�சிறப்புக் கட்டுரை: யாதும் ஊரே யாவரும் கேளிர் – தமிழ் வளர்ச்சிக்கான சொல்லும் செயலும்!

Published On:

| By Balaji

கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என கணியன் பூங்குன்றனார் பாடிய புறநானூற்றுத் தமிழ்ப் பாடலை மேற்கோள் காட்டி, இந்தியப் பிரதமர் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொது அவையில் பேசும்போது உள்ளபடியே தமிழர்களுக்கு மகிழ்ச்சி உண்டாவது இயல்பானதே. டெலி புராம்டர் பார்த்து, இந்தியில் பேசினாலும், தமிழ் வார்த்தைகளைக் கேட்கும்போது உச்சி குளிர்கிறது. மூத்த மொழி என்கிறார்கள், பெருமை வாய்ந்தது என்று பேசுகிறார்கள். அத்தனையும் பேச்சளவில்தான் இருக்கிறதே தவிர, மத்திய அரசின் திட்டங்களில் ஏட்டளவில்கூட வரவில்லை. செயல்பாட்டில் தமிழுக்கான, தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களில்லை. நிதி ஒதுக்கீடுகள் கிடையாது.

**பெருமைமிகு தாய்மொழி **

திருக்குறள் தொடங்கி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, புறநானூறு, அகநானூறு, முக்கூடற்பள்ளு என சங்க காலம் தொட்டு இன்றளவிலும் வாழ்க்கை முறையை, நாகரிகத்தை, பண்பாட்டை, வீரத்தைப் பறைசாற்றுகிறது தமிழர்களின் படைப்புகள்.

மொழியுணர்ச்சியும், கலையுணர்ச்சியும் செழிந்தோங்கிய இருபதாம் நூற்றாண்டுகளில் அரசியல், இதழியல், இலக்கியம், சமயம் அனைத்திலும் தமிழ் தழைத்தோங்கியது. உரைநடை இலக்கியம் புதிய பரிணாமம் பெற்றது.

இது 21ஆம் நூற்றாண்டின் தொடக்கம், அறிவியல், கணினி, பேச்சு, எழுத்து அத்தனையும் தாண்டி இணையத் தமிழ் புகுந்து விளையாடுகிறது. அந்தச் சூழ்நிலையிலும் பகுத்தறிவு, பொருளாதாரம், அரசியல் போன்றவற்றை தமிழ் மொழியால் வளர்த்த தமிழ்நாட்டில் மொழிக்கான அச்சுறுத்தல் உருவாகிவிட்டதோ என்ற அச்சம், இப்போது எழத்தொடங்கியிருக்கிறது.

மன்னர் காலத்திலும், அந்நியர்களின் படையெடுப்புகளிலும், ஆங்கிலேயரின் நீண்டகால ஆட்சியிலும் தமிழ்நாட்டின் தாய்மொழியாம் தமிழுக்கு இழுக்கு ஏற்பட்டதாகப் பதிவுகள் இல்லை. மாறாக கால்டுவெலும், ஜி.யூ.போப்பும் தமிழுக்காகத் தொண்டாற்றியதாக அவர்களின் எழுத்துகளும், பதிவுகளும் வரலாற்றைக் கற்பிக்கின்றன. ஆதாரங்களாக நம்முன் நிற்கின்றன. ஆனால், இன்றைய காலம் எப்படி இருக்கிறது.

**பல்கலையில் ஊடுருவும் பாடம்**

உலகப் பொதுமறையாம் திருக்குறள் ஒட்டுமொத்த மக்களுக்கும் அறத்தைக் கற்றுக்கொடுத்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று வரலாற்றிலும் இடம்பிடித்தார் வள்ளுவர். உலகில் இதுபோன்றதொரு நூல் எந்த மொழியிலும் கிடையாது.

அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்

குறுகத் தரித்த குறள்

என்று ஒளவையார் திருக்குறளின் புகழைப் போற்றுகிறார். அத்தகைய பெருமைக்குரிய தமிழ்நாட்டில், தமிழுக்காகச் செயலாற்றிய அறிஞர் அண்ணாவின் பெயர்தாங்கிய பல்கலைக்கழகத்தில், தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களே நீங்கள் பகவத்கீதை படியுங்கள் என்று சொன்னால், அதனை வெறும் நகைப்புடன் கடந்து செல்வதா? இல்லை தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் வந்துள்ள ஆபத்து என்று உணர்ந்து கொள்வதா?

**போட்டித்தேர்வுகளின் மொழிப்புறக்கணிப்பு**

அஞ்சல்துறை தேர்வுகள் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு, தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் ரத்து செய்யப்படுகிறது. மத்திய அரசுப் பணிக்கான தேர்வும், தொடர்வண்டி, வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் நடத்தும் தேர்விலும் மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்துகின்ற நீதிபதிகள் தேர்வில் வேறு மாநிலத்தவர்கள் பங்குபெறும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

மாநிலப் பணிக்கான தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டு, அனைவருக்கும் தமிழ்நாட்டில் பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்துகிறார்கள். ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி இரண்டின் (Group II), முதல்நிலைத் தேர்வில் தமிழ் மொழித்தாள் இல்லை. அதில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வில் கலந்து கொள்ளும்போது மொழிபெயர்ப்பு இருக்கிறதே, அதற்குத் தமிழ் தெரிய வேண்டுமல்லவா என இம்சை அரசன் வடிவேலு பாணியில் விளக்கம் கொடுக்கிறார்கள். தமிழைப் படித்துப் புரிந்துகொண்டு, பகுதி ‘அ’ வில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து, குறைந்தபட்ச மதிப்பெண் 25 எடுத்தால் போதும். அடுத்து இருக்கக்கூடிய, சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்க குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் என்று பகுதி ’ஆ’ வில் ஆங்கிலத்தில் பதில் அளித்துவிட்டு தேர்ச்சி பெற்று விடலாம்.

அதாவது முந்தைய தேர்வு முறையில் 100 கேள்விகள், 150 மதிப்பெண் தமிழ் புலமை, இலக்கணம், இலக்கியம் தெரிந்தால் ஒரு மாணவர் எளிதாகப் போட்டித்தேர்வில் வெற்றிபெற முடியும். இப்போதைய தேர்வில் கூகுள் போன்று மொழிபெயர்க்கும் திறன் இருந்தால், அவர் தமிழ் தெரிந்தவராகத் தமிழ்நாட்டில் வேலைக்குச் சேர்ந்து விட முடியும். தொடக்கக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை தமிழில் பயின்ற கிராமப்புற மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் அறிவிப்புதான் இது. ஏனென்றால் முதல்நிலைத் (Prelims) தேர்விலேயே அவர்கள் வடிகட்டப்படுவார்கள், முதன்மைத் (Mains) தேர்வு என்பது கனவாகிவிடும், பின்னர் நேர்முகத்தேர்வு என்பது கற்பனைதான். கடந்த 2016 வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற முறை நீக்கப்பட்டதையும், 07.11.2016 அன்று வெளியிடப்பட்ட, வெளிமாநிலத்தவர்கள் தமிழக அரசுப் பணிகளில் சேர முடியும் என்ற அரசாணையையும், முன்னோட்டமாக எடுத்துக்கொண்டு, இப்போதைய தேர்வு முறைகளின் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்தால் ஏதோ மிகப்பெரிய திட்டம் அரங்கேறுகிறதோ என்ற ஐயம் பலமாக எழத்தான் செய்யும்.

**வடிகட்டும் பொதுத் தேர்வுகள்**

ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு, எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு. 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு ஏன்? இதற்கு முன்பு முழு ஆண்டுத் தேர்வு என்று இருந்ததே, தேர்ச்சியில்லை என்று மீண்டும் அதே வகுப்பில் பயின்றார்களே என்ன தவறென்று இதற்கும் வக்காலத்து வாங்குகின்றனர்.

தமிழ்நாட்டின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. இடைநிற்றல் குறைந்துள்ளது. குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் வெற்றி பெற்றுள்ளோம். எழுதப்படிக்கத் தெரிந்தால், கற்றவர்கள் என்ற நிலை மாறி, அறிவொளி இயக்கம், முதியோர் கல்வி, அனைவருக்கும் கல்வி, எழுத்தறிவு இயக்கம், முழுத் தேர்ச்சி கல்வியாண்டு, வாழ்ந்து காட்டுவோம் திட்டங்கள் மூலம் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு என்றவுடன் பெற்றோர்கள் அந்தக் குழந்தைகளை, என்ன பாடுப் படுத்துவார்கள் எண்ணிப் பார்த்தோமா? கல்வி வியாபாரமாகிவிட்ட உலகில் பொதுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி என்று விலை அதிகரிக்குமே, நினைத்துப் பார்த்தோமா? அடுத்த வகுப்புக்குச் செல்ல உனக்குத் தகுதியில்லை என்று ஒரு குழந்தையைப் புறக்கணிக்கும்போது, அந்தப் பிஞ்சு மனது எந்த நிலையை அடையும், வாழ்வில் எப்படிச் சாதிக்கும் ஆலோசனை செய்தோமா? எதுவுமே இல்லாமல் வடிகட்ட நினைக்கிறோம். குழந்தை தொழிலாளர் முறையை, குலத்தொழில் முறையை மறைமுகமாக ஊக்கப்படுத்தப் போகிறோம்.

**படைப்பாற்றலைத் தடுக்கும் மொழித்தாள் குறைப்பு**

பத்தாம் வகுப்பில் மொழிப் பாடங்கள் இரண்டு தாள்கள் கிடையாது. ஒரே தாள்தான் கற்பிக்கப்படும். இது அடுத்த குண்டு. மொழிப் பாடங்களை இலக்கியம், இலக்கணம், உரைநடை, கட்டுரை என்று பிரித்துப் பார்த்து, புதிய படைப்புகளை உருவாக்கி, சிந்தனைத் திறனை மேம்படுத்துவதற்குப் பதிலாக ஒரே பாடமாக்கியது. தாய்மொழியின் வளர்ச்சியா, தமிழ்மொழி மீதான பற்றா என்பதை இந்தத் திட்டங்களைக் கொண்டுவந்தவர்கள்தான் விளக்க வேண்டும்.

**விருப்பத்துடன் நுழையும் இந்தி மொழி**

பள்ளிக்குழந்தைகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் கூடுதலாக ஒரு மொழிப்பாடம் கொண்டு வரப்படுகிறதாம். அது திணிப்பு அல்ல; விருப்பம் என்று சொன்னாலும்கூட, எட்டு வயதுக் குழந்தை மூன்று மொழிகள் கற்க வேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது. அம்மொழி வேலைவாய்ப்பை உறுதி செய்கிறதா? அறிவுத்திறனை அதிகரிக்குமா? பொருளாதார மேம்பாட்டிற்கு உதவியாக இருக்குமா? உலகம் சுற்றி வரலாமா? எதற்கும் விடையில்லை. பிறகு ஏன் சின்னஞ்சிறு குழந்தைகள் திணிக்கப்பட்டோ, விருப்பப்பட்டோ இந்தி என்ற மொழியைக் கற்க வேண்டும் என்று தெரியவில்லை.

