அலுவலகத்தில் வைஃபை ஆனில் இருந்தது. வாட்ஸ் அப்பில் இருந்து மெசேஜ்கள் அடுத்தடுத்து வந்து விழுந்தது. முதல் மெசேஜ் கோட்டையில் இருந்து வந்திருந்தது.
“எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடிகள் அதிகமாகிக் கொண்டே போகிறது. சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் தலைமையில் ஒரு டீம் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். நேற்று தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 8 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தலைமைச் செயலகத்துக்கு வந்து முதல்வரைச் சந்தித்தார்கள். தொகுதி பிரச்சினைப் பற்றிப் பேசத்தான் முதல்வரைச் சந்திக்க வந்ததாக அவர்கள் சொன்னாலும், தங்களது பிரச்னை பற்றித்தான் அதிகம் பேசி இருக்கிறார்கள். எட்டு பேர் நேற்று வந்தாலும், அதில் அதிகம் பேசியது செந்தில் பாலாஜிதான். ‘எங்கள் பக்கம் எட்டு பேரு மட்டுமல்ல… இன்னும் 10 பேரு இருக்காங்க. அதை மனதில் வைத்து எதை செய்யுறதாக இருந்தாலும் செய்யுங்க. அம்மாவோட குட்புக்லதான் நாங்க எல்லோரும் இருந்தோம். யார் யாரோ எதையோ போட்டுக் கொடுத்து அம்மா எங்களை அமைச்சரவையில் இருந்து தூக்கிட்டாங்க. எங்களுக்கு மறுபடியும் நீங்க அமைச்சரவையில் இடம் கொடுக்கணும். நாங்களும் மக்களுக்கு பணியாற்றத் தயாராக இருக்கிறோம்…’ என்று செந்தில் பாலாஜி வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.
‘உங்களுக்கு என்னத்தேவை என்பதை நீங்கச் சொன்னதாக வேலுமணி சொன்னாரு. பேசிட்டு இருக்கோம். சீக்கிரமே எல்லாம் நல்லதா நடக்கும். அவசரப்பட வேண்டாம். நமக்குள்ள எந்தக் குழப்பமும் வந்துடக் கூடாது. அப்படி வந்துட்டா அது மத்தவங்களுக்கு கொண்டாட்டமாக போயிடும்…’ என்று முதல்வர் பழனிசாமி பணிவுடன் சொல்லி அனுப்பியிருக்கிறார். அதைத் தொடர்ந்துதான் இன்று மீண்டும் 10 எம்.எல்.ஏ.-க்கள் தலைமைச் செயலகத்துக்கு சென்று முதல்வரைச் சந்தித்தார்கள். வழக்கம்போல, தொகுதி பிரச்னை பற்றி பேச வந்திருப்பதாக அவர்கள் சொன்னார்கள். நேற்று செந்தில் பாலாஜி டீம் வந்துவிட்டுப் போனதன் தொடர்ச்சியாகத்தான் இன்று 10 எம்.எல்.ஏ.-க்கள் முதல்வரை சந்தித்தார்கள் என்றும் சொல்லி வருகிறார்கள். அதாவது, பழனிசாமியை மிரட்டிப் பார்ப்பதற்காகத்தான் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.-க்களை அனுப்பி செந்தில் பாலாஜி ஆழம் பார்ப்பதாகவும் சொல்கிறார்கள்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
“பழனிசாமி என்ன நினைக்கிறார்?” என்ற கேள்வியை ஃபேஸ்புக் கேட்க… பதிலை அடுத்த மெசேஜ்ஜில் போட்டது வாட்ஸ் அப். “பழனிசாமிக்கு பெரும் தலைவலியாகத்தான் இருக்கிறது. எப்படி தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வது என்ற அவரது போராட்டமே பெருசாக இருக்கிறது. பன்னீர் டீம் கொடுக்கும் குடைச்சல் ஒருபக்கம். தினகரன் ஆதரவாளர்கள் கொடுக்கும் டார்ச்சர் ஒருபக்கம்… அவரது டீமில் இருந்து கொண்டே சிலர் கொடுக்கும் குடைச்சல் ஒருபக்கம் என மூன்று பக்கமும் சிக்கித் தவிக்கிறார். இது சம்பந்தமாக செங்கோட்டையன், வேலுமணி ஆகியோரிடம் பழனிசாமி பேசினாராம். ‘ஒவ்வொருத்தரும் எனக்கு இவ்வளவு பேரு இருக்கிறார்கள் என்று மிரட்டுறதால அவங்களை அமைச்சர் ஆக்கிட முடியுமா? செந்தில் பாலாஜியும், வெங்கடாசலமும் அம்மாவே அமைச்சரவையில் இருந்து நீக்கியவர்கள்தான். அம்மா இருந்த வரைக்கும் அவங்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவே இல்லை. இப்போ ஏதோ அவங்கதான் கட்சி என்பதுபோல இங்கே வந்து மிரட்டுறாங்க. இதுக்கெல்லாம் பயந்துட கூடாது. சின்னம்மாவை எதிர்த்து ஓ.பி.எஸ். போனபோது அவரோடு எவ்வளவு பேரு போனார்கள்? இப்போ இவர்கள் நம்மை எதிர்க்கிறது அவர்கள் சுயலாபத்துக்காகத்தான். அவங்களை நம்பி யாரும் போக மாட்டார்கள். நாம அதுக்கெல்லாம் பயப்படத் தேவையில்லை…’ என்று சொல்லி இருக்கிறார்.
‘எப்படி இருந்தாலும் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக்கணும்’ என்று வேலுமணி சொல்ல… ‘எம்.எல்.ஏ.-க்களுடன் நானும் பேசுறேன். பார்த்துக்கலாம்’ என செங்கோட்டையனும் நம்பிக்கையோடு சொல்லியிருக்கிறார்.” என்பதுதான் அந்த பதில். அதையும் அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் டைப்பிங் செய்ய ஆரம்பித்தது பேஸ்புக்.
“அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் எல்லோரும் பரப்பன அக்ரஹாரா சென்றதாகவும் அங்கே சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்ததாகவும் தகவல் பரவி வருகிறது. அதில் உண்மை இல்லையாம். செந்தில் பாலாஜியும், தோப்பு வெங்கடாசலமும் மட்டும் பெங்களூரு வருவதற்கு அனுமதி கேட்டார்களாம். ‘சின்னம்மா இப்போது யாரையும் வர வேண்டாமென்று சொல்லிட்டாங்க. தேவைப்பட்டா அவங்களே கூப்பிடுவாங்க…’ என்று தகவல் வந்திருக்கிறது. பரப்பன அக்ரஹாராவுக்கு செந்தில் பாலாஜி வருவதில் இளவரசி குடும்பத்துக்கு விருப்பம் இல்லையாம். அதனால்தான் இளவரசியின் மகன் விவேக் அப்படி சொன்னதாக சொல்கிறார்கள்” என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்து சைன் அவுட் ஆனது.�,”