�
ஹிமாச்சல் பிரதேச நெடுஞ்சாலைகளில் கழிப்பறை வசதி இருப்பது மக்களின் அடிப்படை உரிமை என அம்மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்று ஹிமாச்சல் பிரதேசம். இங்கு ஆண்டு ஒன்றுக்கு 84 லட்சம் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன. தினமும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் மாநில நெடுஞ்சாலைகளிலும் கிட்டத்தட்ட 5,000 பேருந்துகளில் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர்.
நெடுஞ்சாலைகளில் கழிப்பறை வசதிகளே இல்லை என்னும் புகார்கள் அதிகரித்து வருகின்றது. இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தலைமை நீதிபதி சஞ்சய் கரோல் மற்றும் நீதிபதி சந்தீப் சர்மா ஆகியோர் விசாரணை நடத்தியபோது, இந்த நெடுஞ்சாலைகளில் இயற்கை உபாதைகளைச் சமாளிக்க எந்தவித பொது வசதிகளும் இல்லை. எனவே, மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாகப் பயன்படுத்துகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்படையும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களைத் திறந்தவெளி கழிப்பறையைப் பயன்படுத்த கட்டாயப்படுத்துவது அவர்களை அவமதிக்கும் செயலாகும். மேலும், நெடுஞ்சாலைகளில் கழிப்பறை இருப்பது அவர்களின் உரிமை என அம்மாநில அரசுக்குத் தெரிவித்துள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2006-07 மற்றும் 2010-11 ஆண்டுகளில் துப்பரவு பிரச்சாரத்தின் கீழ் மொத்தமாக 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட்டன. ஆனால், பெரும்பாலான கழிப்பறைகள் செயலிழந்துவிட்டன. தற்போது, அவை ஸ்டோர்ரூம்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.�,