூடுங்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தாரக மந்திரத்தை முழங்கினார்.

சிதம்பரம் தொகுதி எம்.பி திருமாவளவன் பதவியேற்று முடிக்கையில், வாழ்க அம்பேத்கர், பெரியார், வெல்க ஜனநாயம், சமத்துவம் என்று கூறினார். அப்போது ஆளுங்கட்சி தரப்பினர் வந்தே மாதரம் போல்கே என்று இந்தியில் முழக்கமிட்டனர். இதனால் அங்கு கூச்சல் குழப்பம் நிலவியது.

ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி, தமிழ்நாடே என் தாய்நாடு, தாய்நாட்டின் உரிமை காப்போம் என்று கூறி உறுதிமொழி எடுத்தார். கோவை சிபிஐ உறுப்பினர் சுப்பராயன் பதவியேற்கும் போது லாங் லிவ் செக்குலரிசம், லாங் லிவ் இந்தியா என்று கூறினார். அப்போதும் அங்கிருந்த உறுப்பினர்களிடையே கூச்சல், குழப்பம் எழுந்தது.

தேனி அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் பதவியேற்கும்போது, வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், வாழ்க அம்மா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்று முழங்கினார்.அப்போது பாஜக உறுப்பினர்கள் அனைவரும் மேசையை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு தயாநிதி மாறன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடி எம்.பி கனிமொழி வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என்று கூறி பதவியேற்றார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை : திமுக- காங்கிரஸ் இழுபறி! களமிறங்கிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/17/70)**

**[ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!](https://minnambalam.com/k/2019/06/18/29)**

**[உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?](https://minnambalam.com/k/2019/06/17/69)**

**[முன்கூட்டியே விடுதலையாகிறாரா சசிகலா? விளக்கும் தினகரன்](https://minnambalam.com/k/2019/06/17/51)**

**[உயர் மின்னழுத்தக் கோபுரங்களால் பாதிப்பு: எம்பி ஆய்வு!](https://minnambalam.com/k/2019/06/18/20)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *