மெடிக்கல் செக் அப் -1
தொண்டை அடைப்பான் நோய் என்றால் என்ன?
தொண்டை அடைப்பான் என்பது காற்று வழியாகப் பரவும் ஒரு தொற்று நோய். Cornyebacterium diphtheria என்ற நுண் கிருமியால் உண்டாகும்.
**இதன் அறிகுறிகள் என்ன?**
காய்ச்சல், தொண்டை வலி, கழுத்தில் நெறி கட்டுதல், தொண்டையில் பழுப்பு நிற மென்படலம், குரல் மாற்றம், இருமல் என அனைத்தும் இந்த நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள்.
**இந்த நோயினால் உயிருக்கு ஆபத்து எதுவும் உண்டா?**
ஆரம்ப கட்டத்தில் இந்த நோயை Anti-toxin மற்றும் antibiotis உபயோகப்படுத்தி சிகிச்சை அளிக்காவிட்டால் இதய பலவீனம் மற்றும் சுவாச தசை, முடக்கு வாதம் வர வாய்ப்பு உள்ளது.
**இதற்கு தடுப்பு ஊசி உள்ளதா?**
இதற்குத் தடுப்பு ஊசி உள்ளது. அரசு தடுப்பு ஊசி அட்டவணைபடி அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது.
**தொண்டை அடைப்பான் நோயினால் பெரியவர்களுக்கு என்ன பாதிப்பு?**
குழந்தை பருவத்தில் எடுத்த தடுப்பு ஊசி சராசரியாக அடுத்த 15- 20 வருடங்கள் நீடிக்க கூடிய நோய் எதிர்ப்பு தன்மை அளிக்கும். அது மட்டும் இல்லாமல் 100 சதவிகிதம் தடுப்பு ஊசி எடுக்கும் இடங்களில் கூட்டுத் தடுப்பு தன்மை (herd immunity) அதிகமாக இருப்பதால் பெரியவர்கள் இந்த நோயிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள்.
ஆனால், தடுப்பு ஊசி எடுக்கும் சதவிகிதம் குறையும்போது (இப்போது அந்த நிலைமை உள்ளது) பெரியவர்களுக்கு இந்த நோய் வாய்ப்பு அதிகம்.
**இந்தியாவில் இதனால் என்ன பாதிப்பு?**
உலகத்தில் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டில் ஒருவர் இந்தியர்.
**தமிழ்நாட்டில் நிலைமை எப்படி உள்ளது?**
2014 வரை வருடத்துக்கு ஒன்று முதல் மூன்று பேர்தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். ஆனால், இந்த வருடம் ஈரோடு சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் தொண்டை அடைப்பான் நோயினால் இறப்பும் மற்ற மாவட்டங்களில் மாதத்துக்கு 1-3 பெரியோர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை வருகிறார்கள்.
**இந்த எண்ணிக்கை மிகக் குறைவு தானே… இதனால் என்ன பாதிப்பு?**
ஒரு நோய் இல்லாமல் இருக்கும் இடத்தில் மறுபடியும் வர ஆரம்பிக்கும்போது அது தொற்று நோய் பரவு ஆகிறது. அதனால் இப்போது தமிழ்நாட்டில் தொண்டை அடைப்பான் தொற்று பரவு இருப்பதாகத்தான் கருத வேண்டும்.
**இந்தத் தொற்று நோயிலிருந்து எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும்?**
இந்த நோயின் அறிகுறி தெரிந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். இந்த நோய்க்குரிய சரியான மருந்து அங்கே கிடைக்கும்.
**தடுப்பு ஊசி எடுத்தாக வேண்டுமா?**
இருபது வயது மேல் உள்ள பெரியவர்கள் dt தடுப்பு ஊசி எடுப்பது நல்லது. நோய் வராமல் பாதுகாப்பு கிடைக்கும். நாம் எடுப்பதால் கூட்டுத் தடுப்பு தன்மை கூடி
மற்றவர்களும் பயன் அடைவார்கள். இது முற்றிலும் தடுக்கப்படக்கூடிய நோய். பிள்ளைகளுக்குச் சரியான நேரத்தில் தடுப்பு ஊசி கொடுத்து இந்தக் கட்டத்தில் நாமும் தடுப்பு ஊசி எடுத்து நம் சமூகத்தைக் காப்பாற்றுவோம்.
(கட்டுரையாளர் குறிப்பு)
**மருத்துவர் ரம்யா அய்யாதுரை**
**எம்.டி., டி.என்.பி., எம்.ஆர்.சி.பி (பொது மருத்துவம்)**
**மருத்துவப் பேராசிரியர்**
**கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலூர்.**
**சர்வதேச மருத்துவ ஆய்விதழ்களில் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர்.**�,”