மழை பெய்தும் கெடுக்கும்… பெய்யாமலும் கெடுக்கும் என்பது போல, கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளையும், பொதுமக்களையும் மழை வாட்டிவதைக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழையால் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட அனைத்துப் பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கி, நாசமாயின. இதனால் விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் உயிரிழக்க நேரிட்டது. அதன்படி தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2014-ம் ஆண்டு இந்திய அளவில் 12360 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த இறப்பு 2015-ம் ஆண்டில் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதன்படி மத்தியபிரதேசத்தில் 1290 விவசாயிகளும்; சத்திஸ்கரில் 954 விவசாயிகளும்; குஜராத்தில் 301 விவசாயிகளும்; மகாராஷ்டிராவில் 4391விவசாயிகளும்; தெலுங்கானாவில் 1400 விவசாயிகளும்; கர்நாடகாவில் 1569 விவசாயிகளும்; தமிழ்நாட்டில்-606 விவசாயிகளும் இறந்துள்ளனர். இதில் கடன் சுமையால் 3097 விவசாயிகளும், 1843 விவசாய கூலிகளும், விளைச்சல் இன்றி 1562 விவசாயிகளும், பயிர் நோய் தாக்கிய ஏக்கத்தில் 842 விவசாயிகளும், பயிரைக் காப்பதற்காக அவர்களுடைய மாடு, வீடு ஆகியவற்றை அடகு வைத்து திவாலான நிலையில் 3097 விவசாயிகளும் உயிரிழந்துள்ளனர்.விஷம் குடித்து 330 தற்கொலைசெய்து கொண்டுள்ளனர். இதில் மொத்தமாக ஆண்கள் 11,584 பேரும் , பெண்கள் 1018 பேரும் இறந்துள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை 2014-ம் ஆண்டு 895 விவசாயிகள் உயிரிழந்தனர். இது 2015-ல் 606 ஆக சற்று குறைந்து. ஆனால், தற்போது வறட்சியில் கடந்த 4 மாதங்களில் மட்டும், 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.
பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாததாலும் தமிழகம் பெரும் வறட்சிமாநிலமாக உருவெடுத்தது. இதனால் தமிழகம் வறட்சிமாநிலமாக அறிவிக்கப்பட்டது. சம்பா, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட அனைத்துப் பணப்பயிர்களும் கருகின. வாடியப் பயிரைக் கண்டு மனமுடைந்து இறப்பது, கடன் வாங்கி விதைத்த நெல்லும் முளைக்காமல், வாங்கிய வட்டியால் விவசாயிகள் தற்கொலை என நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வந்தது. இதனால் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்தனர். இதனால் விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தமிழக அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. இதனால் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வறட்சி நிலைமை அறிய மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து ஆய்வு செய்தார். அந்த ஆய்வறிக்கையில், மாநிலத்தில் உள்ள 16,682 வருவாய் கிராமங்களில் 13,305 வருவாய் கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்த நிலையில் 17 விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வறட்சி நிலைமையை மத்தியகுழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் 96 சதவீதம் பேருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 52 ஆயிரத்து 613 விவசாயிகளுக்கு ரூ.524.25 கோடி பயிர் இழப்பீட்டுத் தொகையானது அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என்றும் டெல்டா அல்லாத வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் இதுவரை 17லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு 804 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியது. மேலும் விவசாய நிலங்களில் நெற்பயிருக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ.5,465 மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாடுகளையும் விதித்தது.
இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் “வறட்சி பாதித்த மாவட்டங்களை மத்திய குழு ஆய்வு நடத்தி சென்று இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை மத்திய அரசு சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று சொல்லியிருக்கிறார்களே, தவிர இதுவரை யாருடைய வங்கிக் கணக்குகளிலும் பணம் செலுத்தியதாக தெரியவில்லை. எல்லா விவசாயிகளுக்கு பாதிப்பு என்பது ஒன்றுதான். ஆனால் பெரிய விவசாயிகளுக்கு நிதி கிடையாது என்று அறிவித்தது சட்ட ரிதீயாக ஏற்கதக்கது அல்ல. எனவே பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும். மேலும் சிறுவிவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யாமல் மத்திய கால கடனாக மாற்றியுள்ளனர். இப்படி மத்தியகால கடனாக மாற்றுவதன் மூலம் விவசாயிகளுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது. கடன் சுமைதான் அதிகரிக்கும். இந்த ஆண்டு மட்டுமின்றி கடந்த நான்கு ஆண்டுகளாகவே விவசாயிகள் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். 2014-15 ஆண்டு சாகுபடி செய்த விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டனர். அந்த விவசாயிகளுக்கே மத்திய மாநில அரசுகள் நிதி ஆதாரத்தை ஒதுக்கவில்லை. இரண்டாண்டு ஆகியும் நிவாரணம் பெற முடியவில்லை. இதற்கிடையில் 2016-17ஆண்டுக்கான நிவாரணம் எப்போது கிடைக்கும்(?) என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதுமட்டுமின்றி வறட்சியால் பல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் ஏக்கருக்கு ரூ.5,465 மட்டும் வழங்குவது போதுமானதாக இருக்காது.
எனவே அரசாங்கம் விவசாயிகளுக்கு ஏற்பட்ட கடனைத் தள்ளுபடி செய்து பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். கடந்த இரு ஆண்டுகளுக்கான பயிர்காப்பீட்டுத் திட்டத்தை, உடனே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார வேண்டும். கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும். கடல்நீர் உட்புகுவதை தடுக்க வேண்டும். நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக அனைத்து செறிவூட்டும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அரசு செயல்பட்டால் தமிழகத்தின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளைக் காப்பற்றலாம்’ என்றார் உணர்வுப் பூர்வமாக.
நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணித்தும் அவர்களுக்கு இதுவரை அரசு தரப்பில் போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் பணமும், அவர்களுடைய வங்கிக் கணக்கில் முறையாகச் செலுத்தப்படவில்லை. இந்நிலை முற்றிலும் களையப்படவேண்டும். பலகட்ட விவசாயிகளின் போராட்டங்களுக்குப் பின், நிவாரணம் வழங்குவதுதான், அரசின் கடமையல்ல. அந்த போராட்டங்களே உருவாகமல் தடுப்பதுதான் ஒரு நல்ல அரசாக இருக்கமுடியும். அதாவது, விவசாயிகளுக்கு வேண்டியவற்றைச் செய்து கொடுத்து, அவர்களின் நலனில் அக்கறை கொண்டாலே…இத்தகைய போராட்டங்கள் நிச்சயம் உருவாகாது.
– கவிபிரியா�,”