மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். “வாசகர்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!” என்ற மெசேஜ் வாட்ஸ் அப்பில் இருந்து வந்து விழுந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து பல வாழ்த்து மெசேஜ்கள். கடைசியில் வந்ததுதான் இந்த மெசேஜ். ”நேற்று நாம் டிஜிட்டல் திண்ணையில் சொன்னபடி திமுக நிர்வாகிகள் பலரும் இன்று காலையில் இருந்தே திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்கள். சந்திக்க வந்த முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் தலைவர் கருணாநிதி ஸ்டைலில் பத்து ரூபாய் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். இதுவரை வந்த பொங்கல் நிகழ்வுகள் எதிலும் யாருக்கும் ஸ்டாலின் பணம் கொடுத்தது இல்லை. ஸ்டாலின் பணம் கொடுக்கும் முதல் பொங்கல் இது. அவரை சந்தித்த எல்லோருக்கும் ஸ்டாலின் பணம் கொடுக்கவில்லை. வாழ்த்துச் சொல்ல வந்தவர்கள் முகத்தைப் பார்த்து, அவருக்குத் தெரிந்தவர்களுக்கு மட்டும் ஸ்டாலின் பணம் கொடுத்திருக்கிறார். ஸ்டாலினை பார்த்து வாழ்த்து வாங்க.. வாழ்த்து சொல்ல வந்தவர்கள் பலரும் அவரது மனைவி துர்காவிடமும் வாழ்த்து வாங்கிவிட்டுப் போயிருக்கிறார்கள். காலையில் தொடங்கி மாலை வரை ஓய்வில்லாமல் நிர்வாகிகளை சந்தித்து இருக்கிறார் ஸ்டாலின்.
கோபாலபுரத்துக்கு காலையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலைஞரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். பேராசிரியர் அன்பழகன் கலைஞரின் கையை பிடித்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு டி.ஆர்.பாலு, ஆ.ராசா, வைரமுத்து உள்ளிட்ட சிலர் மட்டும் கருணாநிதியை பார்த்து வாழ்த்து பெற்றார்கள் என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அடுத்த மெசேஜ் மன்னார்குடியில் இருந்து வந்திருந்தது. “போயஸ் கார்டனுக்கு பொங்கல் வாழ்த்துச் சொல்ல யாரும் வர வேண்டாம் என சசிகலா சொல்லி இருந்ததால் அங்கே யாரும் போகவில்லை. அமைச்சர்கள் கூட்டம் எல்லாம் மன்னார்குடி பக்கம் தான் இருந்தது. சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு பொங்கல் வாழ்த்துச் சொல்ல அமைச்சர்கள் பலரும் அங்கே போனார்கள். ஆனால், யாரும் சைரன் வைத்த காரில் வரக் கூடாது என உத்தரவிட்டு இருந்தார் திவாகரன். அதனால், அமைச்சர்கள் தங்கள் காரை அங்கிருந்த டிராவல்ஸ் பங்களாவில் நிறுத்திவிட்டு, வேறு ஒரு காரில்தான் திவாகரன் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். முதலில் போனவர் சுற்றுச் சூழல் துறை அமைச்சரான கே.சி.கருப்பண்ணன். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் காமராஜ்,கரூர் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் போயிருக்கிறார்கள். எல்லோர் கையிலும் பூங்கொத்தும், சுவீட் பாக்ஸும் இருந்ததாம். ’நீங்க வந்ததுல ரொம்பவும் சந்தோஷம். பொங்கல் வாழ்த்துக்கள்!’ என்று சொல்லி அனுப்பி இருக்கிறார் திவாகரன். தனது உறவினர்கள் யாரும் நேரடியாக கட்சிக்காரர்களை சந்திப்பதோ, அவர்களுக்கு உத்தரவிடவோ கூடாது என சசிகலா சொல்லி இருக்கிறார். அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் திவாகரனைப் பிடித்தால் வேலை நடக்கும் என அவரை நோக்கி ஓட ஆரம்பித்துள்ளனர்” என்ற மெசேஜ்ஜை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.
சற்று நேரத்துக்குப் பிறகு ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக். ”அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்துக்கு வேலைகள் விறு விறுவென நடந்து வருகிறது. எப்படியாவது துணைவேந்தர் பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்ற போட்டோ போட்டி நடக்கிறது. இதற்காக கோடிகளில் பேரங்களும் பேசப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில், ‘நான் விவேக் பேசுறேன். உங்களுக்கு துணை வேந்தர் பதவி வாங்கித் தரேன்… அதுக்கு…’ என்று ஒரு பேரம் நடந்திருக்கிறது. இந்த விசயம் திவாகரன் காதுக்கு போயிருக்கிறது. அவர் இளவரசியின் மகன் விவேக்கை கூப்பிட்டு விசாரித்தாராம். ‘நான் யாருகிட்டயும் பேசலையே.. யாரோ விளையாடி இருக்காங்க…’ என்று அவர் சொல்லி இருக்கிறார். அத்துடன், விவேக் அது பற்றிய விசாரணையில் இறங்கி இருக்கிறார். அப்போதுதான் அவர்களின் உறவினர் ஒருவரே விவேக் பெயரைச் சொல்லி பேரம் பேசி இருப்பது தெரிந்திந்திருக்கிறது. அந்த நபரை கூப்பிட்டு சட்டம் தன் கடமையை செய்ய வேண்டுமா என்று எச்சரித்திருக்கிறாராம் திவாகரன். இன்னும் எத்தனை பேர் கிளம்பப் போகிறார்களோ?” என்பதுதான் அந்த மெசேஜ்.�,