அதிமுக நேர்காணல் இரண்டாவது நாளாக நேற்றும் (மார்ச் 12) அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்தது. காலை முதல் இரவு வரை நடந்த நேர்காணலில் மதியம் உணவு இடைவேளையின் போது திடீரென எடப்பாடி பழனிசாமி ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.
அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கான சிறப்புக் கூட்டம் தான் அது. முன்கூட்டியே அவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு நட்சத்திரப் பேச்சாளர்கள் வந்திருந்தனர். முதலில் அவர்களுக்கு ஒரு புக்லெட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது பிரதமர் மோடியின் சாதனைகள் பற்றிய புத்தகம்.
”மோடியின் சாதனைகளையே நீங்க தொடர்ந்து பேசணும். அதப் பத்தி இந்த புக்ல இருக்கு. இதை எல்லாரும் படிச்சுக்கணும். அதுக்கு அடுத்து இன்னொரு முக்கியமான விஷயம், ஒவ்வொரு நாளும் ஸ்டாலின் என்ன பேசுறாருங்கறதைக் கேளுங்க. அவரோட விமர்சனங்களுக்கு சரியான கூர்மையான பதில் கொடுக்கணும்.இது ரெண்டுதான் இப்ப்போதைக்கு உங்களோட முக்கியமான வேலை” என்று ஒரு மினி வகுப்பே நடத்தியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சில நட்சத்திரப் பேச்சாளர்களிடம் பேசினோம். “கூட்டணிக்குத் தலைமை தாங்குவது அதிமுகதான் என்று வெளியே பேசுகிறோம். ஆனால் உண்மையிலேயே தலைமை தாங்குவது பாஜகதான். ஏற்கனவே வண்டலூரில் மோடி கலந்துகொண்ட முதல் பிரச்சாரக் கூட்டத்திலேயே,மோடியின் சாதனைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி பேசுமாறு முதல்வருக்கு உத்தரவு வந்தது. அதன்படியே அவரும், துணை முதல்வரும் போட்டி போட்டுக் கொண்டு மோடியைப் புகழ்ந்து பேசினார்கள்.
அதைத் தொடர்ந்து மோடியின் சாதனைகள் பற்றிய புத்தகங்களையும் பாஜகவே தயாரித்து அனுப்பியிருக்கிறது. இந்தியாவில் எல்லா மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட இந்த புத்தகங்கள் தமிழ்நாட்டுக்கும் வந்திருக்கின்றன. அவற்றை எங்களிடம் கொடுத்து, இதை வைத்து பேச வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள் எங்கள் இப்போதைய பணி மோடியை போற்றுவது, ஸ்டாலினைத் தூற்றுவது அவ்வளவுதான்” என்று சிரித்தார்கள்.
�,