மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியின் முதல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் இன்று (பிப்ரவரி 13) நாகர்கோயிலிலுள்ள ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் காலை 11 மணியளவில் சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுக சார்பில் கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையிலுள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்குச் சென்ற ராகுல், சேஞ்ச் மேக்கர்ஸ் என்னும் தலைப்பில் மாணவிகள் மத்தியில் உரையாடினார். சுலபமான கேள்விகளைக் கேட்க வேண்டாம், பதிலளிப்பதற்குக் கடினமான கேள்விகளை கேளுங்கள் என்று மாணவிகளிடம் கூறினார். ஒரு மாணவி எழுந்து சார் என்று கூறி கேள்வி எழுப்பியபோது, சார் வேண்டாம், ராகுல் என்றே அழையுங்கள் என்று தெரிவித்தார். உடனே அம்மாணவி ‘ஹாய் ராகுல்’ என்றதும் அரங்கத்தில் ஆராவாரம் அடங்க வெகு நேரமானது.
இந்தியாவில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது குறித்து மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல், “கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு இந்தியாவில் குறைந்த அளவு பணம் செலவிடப்படுவது உண்மைதான். இவையிரண்டுக்கும் அதிக பணம் செலவழிக்க வேண்டியது அவசியம். ஆனால் பணம் செலவழிப்பதால் மட்டும் சாதகமான முடிவு கிடைத்துவிடாது. கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தன்னிச்சையாகவும், தன்னிறைவாகவும் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
வட இந்தியாவைக் காட்டிலும் தென் இந்தியாவில் பெண்கள் பாலினச் சமத்துவம் பெற்றுள்ளதாக தான் கருதுவதாகவும், பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்ற அம்சத்தில் தமிழகம் முன்மாதிரியாக விளங்குகிறது என்றும் கூறிய ராகுல், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண்களை நிலைகளைக் கூறினால் அதிர்ச்சியடைவீர்கள் என்றும் ஒரு மாணவியின் கேள்விக்கு பதிலளித்தார்.
பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அனைவரும் உணர்ந்துள்ளீர்கள் என்றும், ஜிஎஸ்டி சிக்கலான முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது, ஜிஎஸ்டியின் பல அடுக்கு முறைகளை ஏற்க முடியாது, இதனால் சிறு, குழு தொழில் நிறுவனங்கள் சிரமமடைந்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் ஜிஎஸ்டி முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு வரி குறைக்கப்படும். நீரவ் மோடி உள்ளிட்ட முறைகேடு செய்த நபர்களிடமிருந்து காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் பணம் பறிமுதல் செய்யப்படும் என்றும் மாணவிகள் மத்தியில் உறுதியளித்தார்.
ஆட்சிக்கு வந்தால் தென் இந்தியாவிற்கு என்ன செய்வீர்கள் என்ற மாணவியின் கேள்விக்கு, “நான் குறிப்பிட்ட பகுதிகளுக்கு என்று கூறி திட்டங்கள் தீட்டப் போவதில்லை. இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
உங்கள் தாய் சோனியாவிடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்ற கேள்விக்கு, “என்னுடைய தாய் சோனியா காந்தியின் திறன் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த திறன் எனக்கும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எப்படி பிறரிடம் அன்பு காட்ட வேண்டும் என்று எனது தாய் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்” என்று தெரிவித்தார்.�,