மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். வாட்ஸ் அப்பில் 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலில் சில தொகுதிகளுக்கான முடிவுகள் பட்டியலாக வந்து விழுந்தன. ‘’இதைப் பார்த்துக் கொண்டிருங்கள். கொஞ்ச நேரத்தில் மீண்டும் வருகிறேன்” என்று மெசேஜ் வந்தது. சொன்னபடியே கொஞ்ச நேரத்தில் வாட்ஸ் அப் தகவல் வந்தது.
“பாமக மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியில் அதிமுகவோடு செட்டில் ஆகிக்கொண்டிருப்பதாக நமது டிஜிட்டல் திண்ணையில் அன்புமணி -சபரீசன் ரகசிய சந்திப்பு என்ற புதிய தகவலை வெளியிட்டோம். பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியான அந்த செய்தியில், ‘அதிமுக கூட்டணிக்கு பாமக சென்றால் வட மாவட்டங்களில் அதிமுக ஸ்கோர் செய்யும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் அதை முறியடித்து பாமகவை திமுக அணிக்குக் கொண்டுவரலாம் என்று திமுகவிலும் ஒரு தரப்பு முயன்றது. ஏற்கனவே அன்புமணி தரப்பில் திமுகவோடு பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அதில் சில டிமாண்டுகள் பிரச்சினையாக இருந்ததால் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில்தான் ஸ்டாலினுடைய மருமகனான சபரீசனே களமிறங்கி அன்புமணியிடம் பேசியிருக்கிறார்’ என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
இந்தப் பேச்சுகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும்போதே சபரீசனின் தலைமையில் செயல்படும் ஓஎம்ஜி , 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து ஒரு ரிப்போர்ட் தயார் செய்து ஸ்டாலினிடம் கொடுத்தது. அந்த அறிக்கையில்,
‘மக்களவைத் தேர்தலோடு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகள், திருவாரூர், திருப்பரங்குன்றம், பாலகிருஷ்ண ரெட்டி தகுதி இழந்ததால் காலியான ஓசூர் என்று 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது. அதிமுக அரசு என்னதான் இழுத்தடிக்க முயற்சித்தாலும் இடைத்தேர்தல் வருவது உறுதி. இதில் திமுக பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றினாலே அதிமுக அரசைக் கவிழ்க்கும் நிலைக்குத் தள்ளலாம். இந்த ஆபரேஷனை நாம் நடத்த வேண்டுமென்றால் அதற்கு பாமகவோடு கூட்டணி வைக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
தகுதி நீக்கத்தால் காலியான தொகுதிகளில் வட மாவட்டங்களில் அரூர், பாப்பிரெட்டிபட்டி, குடியாத்தம், சோளிங்கர், ஆம்பூர், திருப்போரூர், பூந்தமல்லி ஆகிய தொகுதிகள் வட தமிழகத்தில் வருகின்றன. இவற்றில் பாமக சொல்லிக் கொள்ளும்படியான சக்தியாக இருக்கிறது. இவை தவிர தஞ்சாவூரிலும் பாமகவுக்கு கணிசமான வாக்கு உள்ளது. தகுதி நீக்கத்தால் காலியான மற்ற தொகுதிகள் எல்லாம் தென் மாவட்டத்தில் வருகின்றன. எனவே அங்கே அதிமுக கடுமையாகப் போராடும். வடமாவட்டங்களில் பாமகவோடு திமுக கை கோர்த்தால் அது மக்களவைத் தேர்தலுக்கு என்ன விளைவைக் கொடுத்தாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் நல்ல பலனைக் கொடுக்கும்.
2016 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பாப்பிரெட்டி பட்டி தொகுதியில் ஜெயித்த அதிமுக பழனியப்பன் 74, 234 வாக்குகள் பெற்றார். அந்தத் தொகுதியில் திமுக மூன்றாம் இடத்துக்குப் போனது. பாமகவோ 61 ஆயிரத்து 521 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெற்றது. திருப்போரூர் தொகுதியில் அதிமுக 70 ஆயிரத்து 215 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. அப்போது திமுக 69 ஆயிரத்து 265 வாக்குகள் பெற்று இழையில் வெற்றியை நழுவ விட்டது. இந்தத் தொகுதியில் பாமக பெற்ற வாக்குகள் 28 ஆயிரத்து 125. இதுபோல வட மாவட்டங்களில் இடைத்தேர்தல் நடக்க இருக்கும் தொகுதிகளில் திமுகவும் பாமகவும் சேர்ந்தால் அதிமுகவை எளிதில் வீழ்த்தலாம். எனவே திமுக கூட்டணியில் பாமகவை சேர்த்துக்கொள்வது என்பது மக்களவைத் தேர்தலுக்கானது மட்டுமல்ல, 21 தொகுதி இடைத்தேர்தலிலும் நல்ல பலனைக்கொடுத்து அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும் வழி வகுக்கும்.
அதேநேரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரூர் தொகுதியில் நல்ல செல்வாக்கைக் காட்டியிருக்கிறது. 33 ஆயிரம் வாக்குகள் பெற்று அங்கே சிறுத்தைகள் மூன்றாவது இடம் வந்தது. ஆனபோதும் பாமகவையும், விடுதலைச் சிறுத்தைகளையும் ஒப்பிட்டால் திமுகவுக்கு பாமகவால்தான் களப் பலன் கிடைக்கும்’ என்பதுதான் ஓஎம்ஜி ஸ்டாலினுக்குக் கொடுத்த ரிப்போர்ட். இந்த கோணத்தில் தனக்கு சொல்லப்பட்ட தரவுகளைப் பார்த்த பிறகுதான் பாமகவை அணியில் சேர்க்க பச்சை கொடி காட்டியிருக்கிறார் ஸ்டாலின்.
அதன் பின்னரே கடந்த வாரத்தில் இருந்து பாமகவின் பக்கம் பார்வையைத் திருப்பியது திமுக. இந்த நிலையில் தனக்கு இப்படிப்பட்ட டிமாண்ட் இருப்பதை உணர்ந்த பாமக சமயம் பார்த்து திமுகவிடம் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது. தேர்தலில் தனித்து நின்ற காங்கிரசை விட பாமக அதிக ஓட்டுகள் வாங்கியிருக்கிறது, தர்மபுரி மக்களவைத் தொகுதியிலும் வென்றிருக்கிறது. எனவே காங்கிரஸுக்கு இணையாக பாமகவுக்கும் தொகுதிகள் வேண்டும் என்ற நிபந்தனைதான் அது. மேலும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியையும் பாமக கேட்கிறது. 6+1 என்று திமுக பேசிவரும் நிலையில் 7+1 என்று புதுச்சேரியையும் சேர்த்துக் கேட்கிறது பாமக. ஆனால் தான் ஆளுங்கட்சி என்ற நிலையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியை விட்டுத் தர காங்கிரஸ் மறுக்கிறது. மேலும் பாமகவுக்கும் தங்களுக்கும் சமமான தொகுதிகள் என்ற வாதத்தை ஆரம்பத்திலேயே மறுக்கிறது காங்கிரஸ். தமிழகத்தில் பத்துக்கும் குறையாத இரட்டை இலக்க தொகுதிகள் வேண்டும் என்று ராகுல் காந்தியே கறாராக சொல்லியிருக்கிறார். இப்படி பாமகவை திமுக கூட்டணிக்குள் கொண்டுவருவதால் சில புதிய பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன. இதை எப்படித் தீர்ப்பது என்று ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்” என்று முடிந்தது வாட்ஸ் அப் மெசேஜ்.
இந்த மெசேஜை ஷேர் செய்துகொண்ட ஃபேஸ்புக் அடுத்த செய்தியை டைப் செய்யத் தொடங்கியது.
”திமுக கூட்டணிக்குள் பாமக வருகிறது என்றாலே ஆட்டோமேட்டிக்காக விடுதலைச் சிறுத்தைகள் என்னாகும் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான பதிலையும் திமுக வட்டாரத்தில் விசாரித்தேன். பாமகவுடனான மூவ்கள் திமுகவில் தொடரும் நிலையில் முன்னாள் அமைச்சரும் ஸ்டாலினுக்கு நெருக்கமானவருமான எ.வ. வேலு சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு நேற்று இரவு போன் செய்திருக்கிறார். பாமக உள்ளே வர இருக்கும் சூழலை திருமாவளவனிடம் விளக்கிய வேலு, ‘தலைவர் உங்களை இழக்கத் தயாராக இல்லை. நீங்கள் கேட்கும் சிதம்பரம் தொகுதி உங்களுக்கு உறுதி. உங்களிடம் சொல்லாமல் இதுபோன்ற நடவடிக்கைகளை செய்யக் கூடாதென்றுதான் நீண்ட நாள் தோழமைக் கட்சியான உங்களிடம் இதை தலைவர் சொல்லச் சொன்னார். நமது பொது எதிரி பாஜகதானே… அதனால திமுக தலைமையிலான அணியில நீங்க இருக்கணும்னு தலைவர் விரும்புறாரு’ என்று கூறியிருக்கிறார் வேலு.
அதற்கு திருமாவளவன், ‘பாமக இருக்கும் அணியில் இருப்பது என்பது பாமகவோடு கூட்டணி வைப்பதுதானே… அது எங்களுக்கு அடிப்படையிலேயே சரியாக வராது. மேலும் எங்களுக்கு ஒரு தொகுதியும் பாமகவுக்கு 7 தொகுதியும் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். எங்கள் இரு கட்சித் தொண்டர்களுக்கும் களத்தில் இணக்கமே இல்லை. இந்நிலையில் ஒரு தொகுதியை நாங்க வாங்கிக்கிட்டு திமுக கூட்டணியில் பாமகவின் ஏழு தொகுதிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் வேலை செய்யணுமா? இது சரியா வராதுங்க’ என்று வேலுவுக்கு திருமாவளவன் பதில் கொடுத்திருக்கிறார். இந்த சூழல் பற்றி திருமாவளவன் தனது கட்சியினரிடம் தொடர்ந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்” என்று முடிந்த மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.�,