�சிறப்புக் கட்டுரை: மாநில சுயாட்சி முழக்கமும் ராஜமன்னார் குழு அறிக்கையும்!

Published On:

| By Balaji

வி.எம்.எஸ்.சுபகுணராஜன்

பெரியாரின் “குடி”அரசு என்னும் கருத்தாக்கம் மிக முக்கியத்துவம் மிக்கது. ஆழமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியது. நவீன தேச அரசுகளின் இறையாண்மை, குடியுரிமை என்னும் முரணில் பெரியார் ‘குடி’யை மையப்படுத்தினார். தேசியம், தேசம் என்பதிலிருந்து சுயமாக இறையாண்மையைப் பெறும் நவீன அரசுகளை நிராகரித்து, குடிமையை மையப்படுத்தி, அதிலிருந்து மட்டுமே இறைமை (அதிகாரத்தை) பெறும் அரசைப் பற்றிப் பேசினார். அதே போல அரசு என்பதையும் அரசாங்கம் (கவர்ன்மென்ட்) என்பதையும் பெரியார் வேறுபடுத்தி நோக்கினார். அரசு நிரந்தரமானது, அரசாங்கம் தற்காலிகமானது. இந்திய தேச அரசைப் பெரியார் நிராகரித்தார். ஆனால் அரசாங்கம் / கவர்ன்மென்ட்களோடு, பகை / நட்பு உறவு கொண்டிருந்தார். ஆயினும் அவர் குடிமையை மையப்படுத்திய / கவர்னன்ஸை மையப்படுத்திய தமிழ்நாடு ‘குடிஅரசை’ முன்மொழிந்தார்.

இந்தியத் தேச அரசை நிராகரித்துப் புதியதொன்றை முன்மொழிதல், ஏற்றுப் பங்குகொண்டு புதியதொன்றை அடைதல் என்பதில்தான் பெரியாருக்கும் அவரது தோழர்களுக்கும் வேறுபாடு தோன்றி திமுகழகம் பிரிந்தது. ஆயினும் பெரியார் சிந்தனையின் தொடர்ச்சி திமுகழகத்தின் மாநில சுயாட்சி முழக்கத்திலும் அதன் அறிவார்ந்த வெளிப்பாடான ராஜமன்னார் குழு அறிக்கையிலும், பின்னர் திமுக ஆட்சிகளின் நடைமுறையிலும் வெளிப்பட்டது.

ராஜமன்னார் குழு அறிக்கை அயலுறவு, ராணுவம், மத்திய வங்கி ஆகிய மூன்றைத் தவிர ‘நீதித் துறை’ உள்ளிட்ட மீதி அனைத்தையும் மாநில அரசின் கீழ் கொண்டுவரப் பரிந்துரைத்தது. இந்த அறிக்கையில் ‘நீதித்துறை’ தொடர்பான பரிந்துரைகள் பாரதூரமான விளைவுகளைக் கொண்டிருந்தது. குறிப்பாக, குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளின் மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியதில்லை என்ற பரிந்துரை மிக முக்கியமானது. சட்டம் ஒழுங்கு மற்றும் உரிமையியல் தொடர்பான சட்ட வரையறைகளைத் தமிழ்நாடு சட்டமன்றம் தனித்துவமான ஒன்றாக உருவாக்கிக்கொள்ள அதிகாரம் உள்ளபோது, அந்தத் தனித்துவமான அதிகார வரையறை இல்லாத உச்ச நீதிமன்றம் மேல் முறையீட்டை ஏற்பது முறையில்லை என்பது வாதம்.

திருமணமான பெண்களுக்கான சொத்துரிமை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, பிற மாநிலங்கள் பலவற்றில் அது சட்டபூர்வமாக அனுமதிக்கப்படவில்லை. எனவே வேறு வேறான சட்ட வரையறைகளை உருவாக்கும் வாய்ப்புள்ள சூழலில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு என்பது தேவையில்லை. இந்தப் பரிந்துரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்காது. ஆனால், அப்படி ஏற்கப்பட்டிருந்தால், மாநிலச் சட்டங்கள் தனித்துவமானவையாய் மாறி அசலான கூட்டாட்சி வடிவம் சாத்தியமாகி இருக்கும்

இந்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பியது. வழக்கம்போல ராஜமன்னார் குழு அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. திமுக எம்ஜிஆர் மூலம் பிளவுபடுத்தப்பட்டது. இவ்வாறு சுயாட்சி முழக்கத்தை இந்திய தேச அரசு கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கொண்டனர்.

ராஜமன்னார் அறிக்கைக்கு ஆதரவான தனிநபர் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் கருணாநிதி நடத்திய விவாதம் மிக முக்கியமானது. அக்காலத்தில் தனிநாடு கோரிக்கையைக் கைவிட்ட பிறகும்கூட திமுகவின் மாநில சுயாட்சி கோரிக்கை சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்பட்டது.

சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய கூட்டாட்சி அமைப்பை முன்மொழிந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கே.டி.கே. தங்கமணி, ராஜமன்னார் குழு அறிக்கையின் பரிந்துரைகள் மாநில சுயாட்சி உரிமைகளைக் கோரவில்லை, பிரிவினை உள்நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என விமர்சனம் செய்தார். இந்தியத் தேசியத்தை ஏற்றுக்கொண்டு தேச அரச நோக்கிலிருந்து பார்க்கும்போது இந்தச் சிந்தனை தோன்றுவது தவிர்க்க இயலாதது. தேச அரசை நிராகரிக்கும் பெரியார் சிந்தனை வழியிலிருந்து யோசிக்கும்போது இதன் நியாயம் தெரியும்.

மாநில சுயாட்சி என்பதை திமுகவும் அதன் சிந்தனையாளர்களும் மாநிலத்திற்கான உரிமைகளைப் பெறுவது என மட்டும் வரையறுத்துக்கொள்ளவில்லை. சுயாட்சி என்பது கவர்னன்ஸில் அதிகாரிகளின் இடத்தைத் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் மூலம் பதிலீடு செய்வது. இதனால் திமுகவின் சுயாட்சிக் கோரிக்கை வெற்றி பெறாமல் போன பின்னும்கூட, திமுக ஆட்சி பல்வேறு வகையான ‘வாரியங்கள்’, மாநில நிறுவனங்கள், திட்டங்கள் உருவாக்கின. இதிலெல்லாம் இந்தச் சிந்தனையோட்டத்தைச் செயற்படுத்தின. இதுவே தமிழகம் இந்தியாவில் பிற மாநிலங்களைவிட சமூகநல வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதற்குக் காரணம். ஆனால், தாராளமயக் கொள்கை மேற்கொண்ட காலத்தில் ‘ஊழல்’ முதலான இதன் எதிர்மறைப் பண்புகளும் வெளிப்பட்டன.

ஆனால், இன்று இந்தியாவில் மோடி தலைமையிலான இந்துத்துவக் கொள்கையாளர் அரசுக்கும், அரசாங்கத்துக்கும் உள்ள வேறுபாட்டை ஒழிக்க முயலுகின்றனர். அவர்கள் முழு அளவிலான மையப்படுத்திய, அதிகாரமயப்படுத்திய அரசை உச்சத்திற்கு இட்டுச் செல்கின்றனர். இது மிக அபாயகரமானது. இதை எதிர்க்க வேண்டும்.இப்போது நாம் பெரியார் சிந்தனைக்கே மீண்டும் திரும்ப வந்து சேர்ந்திருக்கிறோம்.

இந்தியாவில் முதன்முதலாக மத்திய – மாநில உறவுகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை, அதிலும் ஒரு மாநில அரசின் முன்னெடுப்பில், ராஜமன்னார் குழு அமைத்து உருபெறக் காரணமான கலைஞர்தான் கூட்டாட்சி சிந்தனையைக் களப்படுத்திய நாயகன். அறிக்கையின் இருபது சதவிகிதப் பரிந்துரைகள் ஏற்கப்பட்டிருந்தாலே பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்குமென எண்ணாமல் இருக்க இயலவில்லை.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share