தனது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி, பிறர் கருத்தை அறிந்துகொள்ள தாய்மொழி போதும். கூடுதலாக ஒரு மொழி, உலகில் பிறரைத் தொடர்புகொள்ள. அதுதான் தற்போது வரை தமிழக அரசின் இருமொழிக் கொள்கை. அப்படியிருக்கும்போது, இந்தியைப் படிக்கச் சொல்லி சட்டமே வருகிறது. பத்தாம் வகுப்பில் கணக்கு, அறிவியல், வரலாறு அனைத்திலும், அறுபது விழுக்காடு மதிப்பெண் எடுத்த மாணவன், மொழிப்பாடம் ஆங்கிலம் தேர்ச்சி பெற முடியாமல் படிப்பைப் பாதியில் விடுகிறான். கல்லூரிப் படிப்பில்கூட ஆங்கிலத்தால் பட்டம் பெற முடியாமல் போனவர்கள் ஏராளம். அங்கே ஒரு சாதனையாளரை நாம் இழக்கிறோம். அந்த ஆங்கிலம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக விளையாட்டுப் பிரிவுகள் முடக்கப்படும், அறிவியல், கணிதம், வரலாறு படிக்கும் நேரங்களை ஆங்கிலம் விழுங்கிவிடும். அனுபவங்கள் அப்படி இருக்கும்போது, புரியாத மொழி இந்தி வந்துவிட்டால், நம் மாணவர்கள் அறிவியலும், கணிதமும், வரலாறும், புவியியலும் படிப்பார்களா? மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்றால் போதுமென்று அதில்தானே மூழ்கடிக்கப்படுவார்கள். சிந்திக்கும் திறன், திறனாய்வு, கண்டுபிடிப்புகள், நுண்ணறிவு, ஆய்வு நோக்கம் அத்தனையும் மழுங்கடிக்கப்பட்டு விடும். எதைக் கற்க வேண்டுமோ அதையெல்லாம் விட்டுவிட்டு, தேவையில்லாத ஆணிகளைப் புடுங்கி, புடுங்கி, தமிழ் மாணவன் கூடுதல் மொழிகளைக் கற்பதில் தன் வாழ்வையே வீணடித்துவிடுவான்.

உத்தரப் பிரதேச மாணவர்கள் தங்களது தாய்மொழியான இந்தியில் தேர்ச்சி பெறுவதற்கே திண்டாடுகிறார்கள். அவர்கள் இப்போது தமிழ்நாட்டுக்கு அதிகம் வேலை செய்ய வருகிறார்கள். அதனால் அவர்களது பாடத்திட்டத்தில் தமிழ் கற்க வேண்டும் என்று சொல்ல முடியுமா? முடியாது. அவரவர் தாய்மொழியில் அவரவர் கற்பதுதானே நீதியாக இருக்க முடியும். ஏன் தமிழ் மாணவரின் வளர்ச்சியைத் தடுத்திட வேண்டும்.

**மொழிப்போர் முழக்கம்**

நிலத்துக்காக, இனத்துக்காக, பொன்னும் பொருளும் களவாடிச் செல்வதற்காகப் போர் நடந்துள்ளது; போராட்டம் நடந்துள்ளது. இப்போது எரிசக்தி, கனிமவளங்கள், நீருக்கான போர் தொடங்கியுள்ளது. ஆனால், உலக வரலாற்றில் மண்ணைக் காக்க, தமிழினம் காக்க, தாய்மொழி காக்க போராடியவர்கள், போர் புரிந்தவர்கள் என்று வரலாற்றில் தடம் பதித்தவர்கள் தமிழர்கள். அதனால்தான் மொழியால் வேறுபட்டு இருக்கும் நம் இந்தியாவில் தாய்மொழிக்கு ஓர் ஆபத்து என்ற செய்தியைக் கேட்டாலே, முதல் தீப்பொறி தமிழ்நாட்டிலிருந்து பறக்கிறது. தாய்மொழியைத் தூக்கிப்பிடிக்கிறோம். தாய்மொழிக்காகச் செயலாற்றும் அரசியல் இயக்கங்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியும் என்ற நிலையில் தமிழகம் இருக்கிறது.

**இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்**

இந்தியும், ஆங்கிலமும் இந்தியாவின் அலுவல் மொழிகள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, காஷ்மீரி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், உருது, சிந்தி, போடோ, சந்தாலி, மைதிலி, டோக்ரி, கொங்கணி, மணிப்பூரி, நேபாளி ஆகிய 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்ற மொழிகள். இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 40% இந்தி பேசுபவர்கள். குறைவான எண்ணிக்கை என்றால் 24,821 பேர் சம்ஸ்கிருதம் தெரிந்தவர்கள் என்கிறது இந்தியாவில் கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.

