�டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி

Published On:

| By Balaji

மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் ஹாய் சொன்னது. சட்டமன்றத்தில் இருப்பதாக லொகேஷன் காட்டியது. கொஞ்ச நேரத்தில் செய்தி வந்து விழுந்தது.

அதிமுக ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்ற திமுக நிர்வாகிகளின் எண்ண ஓட்டத்தை ஸ்டாலின் பல கூட்டங்களில் பிரதிபலித்துள்ளார். ஆனாலும் அதிமுக எம்எல்ஏக்கள் திமுக வசம் கொண்டு வரும் பல்வேறு முயற்சிகள் கட்சி அளவிலேயே நிறுத்தப்பட்டதும் ஓஎம்ஜி சுனில், செந்தில் பாலாஜி ஆகிய இருவரின் வசம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதும் ஏற்கனவே மின்னம்பலம் செய்திகளில் வந்தவைதான்.

லேட்டஸ்டாக இந்த சட்ட மன்ற கூட்டத் தொடரிலேயே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது என்ற முடிவில் ஸ்டாலின் இருப்பது பற்றி தான் தற்போதைய திமுக எம்எல்ஏக்கள் இடையே பேச்சாக இருக்கிறது.

திமுகவின் இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள அதிமுகவும் தயார் நிலையில் இருக்கிறது. சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் ஒன்பது தொகுதிகளில் மட்டுமே அதிமுக ஜெயித்திருந்தாலும் ஆட்சி தொடர அது முக்கிய காரணமானது. ஆனால் இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தான் தன்னிடம் இருக்கும் ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. குறிப்பாக தினகரன் பக்கம் இருந்த எம்எல்ஏக்களை தனியாக அழைத்துப் பேசி தன் பக்கம் வர வைத்துள்ளார்.

சட்டமன்ற கூட்டத்தொடர் தொடக்கத்தில் அதிமுக தலைமைக் கழகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ‘என்னை எந்த நம்பரில் தொடர்பு கொண்டு பேசணும்னு உங்களுக்கு தெரியும். எப்போது வேண்டுமானாலும் என்னை அந்த நம்பரில் நீங்கள் கூப்பிடலாம். என்ன உதவி வேண்டுமானாலும் தாராளமாக கேட்கலாம்’ என்று தெரிவித்திருந்தார். மேலும் ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் மாதம் முதல் தேதியிலிருந்து 5ம் தேதிக்குள் ஒரு பெரிய தொகை கிடைப்பதற்கான வழி வகைகளை செய்யுமாறு நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போயிருக்கிறது.

இப்படி தன்னிடம் இருக்கும் அதிமுக எம்எல்ஏக்களை தக்க வைத்துக் கொள்வது எப்படி என்ற வித்தையில் கைதேர்ந்த எடப்பாடி, இதன் அடுத்த கட்டமாக தற்போது திமுக எம்எல்ஏக்கள் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறார்.

இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த புதனன்று அதிமுகவின் கொறடாவான தாமரை ராஜேந்திரன் முதல்வர் அறைக்கு பதட்டமாக சென்றுள்ளார். ‘அண்ணா திமுக தரப்பில் நம்ம எம்எல்ஏக்கள் சிலரை வளைச்சிட்டதா பேசிக்கிறாங்க. சட்டமன்ற வளாகத்திலேயே இதை என் காதால கேட்டேன்’ என்று பரபரப்பாக சொல்லியுள்ளார் ராஜேந்திரன்.

அதற்கு எடப்பாடி, ‘ஏன் இதுக்கு போய் இவ்வளவு பதட்டப்படறீங்க? அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. நம்ம கட்சி எம்எல்ஏக்கள் மட்டுமில்ல, திமுக எம்எல்ஏக்களும் ஆட்சி 2021 வரைக்கும் தொடர்வதைதான் விரும்புறாங்க.

நம்ம கட்சி எம்எல்ஏக்களுக்கு வலை வீசுறதா திமுக தரப்பில் சொல்வதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான். அது கறிக்கு ஆகாது. ஆனால் திமுக எம்எல்ஏக்கள்லயே கொஞ்ச பேர் லைப் செட்டில்மென்ட் செஞ்சு கொடுத்தா நம்மகிட்ட வர்றதுக்கு தயாரா இருக்காங்க. அதனால திமுகவை நினைச்சு பயப்பட வேண்டாம். என்னை மாதிரி கூலாக இருங்க’ என்று சொல்லியிருக்கிறார்.

கொறடா ராஜேந்திரனிடம் சொன்னது போலவே எடப்பாடி பழனிச்சாமி முந்தைய சட்டமன்ற கூட்டங்களை விட இந்த சட்டமன்ற கூட்டத்தில் மிகவும் கூலாகவே இருக்கிறார். கேள்விகளுக்கு இயல்பாக, நிதானமாக, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பாராட்டும் விதத்தில் பதில் சொல்கிறார். எடப்பாடியின் இந்தக் கூல் அணுகுமுறைக்கு காரணம் திமுக எம் எல் ஏக்களின் லைஃப் செட்டில்மென்ட் ரகசியம் தான் என்று சொல்லி சிரிக்கிறார்கள் அதிமுக சீனியர்கள்”என்ற செய்தியை படித்து முடிக்கும்போது வாட்ஸ்அப் ஆஃப் லைனுக்கு போயிருந்தது.

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share