�பள்ளிப் படிப்புக்குத் தனியார், மருத்துவ படிப்புக்கு அரசு கல்லூரியா?: நீதிமன்றம்!

Published On:

| By Balaji

வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன், நாங்களும் மருத்துவர்களாக விரும்பினோம், மதிப்பெண் கிடைக்காததால் நீதிபதிகள் ஆகிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 207 ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படாததால் அவை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாகச் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்படுகின்றன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீரன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு இன்று (செப்டம்பர் 27) நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவது தொடர்பாக நீதிமன்றம் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

மனுதாரர் தரப்பில், இந்த 207 இடங்களும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிக தொகை வாங்கிக் கொண்டு விற்பனை செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன், பள்ளிப் படிப்புக்குத் தனியார் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் மருத்துவ படிப்புக்கு அரசு கல்லூரியை நாடுவது ஏன்? அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அனைவரும் மருத்துவராக வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள், நாங்களும் மருத்துவர்களாக வேண்டும் என்று தான் விரும்பினோம். ஆனால் மதிப்பெண் கிடைக்கவில்லை. அதனால் நீதிபதிகள் ஆகிவிட்டோம் என்று நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வழக்கில், தமிழகத்தில் உள்ள 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கவும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரங்களை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share