�டிஜிட்டல் திண்ணை : சின்னம்மாவை எடப்பாடியுடன் பேச வைக்கலாம்! தினகரனின் திடீர் ப்ளான்!

public

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “கட்சி அலுவலகத்துக்குப் போவேன் என்று சொல்லி வந்த டிடிவி தினகரன் அமைதியாகிவிட்டார். கட்சி அலுவலகம் செல்லும் திட்டத்தைக் கைவிட்டு, இப்போது சுற்றுப்பயணம் என்ற திட்டத்தை கையிலெடுத்துக்கொண்டார். நேற்று இரவும், இன்று காலையிலும் தினகரன் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ. வெற்றிவேல், செந்தில் பாலாஜி, பழனியப்பன் என முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் என்ன பேசினார்கள் என்பதை சொல்வதற்கு முன்பு தினகரன் வீட்டைப் பற்றிச் சொல்கிறேன்.

தினகரன் வீட்டுக்குள் நுழைய இரண்டு கேட் உண்டு. மெயின் கேட் வழியாக கார் செல்லும். பக்கத்தில் நடந்து செல்பவர்களுக்காக ஒரு கேட் இருக்கிறது. இதில் நடந்து செல்பவர்களுக்கான கேட் எப்போதும் மூடப்பட்டுதான் இருக்கும். கார் செல்லும் கேட்தான் திறந்து இருக்கும். அந்த கேட் வழியாகவும் நடந்துதான் செல்ல வேண்டும். வீட்டுக்குள் நுழைந்ததும், இடது புறத்தில் விசிட்டர்களை சந்திக்க மாடியில் ஒரு அறை இருக்கிறது. அந்த அறைக்கு கீழே மூன்று கார்கள் நிறுத்தும் அளவுக்கு கார் பார்க்கிங் வசதி உள்ளது. அதைத்தாண்டி வீட்டுக்குள் செல்ல வேண்டுமானால் அதற்கும் ஒரு பிரம்மாண்ட கேட் உள்ளது. தினகரனை சந்திக்க வரும் நிர்வாகிகளை இந்த கார் பார்க்கிங் ஏரியாவில்தான் சேர் போட்டு உட்கார வைக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இந்த கார் பார்க்கிங்கை தாண்டி உள்ளே கேட்டுக்குள் நுழைகிறார்கள். அந்த கேட்டைத் தாண்டினால், வெள்ளை நிறத்தில் பசு மாடு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மரத்தினால் இந்தச் சிலை செய்யப்பட்டுள்ளது. இதையெல்லாம் கடந்து சென்றால்தான் தினகரன் வீடு.

வீட்டுக்குள் நுழைந்ததும் மினி வரவேற்பு அறை. அதற்கு அடுத்து மெயின் ஹால். 25 பேர் உட்காரும் அளவுக்கு இந்த ஹாலில் சோஃபா போடப்பட்டிருக்கிறது. இங்கேதான் முக்கியமானவர்களைச் சந்திக்கிறார். ஆலோசனையும் நடத்துகிறார். ஹாலில், சசிகலாவும் ஜெயலலிதாவும் இருப்பது போன்ற ஒரு படம் மட்டும் இருக்கிறது. இந்த ஹால் வரை யார் வர வேண்டும் என்பதை முடிவு செய்வது தினகரனின் செகரெட்டரி ஜனா என்கிற ஜனார்த்தனன். டிடிவி தினகரன் அப்பாயின்மெண்ட் அத்தனையும் கவனித்துக்கொள்வது இந்த ஜனாதான். கருணாநிதிக்கு சண்முகநாதன், ஜெயலலிதாவுக்கு பூங்குன்றன் போல தினகரனுக்கு ஜனா. தினகரன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் எல்லா நேரத்திலும் ஜனா உடன் இருக்கிறார். இதுதான் தினகரன் வீடு!

இப்போது ஆலோசனைக் கூட்டத்தில் நடந்ததை சொல்கிறேன். ‘நாம கட்சி அலுவலகத்துக்குப் போகாததைப் பற்றி வெளியில் நிறைய பேசுறாங்க. விமர்சனம் செய்யுறாங்க. செய்யட்டும், நாம அதுக்கு ரெஸ்பான்ஸ் செய்ய வேண்டாம். கூட்டத்தை நாம ஆரம்பிச்சுட்டா பேசுறவங்க எல்லாம் அமைதியாகிடுவாங்க. அணிகளை இணைப்பதுதான் நம் குறிக்கோள் என்று பேசியிருக்கோம். அதுக்கான வேலைகளில் இறங்கணும். எடப்பாடி எப்பவும் எதுவும் நமக்கு எதிராக பேச மாட்டாரு. எடப்பாடிதான் நம்ம முதல்வர் என்பதில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை. அமைச்சர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோருமே அமைதியாத்தான் இருக்காங்க. இருப்பாங்க. அதுல எதுவும் பிரச்னை வராது. ஏன்னா எல்லோருமே நினைப்பது ஆட்சிக்கு ஆபத்து வந்துடக் கூடாது என்பதுதான். அவங்க எல்லோருமே ஆட்சி எந்தப் பக்கம் இருக்கோ அந்த பக்கம் இருப்பாங்க. அதனால அங்கே இருக்கிறவங்களோட பேசி எல்லோரையும் நம்ம பக்கம் கொண்டு வரணும்.

எடப்பாடி ஒரு வார்த்தை பேசிட்டாருன்னா எல்லோரும் அமைதியாகிடுவாங்க. அவரை நமக்கு ஆதரவாக பேச வைக்கணும். நாம சொல்றதை விட சின்னம்மா சொல்லிட்டா அவரு அதை தட்ட மாட்டாரு. விவேக்கிட்ட பேசி இருக்கேன். சின்னம்மாவை எப்படியாவது எடப்பாடியோடு பேச வைக்க முயற்சி செஞ்சிட்டு இருக்கேன். அது சீக்கிரமே நடந்துடும். அதற்கான ஏற்பாடுகளும் நடந்துட்டு இருக்கு!’ என்று தினகரன் சொன்னதாக சொல்கிறார்கள்.” என்று முடிந்த அந்த மெசேஜுக்கு ‘செண்ட்’ கொடுத்தது வாட்ஸ் அப்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், ‘இதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்று கேட்டது. பதிலை அடுத்த மெசேஜ்ஜில் போட்டது வாட்ஸ் அப்.

”எடப்பாடியை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்தவர் சசிகலாதான். அவர் ஜெயிலுக்குப் போன பிறகு இதுவரை எடப்பாடி பழனிசாமி சென்று பார்க்கவில்லை. ஆனாலும், பழனிசாமிக்கு உள்ளுக்குள் சசிகலா மீதான மரியாதை குறையவில்லை என்கிறார்கள். ‘என்னை முதல்வராக உட்கார வெச்சுப் பார்க்கணும்னு அம்மா கூட நினைச்சது இல்லை. எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தது சின்னம்மா. அவங்களுக்கு என் உசிரு உள்ள வரைக்கும் நன்றியோட இருப்பேன்’ என முதல்வரான புதுசுல எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். இப்போது சசிகலா அவரோடு பேசினால், எல்லாம் கூடி வரும் என தினகரன் கணக்குப் போடுகிறார். பழனிசாமி என்ன செய்யப் போகிறார் என்பது அடுத்தடுத்து வரும் நாட்களில் தெரிந்துவிடும். “ என்ற பதில் மெசேஜ் அனுப்பிவிட்டு, ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *