�டிஜிட்டல் திண்ணை: ‘அம்மாவின் ஆன்மா பார்த்துக்கொண்டிருக்கிறது!’ – புதிய பாதையில் சசிகலா!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். “ஸ்டாலின் செயல் தலைவர் ஆகிவிட்டார். கருணாநிதி பொதுக்குழுவுக்கு வரவில்லை… நேற்று, டிஜிட்டல் திண்ணையில் சொன்னது அப்படியே இன்று நடந்திருக்கிறது!” – என்று, ஃபேஸ்புக்கிற்கு வாழ்த்து அனுப்பியிருந்தது வாட்ஸ் அப்.

தொடர்ந்து, “அவ்வைசண்முகம் சாலையில் இருக்கிறேன். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா வந்துவிட்டார். புதிய தகவல்களை அனுப்புகிறேன். காத்திருக்கவும்” என்ற மெசேஜ் அடுத்து வந்து விழுந்தது.

இதைப் பதிவிடும் நேரத்தில்தான் வாட்ஸ்அப்பில் இருந்து அடுத்தடுத்த மெசேஜ்கள் வந்து விழுந்தன. “பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க திட்டமிட்டார் சசிகலா. கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளை மாவட்டவாரியாகச் சந்திக்க நாளும் குறித்தார். இன்று காலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளையும், மாலையில் திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்தார். கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அந்தந்த மாவட்டச் செயலாளர்கள்தான், கட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில் நின்று ஒவ்வொருவரின் அடையாளத்தையும் சரிபார்த்து உள்ளே அனுப்பினார்கள். சிறப்பு விருந்தினர்கள் என யாருக்கும் அழைப்பு இல்லை. காலையில் அறிவாலயத்தில் ஸ்டாலினை செயல் தலைவராக தேர்வுசெய்யப்பட்ட அதே நேரத்தில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளை உள்ளே அனுப்பும் வேலையை மாவட்டச் செயலாளர்கள் செய்துகொண்டிருந்தனர். ஸ்டாலின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை சசிகலா கார்டனில் டி.வி.யில் பார்த்திருக்கிறார். அதன் பிறகுதான் கார்டனிலிருந்து கிளம்பியிருக்கிறார். ஜெயலலிதா ஸ்டைலில் பச்சைக் கலர் சேலையில்தான் கட்சி அலுவலகத்துக்கு வந்தார் சசிகலா. ‘சின்னம்மா வாழ்க…’ என்ற கோஷம், அந்தச் சாலையில் எங்கே திரும்பினாலும் கேட்டது.” என்று முடிந்தது ஒரு மெசேஜ்.

அடுத்த மெசேஜ் தொடர்ந்து வந்து விழுந்தது.

‘‘கூட்ட அரங்குக்குள் சசிகலா வந்ததும் நிர்வாகிகள் அனைவரும் எழுந்து நின்றனர். ஜெயலலிதா படத்தைப் பார்த்து வணங்கிவிட்டு, நிர்வாகிகளை பார்த்துக் கும்பிட்டுவிட்டு அமர்ந்தார் சசிகலா. அதன்பிறகு பேச எழுந்தவர், இன்றும் கையோடு எழுதிக் கொண்டுவந்த உரையைத்தான் படித்தார். ‘கட்சியை பலப்படுத்த நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அம்மா, நம் எல்லோரையும் வழிநடத்தினார். நாம், அவர் வழியைப் பின்பற்றி நடக்க வேண்டும். அம்மா இருந்தபோது எப்படி கட்டுப்பாட்டுடன் எல்லோரும் இருந்தீர்களோ, அதே கட்டுப்பாடு எப்போதும் அவசியம். நான் சில புதிய விஷயங்களை உங்களுக்கு சொல்லப் போகிறேன். இனி, அடிக்கடி உங்களையெல்லாம் சந்திக்கப் போகிறேன். எந்த நேரத்திலும் நீங்கள் என்னைத் தொடர்புகொள்ளலாம். புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும் நீங்கள் எல்லோரும் அக்கறை காட்ட வேண்டும். அப்போதுதான் கட்சி வளரும். நான் எல்லா மாவட்டங்களுக்குமே வருவதற்கு திட்டமிட்டிருக்கிறேன். அதைப்பற்றி விரைவில் சொல்கிறேன். கட்சிக்குள் இருக்கும் அடிமட்டத் தொண்டனுக்கும் மரியாதை கொடுத்துப் பழகுங்கள். நாம் செயல்படுவதையெல்லாம் அம்மாவின் ஆன்மா பார்த்துக் கொண்டுதான் இருக்கும். அம்மா நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்துடன் ஒவ்வொருவரும் செயல்படுங்கள்.’ என்று கலங்கியபடியே பேசியிருக்கிறார். பேசி முடித்தபிறகு, நிர்வாகிகளை அழைத்து போட்டோவும் எடுத்துக் கொண்டாராம் சசிகலா.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

இரண்டு நிமிட இடைவெளிக்குப் பிறகு இன்னொரு மெசேஜும் வந்தது. “எல்லா மாவட்ட நிர்வாகிகளிடமும் இதையேதான் சசிகலா இன்று பேசியிருக்கிறார். திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து வந்த நிர்வாகி ஒருவர் போட்டோ எடுத்தபோது, ‘சின்னம்மா… எங்க பகுதியில நிறையப் பேரு அதிருப்தியில இருக்காங்க. அவங்களையெல்லாம் சரி செய்யணும்மா…’ என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்லியிருக்கிறார். ‘எல்லாம் சரி செய்யப்படும். உங்களுக்கு என்ன சொல்லணும்னு தோணினாலும் உடனே எனக்கு எழுதி அனுப்புங்க. எல்லாவற்றையும் நான் படிப்பேன். நடவடிக்கையும் எடுப்பேன்.’ என்று நம்பிக்கையோடு சொன்னாராம் சசிகலா. இன்று வந்த நிர்வாகிகள் எல்லோருமே உற்சாகத்துடன்தான் கிளம்பியிருக்கிறார்கள்!” – மெசேஜ் படித்து முடித்தபோது ஆஃப் லைனில் போயிருந்தது வாட்ஸ் அப்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share