�டிஜிட்டல் திண்ணை: சர்காருக்கு எதிராகப் போராட்டம் வேண்டாம் – அதிமுக முடிவு!

public

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் போஸ்ட் தயாராக இருந்தது. லொக்கேஷன் கிரீன்வேஸ் சாலை காட்டியது.

“சர்கார் பட சர்ச்சை தொடர்ந்தபடியே இருக்கிறது. அமைச்சர்கள் வரிசையாக சர்கார் படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் இன்று காலை ஒரு அவசரக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கியப் பேச்சாளர்கள் மட்டும் பங்கேற்றார்களாம்.

அவர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, சர்கார் படத்தை யாரெல்லாம் பார்த்தீங்கன்னு தெரியல. பார்க்காதவங்க உடனடியா பார்த்துடுங்க. அந்தப் படத்தில் அதிகமாக விமர்சனம் செய்திருப்பது நம்ம கட்சியைத்தான். குறிப்பாக நம் புரட்சித் தலைவி அம்மாவை சில இடங்களில் கேவலப்படுத்தி இருக்காங்க. இதுக்கு தக்க பதிலடி நாம கொடுக்கணும். எடப்பாடி அண்ணனோடு நான் பேசியிருக்கேன்.

படம் ஓடும் தியேட்டருக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்றுதான் நாங்க முதலில் யோசிச்சோம். நம்ம ஆட்சியில் நாமே ஆர்ப்பாட்டம் நடத்தினால் அது சரியாக இருக்காது. அதனால், முக்கியமான நகரங்களில் மட்டும் படம் ஓடும் தியேட்டருக்கு எதிரிலும், இயக்குனர் முருகதாஸ் வீடு, அலுவலகம் எதிரிலும் அதேபோல படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் வீடு, மற்றும் சன் டிவி அலுவலகம் எதிரிலும் மேடை போட்டு கண்டன பொதுக்கூட்டம் நடத்தலாம் என முடிவெடுத்தோம். உங்களைப் போன்ற முக்கியப் பேச்சாளர்கள்தான் அந்தக் கண்டனப் பொதுக்கூட்டத்துக்குத் தலைமை ஏற்று நடத்த வேண்டும். அமைச்சர்கள் யாரும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை. பேச்சாளர்களே முன்னின்று அந்தக் கூட்டங்களை தமிழகம் முழுக்க நடத்தி முடிக்க வேண்டும்.

யாரு எந்த இடங்களில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பது என்ற பட்டியலை இன்று மாலைக்குள் தயாரித்துவிடுகிறோம். கூட்டத்துக்கு எந்த இடையூறும் இருக்காது. போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்படும். அதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துடுவோம். இதன் பின்ணனியில் திமுகவின் சதி இருக்கிறது என்பதை மேடை போட்டு நீங்க சொல்ல வேண்டும்..’ என்று சொன்னாராம்.

அமைச்சர் தங்கமணி பேசியதற்குப் பேச்சாளர்கள் எல்லோரும் தலையாட்ட, நட்சத்திர பேச்சாளரான இயக்குனர் பி.சி.அன்பழகன் மட்டும் எழுந்து நின்று மாற்றுக் கருத்தை சொல்லியிருக்கிறார். ‘படத்துக்கு கருத்து சொல்வது என்பது வேற… நீங்க சொல்றது வேற. படம் எடுக்கிறது அவங்க உரிமை. இதுல திமுக சதி இருக்கு என்பதை ஏத்துக்க முடியாது. இயக்குனரும் நடிகரும் முடிவு பண்ணி எடுத்து இருக்காங்க. அதுவும் இல்லாமல் நாம திமுகவை எதிர்க்கிறோம் என்பதை விட, இந்த இடத்துல சன் டிவியை எதிர்க்கிறோம் என்பதுதான் கவனிக்கப்படும்.

சன் டிவியைப் பொருத்தவரை திமுக ஆதரவு சேனலாக இருந்தாலும் இதுவரைக்கும், நம்ம செய்திகளையும் போட்டுகிட்டுதான் இருக்காங்க. இன்னும் சொல்லப்போனால், நம்ம அமைச்சர்கள் தொடங்கி நம்ம செய்தித் தொடர்பாளர்கள் வரை பலருடைய பேட்டியும் தொடர்ந்து அந்த டிவியில் வந்துட்டுதான் இருக்கு. சன் டிவி ஆபீஸ் முன்னாடியும், கலாநிதி மாறன் வீட்டுக்கு முன்னாடியும் மேடை போட்டு திட்டுவதை எல்லாம் மக்கள் ரசிக்க மாட்டாங்க. படம் என்பதை தாண்டி, சன் டிவியை நாம எதிர்க்க வேண்டிய அவசியமே இந்த நேரத்துல இல்லை.

நாம கண்டுக்காம விட்டால், சர்கார் படம் இந்த வாரத்தோடு முடிஞ்சிப் போயிடும். இதுக்கு நீங்க மேடை போட்டு ஊரு ஊரா திட்ட ஆரம்பிச்சா, பார்க்காத ஆளுங்ககூட போய் பார்ப்பாங்க. இதனால சர்கார் படத்துக்கு நாமே விளம்பரம் தேடித் தர மாதிரியும் ஆகிடும். சன் டிவியை நாம நேரடியா பகைச்சுக்குற மாதிரியும் ஆகிடும். எல்லாமே நமக்குதான் மைனஸ்” என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு அமைச்சர் தங்கமணியோ, “முதல்வர்கிட்ட பேசிட்டுதான் இந்த முடிவை எடுத்தோம்” என்று சொன்னாராம்.

“நான் சொன்ன கருத்தை முதல்வர்கிட்ட சொல்லுங்க… இல்லைன்னா நானே சொல்றேன். தப்பான ஒரு விஷயத்தை நாங்க எப்படி செய்ய முடியும்?” என்று கேட்டிருக்கிறார் பேச்சாளர் அன்பழகன்.

உடனடியாக அமைச்சர் தங்கமணி, முதல்வரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அன்பழகன் பேசியதை முதல்வரிடம் சொல்லி இருக்கிறார். அதைக் கேட்ட எடப்பாடி பழனிசாமி ஏதோ சொல்ல… பதிலுக்கு தங்கமணியும் ஏதோ சொன்னாராம்.

பிறகு பேச்சாளர்களிடம் பேசிய தங்கமணி, “நீங்க சொன்ன விஷயத்தை முதல்வர் ஏத்துகிட்டாரு. சர்கார் படத்துக்கு எதிராக எங்கேயும் கூட்டம் நடத்த வேண்டாம் எனவும் சொல்லிட்டாரு… ஆனால் நீங்க எல்லோருமே படத்தைப் பார்த்துட்டு உங்க கருத்தை எனக்குச் சொல்லுங்க..’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

அதற்கு லைக் போட்டதுடன், அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *