�சிறப்புக் கட்டுரை: பணமதிப்பிழப்பு – பிழைகளை சரி செய்வாரா உர்ஜித் படேல்?

Published On:

| By Balaji

நான்கு மாதங்களுக்கு முன்பு, ரிசர்வ் வங்கியின் 24ஆவது ஆளுநராக உர்ஜித் படேல் பதவியேற்றபோது, அவர்முன் பல சவால்கள் இருந்தன. இவருக்கு முன்னர் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், தனது சரளமான பேச்சுத் திறமையாலும், சொல் வன்மையாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். ரகுராம் ராஜனுடன் ஒப்பிடும்போது, உர்ஜித் படேல் அனுபவம் குறைந்தவராகவும், மக்களுக்கு பரிட்சியம் இல்லாதவராகவும் இருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உர்ஜித் படேல் தலைமையிலான ரிசர்வ் வங்கியும், இந்தியாவும் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்தது. நவம்பர் 8ஆம் தேதி, இந்தியாவின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, உயர் மதிப்பு பணத்தாள்களான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்வதாக அறிவித்தார். கறுப்பு பணத்தை ஒழிப்பதும், கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவதை தடுப்பதும் இந்த அவசர நடவடிக்கைக்கான காரணங்களாக முன்வைக்கப்பட்டன. உர்ஜித் படேல் ஆளுநராக பதவியேற்ற இரண்டே மாதங்களில் இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளில்கூட, ஈடுபாடு இல்லமாலும், அரசாங்ககத்துடன் போதிய ஒருங்கிணைப்புடன் செயல்படாமலும் இருந்ததால், உர்ஜித் படேல் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். பண நெருக்கடியால் அவதியுற்ற மக்கள் உர்ஜித் படேலையும் சாடினர். 2.5 லட்சம் வங்கி அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்ட அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு உர்ஜித் படேலை பதவி விலகக் கோரி வலியுறுத்தியது. இது ஆரம்பம்தான்.

**ஈடுபாடின்மை**

இந்தியாவின் கரன்சியை அச்சிடுவது, புழக்கத்தில் விடுவது போன்ற பணிகள் ரிசர்வ் வங்கியின் பொறுப்பில் நடைபெற்று வருகின்றன. ( 1 ரூபாய் நோட்டு விதிவிலக்கு. அதை மட்டும் இந்திய அரசு அச்சிட்டு வெளியிடுகிறது) எனவே டிமானிடைசேஷன் நடவடிக்கைக்குப் பிறகு, பண நெருக்கடியை சமாளிப்பது தொடர்பான திட்டமிடல், செயல்படுத்துதல் போன்ற சீரமைப்பு நடவடிக்கைககளில், உர்ஜித் படேல் நேரடியாக இணைந்து ஈடுபாட்டுடன் செயல்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

நவம்பர் 8ஆம் தேதி மாலை மோடி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தபோது, உர்ஜித் படேல் எங்கிருந்தார் என்பதே தெரியவில்லை.

“டிமானிடைசேஷன் அறிவிப்பு வெளியான பிறகான ஆரம்ப நாட்களில், உர்ஜித் படேல் பொதுமக்கள் பார்வையில் படாமல் மறைந்தே இருந்தார். இது அவரது பொறுப்பற்றத்தன்மையை காட்டுவதோடு, அவரது தலைமை குறித்து கேள்வியை எழுப்புகிறது” என்று ஆசியா பசிபிக்கின் முன்னணி பொருளாதார நிபுணர் ராஜீவ் பிஸ்வாஸ் கூறினார்.

நவம்பர் 8ஆம் தேதிக்கும் 24ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் படேல் ஒரே ஒரு முறை மட்டுமே பேசினார். மறுபக்கம் மோடி, அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஆறு முறைக்கு மேல் பேசியிருந்தார்.

ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதிலும், வெளியிடுவதிலும் முதன்மை பங்காற்றும் ரிசர்வ் வங்கியே இந்த விஷயத்தில் ஈடுபாடு இல்லாமல் இயங்கியது அனைவருக்கும் அதிருப்பதியையும், தலைமை குறித்த கேள்வியையும் எழுப்பின.

பணப் பரிமாற்றம் தொடர்பாக ஏகப்பட்ட விதிமுறைகளும் வரையறைகளும் விதிக்கப்பட்டன. ஆனால் அவையனைத்தும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருந்தன. இது மக்களிடம் ஆத்திரத்தையும், இத்திட்டம் குறித்த நம்பிக்கையின்மையையும் வரவழைத்தன.

“டிமானிடைசேஷன் நடவடிக்கை ரிசர்வ் வங்கியின் திறன் மற்றும் சுதந்திரத்தின் மீது கரையை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற கரைகள், பணவியல் கொள்கை தொடர்பாக எதிர்கால முடிவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாய் அமையும்” என்று கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியின் இயக்குநர் கிரண் கரி கூறியுள்ளார்.

டிமானிடைசேஷனுக்குப் பிறகு பணப் பரிவர்த்தனையில் இயல்பு நிலையை கொண்டு வருவதில் ரிசர்வ் வங்கிக்கும், உர்ஜித் படேலுக்கும் மிக முக்கிய கடமை இருந்தது. ஆனால், படேலுடைய கவனக்குறைவாலும், அனுபவமற்ற அணுகுமுறையாலும் மிக மோசமான நிலை உருவாகியுள்ளது.

“டிமானிடைசேஷன் நடவடிக்கை என்பது ஒரு அரசாங்கத் திட்டம். அது தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு ரிசர்வ் வங்கி மீது பழி போடுவது நியாயமல்ல. உர்ஜித் படேலின் அணுகுமுறையில் சில தடுமாற்றங்கள் இருந்தன என்பது மறுப்பதற்கல்ல. இது போன்ற பிரச்னைகளில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் திறமையாக கையாண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த டிமானிடைசேஷன் நடவடிக்கையில், ரிசர்வ் வங்கியும், புது ஆளுநர் உர்ஜித் படேலும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளகியுள்ளனர்” என்று உலக அமைதி கார்னிக் மானியத்தின் தெற்காசிய மூத்த அதிகாரி மிலன் வைஷ்னவ் கூறியுள்ளார்.

மேற்கொள்ளப்பட வேண்டிய ஏராளமான நடவடிக்கைகள் படேல் முன் இருக்கின்றன. பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் நிதி கொள்கை மறு ஆய்வில், வரி விகிதம், விலைவாசி போன்றவற்றை குறைப்பது தொடர்பாக படேல் மிகுந்த நெருக்கடியை சந்திக்க வேண்டி இருக்கும். டிமானிடைசேஷன் அறிவிப்புக்கு அடுத்த மாதமான டிசம்பரில் வரி விகிதம் நிலையாகவே இருந்தது. அதை குறைப்பதன் மூலம், பொருளாதாரத்தில் நிலவி வரும் சிக்கலான சூழலை சற்று சரி செய்யலாம். உலகிலேயே அதிவேக பொருளாதார வளர்ச்சியை மேற்கொண்டு வரும் நாடு இந்தியா. தற்போது டிமானிடைசெஷன் நடவடிக்கைக்கு பிறகு அதில் ஏற்பட்டிருக்கும் நிலையற்றத் தன்மையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி செய்தாக வேண்டும். உர்ஜித் படேல் அதை செய்து காட்டுவாரா?

**தொகுப்பு – மதுரா கார்னிக்**

**நன்றி :** [குவார்ட்ஸ்]( https://qz.com/872288/for-indias-new-rbi-governor-urjit-patel-demonetisation-has-been-baptism-by-fire/)

**தமிழில் : பீட்டர் ரெமிஜியஸ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel