�சிறப்புக் கட்டுரை: மாநில உரிமைகளின் சவக்குழியில் மின்சாரத்துக்குச் சவப்பெட்டி!

Published On:

| By Balaji

விவேக் கணநாதன்

ஊரடங்கு நடைமுறைகளுக்கு இடையே கடந்த 2020 ஏப்ரல் 17 அன்று நடப்பில் உள்ள மின்சாரச் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதாவை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.

அனுப்பப்பட்ட 21 நாட்களுக்குள், மே 8ஆம் தேதிக்குள் இம்மசோதா மீது பதிலளிக்குமாறு முதற்கெடு விதிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தரப்பின் அழுத்தத்தை அடுத்து ஜூன் 5 வரை கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது

இம்மசோதாவுக்கு மின் ஊழியர்கள், பொறியாளர்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவும், அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவசர அவசரமாக மக்கள் மீது திணிக்காமல் செப்டம்பர் வரை மசோதா கெடுவை நீட்டிக்க இந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தத் திருத்தத்துக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து ஊரடங்கு முடிந்த பிறகு, ஒரு நாள் தேசிய போராட்டம் நடத்தவும் அவை முடிவெடுத்துள்ளன.

இதற்கிடையே, மே 1 அன்று, பிரதமர் தலைமையில் இம்மசோதா குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்துள்ளது.

கூட்டத்தில், “மின் வர்த்தகத்தை எளிதாக்குதல், மரபுசாரா ஆற்றல்களை ஊக்குவித்தல்; நிலக்கரியைத் தனியாருக்கு வழங்குவதில் ‘தாராள மனப்பான்மை’; மின் துறையில் தனியார் பங்களிப்பை அதிகப்படுத்தல்; தனியார் முதலீட்டை ஈர்த்தல்” ஆகியவை குறித்துப் பேசப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு அபாயத்தில் நாடே முடங்கியிருக்கும் நேரத்தில், தனியாருக்கு மின் துறையைத் தாரைவார்க்கும் நோக்கில் நடந்துள்ள இந்தக் கூட்டம் அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது எனக் காட்டுகிறது.

இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருப்பொருட்களைச் சட்டமாக்கும் வகையில்தான் புதிய சட்டத் திருத்தங்களும் உள்ளன.

என்னென்ன திருத்தங்கள் அவை?

**திருத்தம் 1:**

(அ) மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் என்கிற மத்திய அரசு ஆணையம் ஒன்று உருவாக்கப்படும். இதன் மூலம், PPA எனப்படும் மின் கொள்முதல், விற்பனை ஒப்பந்தங்கள் மத்திய அரசால் நேரடியாக முறைப்படுத்தப்படும். இத்தகைய ஒப்பந்தங்களை முறைப்படுத்தும் இந்தியாவின் ‘ஒரே’ ஆணையமாக இது இருக்கும்.

(ஆ) மின் உற்பத்தியாளர்களுக்கான பாதுகாப்பான கட்டண செலுத்து முறைமை கொண்டுவரப்பட உள்ளது. இதன்படி, “குறிப்பிட்ட பாதுகாப்புக் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தாவிட்டால், உற்பத்தியாளர் குறிப்பிட்ட தொகுப்பு மின்சாரத்தை வழங்கவேண்டிய அவசியம் இல்லை.”

விளைவு?

இதுவரை தங்களுக்குத் தேவையான மின் ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டிருந்த மாநில மின் ஆணையங்கள் அவ்வுரிமையை இழக்கும். மின் கொள்முதலில் ஈடுபடும் மாநில அரசுகளுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். மத்திய அரசு ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் 120 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்கும்.

உப விளைவு?

இதன் மூலம், யார் எவ்வளவுக்கு ஒப்பந்தம் போடுகிறார்கள் என்பதை மத்திய ஆளுங்கட்சி தனக்குத் தேவையான முதலாளிகளுக்குத் தெரிவித்துக்கொள்ளும் வாய்ப்பு கிட்டும். இதனால், ‘ஏக இந்திய முதலாளிகள்’, குஜராத் முதலாளிகள் அதிக வாய்ப்பைப் பெறுவார்கள். மாநில அளவுக்குள் இயங்கும் பிற முதலாளிகளின் கை சுருங்கும்.

