�தூத்துக்குடியை பாஜகவுக்குக் கொடுக்காதீங்க: அதிமுகவினரின் கோரஸ் குரல்

Published On:

| By Balaji

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்காக அதிமுக சார்பில் விருப்ப மனு கொடுத்திருந்தவர்களுக்கான நேர்காணல் நேற்று (மார்ச் 11) அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்தது.

ஆரம்பத்தில் சில தொகுதிகளுக்கு ஒவ்வொரு நபராக அழைத்து நேர்காணல் செய்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அப்படி செய்தால் நேரம் இருக்காது என்பதால், பின் ஒவ்வொரு தொகுதிக்கும் மொத்தமாக எல்லாரையும் வைத்து நேர்காணல் செய்ய ஆரம்பித்தனர்.

அதன்படியே நேற்று மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான நேர்காணல் நடைபெற்றது. தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழி வேட்பாளராக நிற்கிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக தமிழிசை நிற்கிறார் என்று தகவல்கள் வருகின்றன.

இதுபற்றி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையில், ‘கனிமொழிக்கு எதிராகத் தமிழிசையா? கலங்கும் பாஜக தயங்கும் அதிமுக’ என்ற தலைப்பில் எழுதியிருந்தோம். அதில் தூத்துக்குடியில் பாஜகவுக்குக் கடுமையான எதிர்ப்பு இருப்பதையும், அதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்திலும் அதிமுகவுக்கு பாதிப்பு வரும் என்றும் அதிமுகவினர் சொன்னதைக் குறிப்பிட்டிருந்தோம்.

நேற்றை நேர்காணலிலும் அதுவே நடந்தது. விருப்ப மனு அளித்திருந்த 41 பேரும் திரண்டிருந்தனர். அப்போது, ‘தூத்துக்குடிக்கு 41 பேரா…’ என்று பழனிசாமி ஆச்சரியம் தெரிவித்தார்.

அவர் வழக்கமாக, ‘தொகுதி எப்படி இருக்கு?’ என்று கேட்டதுதான் தாமதம்.

‘எல்லாரும் தொகுதியை பிஜேபிக்குக் கொடுக்கப் போறதா சொல்றாங்க. தயவு செஞ்சு கொடுத்துடாதீங்க. திமுகவுல நிக்கிறது கனிமொழி. அவங்க ஒன்றரை வருசமா அங்க வேலை பாத்துக்கிட்டிருக்காங்க. நாம நின்னாதான் திமுகவுக்கு ஈடு கொடுக்க முடியும். பிஜேபிக்குக் கொடுத்திட்டீங்கன்னா கனிமொழி 3 லட்சம் ஓட்டுல ஜெயிச்சுட்டாங்கனு இப்பவே நாம முடிவு பண்ணிக்கலாம். எக்காரணத்தை முன்னிட்டும் பிஜேபிக்குக் கொடுத்துடாதீங்க’ என்று 41 பேரும் கூறியிருக்கிறார்கள்.

மேலும் தூத்துக்குடி தொகுதியில் இருக்கும் ஒவ்வொரு சமுதாய வாக்குகளையும் பட்டியல் போட்டு, அதிமுக சார்பாக ஒரு இந்து நாடார் அல்லது கிறிஸ்துவ நாடாரா நிறுத்தினா சமாளிக்கலாம் என்றும் கள நிலவரங்களை வைத்து சிலர் எடுத்துக் கூறினார்கள்.

இன்னும் சிலரோ, ‘ரெட்டை இலை நிக்கணும். அப்பதான், ஸ்டெர்லைட்டை இழுத்து மூடினது நாமதான்னு பிரசாரம் செய்யலாம். கனிமொழியை திணறடிக்கலாம். பிஜேபி மட்டும் நின்னுச்சுன்னா அவ்ளவுதான்’ என்றும் கூறியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டனர் எடப்பாடியும், பன்னீரும்.

அதிமுகவுக்கு வாய்ப்பு இருந்தால் பரிசீலனைப் பட்டியலில் இருந்த முன்னாள் மாசெ சி.த. செல்லப்பாண்டியன் வரவே இல்லை.

தூத்துக்குடியை பிஜேபிக்குக் கொடுக்க வேண்டாம் என்று ஒட்டுமொத்தமாக அனைவரும் கூறியிருப்பதால் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஒருவேளை தூத்துக்குடி தொகுதி கைமாறும் பட்சத்தில் இந்த நேர்காணலின் கோரஸ் கோரிக்கையே அதற்குக் காரணமாக இருக்கும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share