�டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் அதிமுகவின் அறிக்கை ஒன்றை அனுப்பிவிட்டு, அதன் பிறகு மெசேஜை டைப் செய்ய ஆரம்பித்தது.

“அதிமுக அமைச்சர்கள் பலரின் பிரஸ்மீட்டுகள், பேட்டிகள்தான் இரண்டு வருடங்களாகவே தமிழக மக்களுக்கு பெரும் பொழுதுபோக்காக இருந்தது. குறிப்பாக திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் போன்ற அமைச்சர்கள் ஊடகங்களில் அளிக்கும் பேட்டிகள்தான் மீம்ஸ் உற்பத்திக்கு அடிப்படையாகவே இருந்தன.

இந்த நிலையில் நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊடகத்தில் பேசுவதற்கு அமைச்சர்களுக்கும், அதிமுகவினருக்கும் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு என்பதை விட இனி மறு அறிவிப்பு வரும் வரை யாரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்றே உத்தரவிட்டப்பட்டது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீரும் இதையே அந்தக் கூட்டத்தில் பேசினார்கள்.

அண்மையில் பாஜக கூட்டணியால்தான் தோற்றோம் என்று அமைச்ச சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் வெளிப்படையாகப் பேசியது பாஜக தலைவர்களிடம் கடுமையான கோபத்தை உண்டாக்கியது. இதுகுறித்து எடப்பாடியிடமே சில பாஜக பிரமுகர்கள் பேசி, ‘தேர்தல்ல தோத்துட்டோம்.இனி இப்படி பேட்டி கொடுக்கறதால ஜெயிச்சுட முடியுமா? உங்க அமைச்சர்களை கண்டிச்சு வையுங்க’ என்று சொல்லியிருக்கிறார்கள். இது கூட இந்த வாய்ப்பூட்டுக்கு ஒரு காரணம் என்று அதிமுக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.இந்த கோபத்தில்தான் சி.வி. சண்முகம் கூட்டத்துக்கே செல்லவில்லை என்றும் சொல்கிறார்கள்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘நம்ம கட்சிக்காக டிவியில பேசுறவங்க எல்லாம் நம்ம கட்சிக்காக பேசுறாங்களா இல்ல நம்ம கட்சியை காலி பண்றதுக்காக பேசுறாங்களானே தெரியலை. நம்ம கட்சியை காலி பண்ண இவங்களே போதும்’ என்று சொல்லியிருக்கிறார். இந்தக் கோபத்துக்கும் பெரிய பின்னணி இருக்கிறது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் அரசியல் விவாதங்களை சில மாதங்களாகவே தொடர்ந்து பார்த்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படிப் பார்க்கும்போது அதிமுக சார்பில் அங்கே பங்கேற்கும் பலர் தொடர்ந்து சொதப்பி வருவதைப் பார்த்து தன் பக்கத்தில் இருப்பவர்களிடம் அந்த வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட பங்கேற்பாளர்களுக்கே முதல்வரின் ஆபீசில் இருந்து போன் போட்டு, ‘நீங்க ஏன் அந்த கேள்விக்கு பதில் சொல்லலை. இதுக்கு ஏன் சரியாக விளக்கம் கொடுக்கல. முதல்வர் கேட்கச் சொன்னாரு’ என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள்.

அதிமுக சார்பில் விவாதங்களில் பங்கேற்று வரும் நிர்மலா பெரியசாமி சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன். ‘நாங்க சி.எம். ஆபீஸ்லேர்ந்து பேசுறோம். இன்னிக்கு நடந்த விவாதத்துல டிடிவி தினகரன் கட்சிக்காரர் கேட்ட கேள்விக்கு நீங்க ஏன் பதில் சொல்லாம அமைதியா இருந்துட்டீங்க?’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு நிர்மலா பெரியசாமி, ‘சில விஷயங்கள் என் மனசாட்சிக்கு விரோதமா இருந்தா அமைதியா இருந்துடுவேன்’ என்று சொல்லியிருக்கிறார். இது அப்படியே முதல்வருக்கு சொல்லப்பட்டுவிட்டது.

சமீபத்தில் அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்த சிவசங்கரிக்கு செய்தித் தொடர்பாளர் பதவி அளிக்கப்பட்டது. அவரும் அதிமுக சார்பாக விவாதங்களில் பங்கெடுத்துவந்தார். அவர் ஒரு விவாதத்தில் பழக்க தோஷத்தில் மக்கள் செல்வர் டிடிவி என்று சொல்லிவிட்டார். இதைப் பார்த்துவிட்ட எடப்பாடி உடனே, ‘அங்கேர்ந்து இங்க வந்து பதவியும் வாங்கிட்டு பேசறதைப் பாருங்க. தினகரனே இப்படி இங்க ஆளை அனுப்பி பேசச் சொல்லுவாரு போலிருக்கு’ என்று டென்ஷன் ஆகியிருக்கிறார். இப்படி அதிமுகவினர் பங்கேற்கும் பல விவாதங்களைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போய்தான் எடப்பாடி இந்த முடிவுக்கே வந்திருக்கிறார்.

ஆலோசனைக் கூட்டத்துக்கு சில நாட்கள் முன்பே அதிமுக சார்பில் டிவி விவாதங்களில் பங்கேற்கும் இந்திய தேசிய லீக் கட்சியைச் சேர்ந்த ஜவஹர் அலியை முதல்வர் எடப்பாடி தன் வீட்டுக்கு அழைத்திருக்கிறார். அப்போது அவரிடம், ‘இனிமே நீங்க அதிமுக சார்பா டிவி விவாதங்கள்ல பேச வேணாம்’ என்று சொல்லியிருக்கிறார். உடனே ஜவஹர் அலி பதறி, ‘நான் ஏதும் தப்பா பேசிட்டேனா?’ எனக் கேட்க, ‘நீங்க இல்லை. ஆனா நம்ம கட்சிக்காக பேசற பல பேரு தேவையில்லாம சர்ச்சைகளை உருவாக்குறாங்க. அவங்களால நம்ம கட்சிக்கே நல்லது நடக்காது போலிருக்கு. அதனால யாரையுமே டிவியில பேச வேணாம்னு சொல்லலாம்னு இருக்கேன். எல்லாரையும் கூப்பிட்டு சொல்ல முடியாதுல்ல., அதான் உங்களைக் கூப்பிட்டு சொல்றேன்’ என கூறியிருக்கிறார். இந்தப் பின்னணியில்தான் ஊடகங்களில் அதிமுகவினரோ, அதிமுக சார்பாகவோ யாரும் பேச வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது அதிமுக.

இதுபற்றி அதிமுக சீனியர் நிர்வாகிகள் சிலர், ‘முதலமைச்சரு ஃபைல் பார்க்குறாரா, இல்லை டிவி மட்டுமே பாத்துக்கிட்டிருக்காரானு தெரியலை. ஏற்கனவே இதுபோல பல தடவை அடக்கிப் பார்த்தாச்சு. ஆனா யாரும் அடங்கின மாதிரி தெரியலை. முதல்வர் டிவி பார்க்குறதை குறைச்சுக்கிட்டு பெண்டிங்ல இருக்கிற ஃபைலை பார்த்து க்ளியர் பண்ணா இன்னும் நல்லா இருக்கும்’ என்று சொல்கின்றனர்” என முடிந்த வாட்ஸ் அப் மெசேஜை செண்ட் செய்துவிட்டு ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.

**

மேலும் படிக்க

**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

**[அதிமுகவின் கொங்கு கோட்டை உடைந்தது: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/13/17)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share