**திருத்தம் 2:**

மரபுசாரா ஆற்றல் மூலங்களை ஊக்குவித்தல். இதன்படி, தன் தேவையில் ஒரு குறிப்பிட்ட அளவு ‘Renewable Energy’ மற்றும் ‘Hydro Power’ எனப்படும் நீர் மின்சாரத்தை மாநில அரசு ‘கொள்முதல் செய்தே’ ஆக வேண்டும். இந்த ‘அளவு’ என்ன என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும். நீர் மின்சாரம் Renewable Energy பட்டியலில் இல்லை. இந்தத் திருத்தம் அதைச் சேர்க்க வலியுறுத்துகிறது.

விளைவு?

சம்பந்தமே இல்லாமல், கட்டாயத்தின் பேரில் தேவையற்ற செலவுகளை மாநில அரசு சுமக்க நேரிடும்.

உதாரணமாக, தமிழ்நாட்டின் மொத்த மின் தேவை – 18747.28 மெகாவாட். இதில், காற்று, சூரிய ஒளி, BioMass மூலமாகக் கிடைக்கும் மின்சாரம் 10479 மெகாவாட். இது மிகப்பெரிய உற்பத்தித் திறன். டென்மார்க்குக்கு நிகரானது. இவ்வளவு பெரிய ‘Renewable Energy’ Source உள்ள ஒரு மாநிலம், மத்திய அரசு சொல்வதற்காகக் கட்டாயமாகக் குறிப்பிட்ட அளவு ‘Hydro Energy’யையும் கொள்முதல் செய்ய வேண்டும். இது கூடுதல் சுமை.

இந்தக் கொள்முதலைச் செய்யாவிட்டால், மத்திய அரசு எனும் ஹெட் மாஸ்டர், மாநில அரசு எனும் குட்டி பையனுக்கு அபராதம் விதிப்பார். உதாரணமாக, 1 மெகாவாட் கட்டாயம் நீர் மின் உற்பத்தியைக் கொள்முதல் செய்ய வேண்டும் என இருக்கிறது என வைப்போம். ஒரு மாநில அரசு 0.5 மெகாவாட் மட்டும் கொள்முதல் செய்தால், மிச்சத்துக்கு அபராதம்.

முதல் ஆண்டு ஒவ்வொரு கிலோவாட்டுக்கும் 50 பைசா அபராதம். அடுத்த ஆண்டும் செய்யவில்லையா? 1 ரூபாய் அபராதம். அடுத்த ஆண்டும் செய்யவில்லையா? 2 ரூபாய் அபராதம்.

உப விளைவு?

Renewable Energy பட்டியலில் இருக்கும் சூரிய மின்சார உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் குஜராத் கம்பெனிகள் கொழிக்கும். நினைத்த விலைக்கு விற்று லாபம் பார்க்கும்

**திருத்தம் 3:**

மின் கட்டணத்தை இனி மத்திய அரசின் ஆணையமே தீர்மானிக்கும். எந்த மானியமும் இதில் சேர்த்துக் கொள்ளப்படாது. இந்தக் கட்டணம், நுகர்வோரான, சாமானிய பொதுமக்களுக்குச் சென்றடையும் போது, கடைசி புள்ளிவரை என்ன செலவாகிறதோ அதை வைத்துக் கணக்கிடப்படும். அந்தக் கட்டணத்துக்கு மின்சாரத்தை ‘விற்றுத்தர வேண்டியது’ மாநில அரசின் வேலை.

விளைவு?

மாநில இறையாண்மை மீதான செருப்படி இது. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான ‘மின் பகிர்மான கட்டமைப்பு’ கொண்டது. எனில், ஒவ்வொரு மாநிலத்துக்கும், சாமானிய மக்களுக்குச் சென்று சேரும்போது அதன் கடைசிப்புள்ளி செலவு என்பது மாறுபடும்.

எனில், ஒரு மத்திய ஆணையம் எப்படி இதை அனைத்து இந்தியாவுக்கும் சேர்த்துத் தீர்மானிக்க முடியும்?

அப்படி, இந்தியா முழுமைக்கும் ஒரே விலையைத் தீர்மானித்தால், உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் மோசமான கட்டமைப்பின் விளைவை, தமிழ்நாடும் சேர்ந்தும் சுமக்க வேண்டியிருக்கும்.

இல்லை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான கட்டணத்தை, டெல்லியில் உட்கார்ந்துகொண்டு தீர்மானிக்கப் போகிறார்களா? அப்படி தனித்தனியாகத் தீர்மானிப்பது என்றால், அதை மாநில அரசே செய்யலாமே? எதற்கு இந்திய நாட்டாமை?

உப விளைவு:

இதுவரை 15ஆவது நிதிக்குழு, அந்தக் குழு, இந்த ஆணையம் என்று தானே கத்திக்கொண்டிருந்தோம்? இனி அப்படியெல்லாம் இல்லை. நேரடியாக ‘மின் கம்பியிலேயே’ தமிழன் காசு உத்தரப் பிரதேசத்துக்குப் போகும்.

**திருத்தம் 4:**

இந்திய மின் சட்டம், 2003 ‘Open access’ என்பதை வலியுறுத்துகிறது. பாகுபாடில்லாமல் அனைவருக்கும் மின்சாரம் சேர வேண்டும் என்பதே இந்த வலியுறுத்தலின் நோக்கம்.

இதன்படி, ஒரு சாமானியன் தான் நுகரும் மின்சாரத்துக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். போக்குவரத்து, பகிர்மானச் செலவுகளை எல்லாம் சேர்த்து இந்தக் கட்டணம் எவ்வளவு என்பதை மாநில அரசே தீர்மானித்து வந்தது. உள்மாநிலத்துக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் கடந்து வரும் செலவு சேர்க்கப்படாது.

இனி அப்படி கிடையாது. ஒவ்வொரு துளி மின்சாரத்துக்கும், உள்மாநிலத்துக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் ‘கடத்துவதற்கான’ செலவுகள் எல்லாம் சேர்த்தே கட்டணம் தீர்மானிக்கப்படும்.

அந்தக் கட்டணத்தைத் தீர்மானிக்கப் போவது யார்?

மத்திய அரசு!

மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதைத்தான் மாநில அரசு கேட்டு நடக்க வேண்டும் எனத் திருத்தம் திமிரோடு குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் படிப்படியாக நிறுத்தப்படும் எனத் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.

விளைவு?

இந்த ‘Open access surcharge’ விதியைப் பயன்படுத்தித்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இனி இலவச மின்சாரம் கேள்விக்குறியாகும்.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள முதல் 100 யூனிட் இலவசம் நடைமுறையும் கேள்விக்குறியாகும்.

மானிய விலையில் வழங்கப்படும் மின்சாரம் நிறுத்தப்படும். நேரடியாக அரசே பணம் செலுத்தும் நடைமுறையின் கீழ் வங்கிக் கணக்குத்தான் பணம் வரும்.

ஒருவேளை விவசாயிக்கு மானிய மின்சாரம் கிடைத்தாலும், முன்கூட்டியே இனி விவசாயிகள் 5,000, 10,000 என தங்களுக்கு ஆகும் கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும். பிறகு, மத்திய அரசு எவ்வளவு மானியத்தொகை தீர்மானிக்கிறதோ அது வங்கிக் கணக்குக்கு வரும்.

‘DBT’ – எனப்படும் இந்த நேரடியாகப் பணம் செலுத்தும் முறை போன்ற மக்களை ஏமாற்றும் செயல் ஏதுமில்லை.

மிகச்சிறந்த உதாரணங்கள் LPG மற்றும் PDS.

PDS எனப்படும் ரேஷன் உணவுப்பொருள் வழங்கல் முறைக்கு, DBT கொண்டு வந்து சில பகுதிகளில் அறிமுகப்படுத்தியபோது சுமார் 18 மாத காலம் மக்கள் அல்லோகலப்பட்டார்கள். ஆதார் கார்டு அடிப்படையில் வழங்கப்படும் இந்த நேரடி பரிமாற்றம் பொது விநியோக முறைமையையே ஊனமாக்குகிறது எனப் பலமுறை ழீன் ட்ரீஸ் போன்ற ஆய்வாளர்கள் எழுதித் தள்ளியிருக்கின்றனர்.