**தமிழ் வளர்ச்சியில் அரசியலின் பங்கு**

இந்தியாவில் இருக்கும் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி, இந்தியாவில் அலுவல்மொழி, இலங்கை, சிங்கப்பூரில் ஆட்சிமொழி, மலேசியா, தென்னாப்பிரிக்கா, கனடா, மொரிசியஸ் நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழி, ஆப்பிரிக்க நாடுகளான செசல்சு, ரியூனியன் தீவுகளில் பண்பாட்டு மொழி, 233 நாடுகளில் பேசப்படும் மொழி. உலகெங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழும் வாழ்கிறது. அப்படி இருக்கும்போது தாய்த் தமிழ்நாட்டில் தமிழ் முழு ஆரோக்கியத்துடன் அல்லவா போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சிமொழி என்று 27.12.1956இல் சட்டமியற்றப்பட்டு, 23.01.1957 முதல் நடைமுறையில் இருக்கிறது. அரசு அலுவலர்கள் தமிழில் மட்டுமே ஒப்பமிடவேண்டுமென 26.01.1978 அன்று வெளியான அரசாணை (எண் 1134) சொல்கிறது. பணிப்பதிவேடுகள் தமிழில் பேணப்பட வேண்டுமென 30.01.1981 அன்றைய அரசாணை (எண் 2618) கூறுகிறது. அலுவலக நடைமுறையில் திருவள்ளுவர் ஆண்டைக் கட்டாயம் குறிப்பிட வேண்டுமென 03.02.1981இல் வெளியான அரசாணை (எண் 91) எடுத்துக்காட்டுகிறது. தமிழில் கடிதப்போக்குவரத்து இருக்க வேண்டுமென 31.10.1986 அன்றைய கல்வித் துறை நிலையாணை (எண் 432) குறிப்பிடுகிறது. அலுவலகப் பெயர்ப் பலகைகள் தமிழில் அதுவும் எந்த அளவில் இருக்க வேண்டுமென 14.10.1987 அன்று வெளியிடப்பட்ட அரசாணை (எண் 349) சுட்டிக்காட்டுகிறது. இத்தனை இருந்தும் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

உலகில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டாலும் அத்தனைக்கும் மூத்த மொழி, தொன்மையான மொழி, நம் தமிழ் மொழி என ஆதிச்சநல்லூர், கீழடி உள்ளிட்ட தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதை யாராலும் அழிக்க முடியாது. ஆனால் சிலர் மறைக்க நினைக்கிறார்கள். தமிழ் படித்தவர்களை முடக்கப் பார்க்கிறார்கள்.

தமிழ் வாழ்க வென்பதிலும் தமிழ் வாழாது

தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ் வாழாது

குமிழ்ச் சிரிப்பைப் பெருஞ் சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும்

கொக்கரிப்புச் பேச்சாலுந் தமிழ் வாழாதே!

அமிழ்கின்ற நெஞ்செல்லாம்; குருதியெல்லாம்

ஆர்த்தெழும் உள் உணர்வெல்லாம் குளிருமாறே

இமிழ் கடல் சூழ் உலகமெல்லாம் விழாக் கொண்டாடி

ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ் வாழாதே!

என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடிச்சென்றுள்ளார். ஆனாலும், அதையெல்லாம் செய்தாலும், கட்டாயத் தமிழ் வழிக்கல்வி, அறிவியல் தமிழ், உயர்கல்வியைத் தமிழில் படிக்க வசதி, அனைத்துத் துறைகளிலும் தமிழில் ஆராய்ச்சி, ஆட்சி மொழி, வழக்காடு மொழி உள்ளிட்ட பல ஆண்டுக்கால கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே, நாம் இப்போது கீழடியைப் படிப்பது போன்று, எதிர்காலத் தலைமுறை நம்மைப் படிக்கும், நம் தாய்மொழி, தமிழ்மொழி செழித்தோங்கும். தமிழ் வாழும், தமிழால் நாம் வாழ்வோம்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share