LPGக்கு DBT கொண்டு வந்தபிறகு, 14% வரை வீட்டு சிலிண்டர் விற்பனை குறைந்தது. இவையெல்லாம் போலிக்கணக்குகள் – அவற்றைத் தடுத்துவிட்டோம் என்றது அரசு. ஆனால், கள்ளச் சந்தை கணிசமாக வளர்ந்துள்ளது – முன்பைவிட குறைவான விலைக்குக் கள்ளச்சந்தையில் சிலிண்டர் கிடைக்கிறது என்கின்றன ஆய்வுகள். அதோடு, LPG-க்கான மானியம் எவ்வளவு மோசமாக வந்து சேர்கிறது என இந்தியப் பெண்களைக் கேட்டால் சொல்வார்கள்.

இப்போது மின்சாரத்துக்கும் DBT. இனி ஒவ்வொருவரும் மின்கட்டணத்தைச் செலுத்திவிட்டு, அரசின் மானியத் தொகைக்காகக் காத்திருக்க வேண்டும். அந்தக் காசும் ஒட்டுமொத்த இந்திய சராசரிக்கே தீர்மானிக்கப்படும்.

மாநில அரசுகள் மத்திய அரசுக்கும் – தேசிய இனங்களுக்கும் இடையே புரோக்கர் வேலை மட்டுமே செய்யும்.

உப விளைவு?

கார்ப்பரேட் விவசாயம் மட்டுமே கதியாகும். தொழிற்சாலைகளின் மின் உபயோக விகிதத்தால் ஏற்படும் மின் வர்த்தக இழப்பைக்கூட சாமானிய மக்கள் சந்திப்பார்கள்.

**திருத்தம் 5:**

வீட்டை வாடகைக்கு எடுத்து உள்வாடகைக்கு விடுவதைப்போல, மாநில அரசிடம் உரிமம் பெற்றுள்ள நிறுவனமோ அல்லது மாநில அரசோ உரிமங்களை இனி பகுதி, பகுதியாக உள்வாடகைக்கு விடலாம். சிறப்பான சேவையை வழங்குவதற்காக இப்படிச் செய்யலாம் என்கிறது திருத்தம்.

விளைவு?

சென்னைக்கு மொத்தமாக ஒருவர் கட்டண வசூலுக்குக் குத்தகை எடுப்பார். அவர் தியாகராய நகரை இன்னொருவருக்கு உள்வாடகை விடுவார். மக்கள் உள்வாடகைக்காரரிடம் பணம் செலுத்த வேண்டும்.

அரசு செலுத்தும் மானியம் ஒழுங்காக வரவில்லை என்றால், உள்வாடகைக்காரர் மின்சார இணைப்பைத் துண்டித்துவிடும் அபாயம் உண்டு.

உப விளைவு?

நீண்ட கால நோக்கில், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு கம்பெனி மின்சாரம் கொடுக்கும் நிலைமை உருவாகக்கூடும்.

ஏர்டெல், வோடஃபோன் என கம்பெனிகள் ஒரே 4ஜி சேவையை வெவ்வேறு விலைக்கு விற்பது போல, மின்சாரம் விற்கப்படும்.

**திருத்தம் 6:**

மின் பகிர்மான தீர்ப்பாயம், மத்திய மின் கட்டுப்பாட்டு ஆணையம், மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் உட்பட அனைத்துக்கும் ‘ஒரே தேர்வுக்கமிட்டி’ பணியாளர்களை நியமிக்கும்

விளைவு?

தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் அதிக அளவில் பணி அமர்த்தப்படுவார்கள். இந்தத் திருத்தங்களால் உறிஞ்சப்பட்டது போக மிச்சமிருக்கும் கொஞ்சூண்டு அதிகாரத்தையும், ஒரு மாநிலத்தில், அதே தேசிய இனத்தைச் சேர்ந்தவர் நடைமுறைப்படுத்த முடியாது.

உப விளைவு?

இன தேசிய பிரச்சினைகள் வலுக்கும்.

மொத்தத்தில், மாநில உரிமைகளின் சவக்குழியில் மின்சாரத்துக்குச் சவப்பெட்டி, தேசிய இன இறையாண்மைக்கு புதைப்பெட்டி, சாமானிய மக்களுக்கு விஷக்குப்பி.

தொடர்புக்கு: writetovivekk@gmail.com�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share