ஜென்சி சாமுவேல்
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் தனது காளை வென்ற பரிசுகள் பற்றியும், அந்தாண்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் குறித்தும் நினைவுகூர்கிறார் கஸ்பர். 2017ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் மிகப்பெரும் எழுச்சி ஏற்பட்டது. அந்தப் போராட்டத்துக்குப் பிறகுதான் கஸ்பருக்கு நாட்டு மாடுகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு விளையாட்டில் நாட்டு மாடுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
உள்ளூர் வெப்பநிலைக்கு ஏற்ப இந்தியாவில் ஒவ்வொரு பகுதிகளைச் சேர்ந்த மாடுகளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. மேற்கு தமிழகத்தின் குன்று நிலப்பரப்புகளில் பாரம் இழுப்பதற்கும், விவசாயத்துக்கும் பர்கூர் மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. பத்ரி மாடுகள் பால் உற்பத்திக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. பத்ரி மாடுகள் உத்தராகண்டின் மலைப்பகுதிகளுக்கு ஏற்றவை. கான்க்ரெஜ் மாடுகள் பால் உற்பத்தி மற்றும் விவசாயப் பணிகளுக்கு உகந்தவை. இவை குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களின் நிலப்பரப்பில் பயன்படுத்தப்படுகின்றன.
வேளாண் அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில் 37 நாட்டு மாட்டினங்கள் உள்ளன. காலநிலை மாற்றத்திற்கான அறிகுறிகள் அனைத்து இடங்களிலும் தெரிவதால் நாட்டு மாடுகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், நாட்டு மாடுகளால் மட்டுமே கடும் வெப்பநிலைகளைத் தாக்குப்பிடிக்க முடியும்.
விவசாயம் இயந்திர மயமாக்கப்பட்டதால் காளை மாடுகளுக்கான தேவை குறைந்துவிட்டது. பசுக்கள் கறக்கும் பாலோ வணிகப் பொருளாக மாறிவிட்டது. வேளாண் அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில் பால் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் வெளிநாட்டு மாடுகள் மற்றும் கலப்பின மாடுகளின் எண்ணிக்கை 1.6 கோடியாகும்.
கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் மீன்பிடித் துறையின் *19th Livestock Census – 2012* அறிக்கையின்படி, வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளின் விகிதம் 1992ஆம் ஆண்டில் 7 விழுக்காட்டிலிருந்து 2012ஆம் ஆண்டில் 21 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் நாட்டு மாடுகளின் விகிதம் 93 விழுக்காட்டிலிருந்து 79 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைவதால் என்ன பிரச்சினை ஏற்படும்?
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை ஏற்றங்களை மாடுகளும் உணரும். பொதுவாக, கோடைக்காலங்களில் மாடுகள் மன அழுத்தத்துக்கு ஆளாகும். ஆனால், ஜெர்சி, ஹால்ஸ்டின் – ஃப்ரீசியன் போன்ற வெளிநாட்டு மாடுகளும், கரன் சுவிஸ், கரன் ஃப்ரீஸ் போன்ற கலப்பின மாடுகளும் கோடைக்காலத்தில் மிக அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாகும்.
வெப்பத்தின் தாக்கத்தால் தர்பர்க்கர் மாடுகளில் (நாட்டு வகை) ஏற்படும் உடலியல், ரத்த மற்றும் நடத்தை மாற்றங்கள் குறித்து ஹரியானாவில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சிக் கழகம் ஆய்வு நடத்தியது. வெப்பத்தின் தாக்கத்தை நாட்டு மாடுகள் சிறப்பாகத் தாக்குப்பிடிப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்தது.
சண்முகம் என்ற விவசாயியிடம் நாட்டு மாடுகளும், வெளிநாட்டு மாடுகளும் உள்ளன. நாட்டு மாடுகள் கோடைக்காலத்தில் நன்றாகத் தாக்குப்பிடிப்பதாக அவர் கூறுகிறார். அவர் பேசுகையில், “வெளிநாட்டு மாடுகளைக் குளிர்வாக வைத்திருக்க நாங்கள் முயன்றாலும், அவற்றுக்கு மூச்சிறைப்பதுடன், வாயில் நுரை தள்ளும்” என்று கூறினார்.
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கின அறிவியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான என்.குமரவேலு பேசுகையில், “நாட்டு மாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கேயே இருக்கின்றன. அதனால், அவை இயற்கையாகவே வெப்பநிலைகளைத் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டவை” என்று கூறினார்.
வெப்பத்திலிருந்து கலப்பின மாடுகளைக் காப்பதற்காக, அவற்றைக் கூரைகளுக்குக் கீழ் பாதுகாத்து வருகின்றனர் பால் உற்பத்தியாளர்கள். ஆனால், நாட்டு மாடுகளுக்கு அந்தத் தேவை இல்லை. கலப்பின மாடுகள் உருவத்தில் பெரிதாக இருப்பதால், அவற்றைக் குளிர்விப்பது கடினமாகிறது. அதன் விளைவாக நிறைய நீரும் செலவாகிறது. மாடுகளுக்கு நீர் தேவை அதிகரிக்கும்போது நீர் இருப்பு குறைந்துவிடுகிறது. ஏனெனில் காலநிலை மாற்றத்தால் மழைப் பொழிவில் தாக்கம் ஏற்படுகிறது. இதனால் கால்நடை மேலாண்மை மிகவும் கடினமாகிவிடுகிறது.
கலப்பின மாடுகளுக்குத் தனியே தீவனம் வழங்கப்பட வேண்டும். குமரவேலு வழங்கும் தகவலின்படி, 10 லிட்டர் வரைப் பால் கறக்கும் ஒரு மாட்டுக்கு 4 கிலோ தீவனம் வேண்டும். அத்துடன் 30 கிலோ புல்லும் வழங்கப்பட வேண்டும். பிரத்யேக தீவனம் வழங்கப்படாவிடில் பால் உற்பத்தி குறைந்துவிடும்.
நாட்டு மாடுகளைப் பாதுகாப்பது குறித்து கால்நடை மருத்துவரான வெங்கடேசன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காகக் கலப்பின மாடுகளுக்கு அதிக மருத்துவ உதவிகளும், நோய்த்தடுப்பும் வழங்கப்பட வேண்டும் என்கிறார் குமரவேலு.
வெப்பம் சார்ந்த பிரச்சினைகள் அனைத்தும், மற்ற மாடுகளைக் காட்டிலும் கலப்பின மாடுகளில் அதிகமாகின்றன. தேசிய பால் ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், பால் உற்பத்தியில் ஆண்டுக்கு 3.2 மில்லியன் டன் இழப்பு ஏற்படுவதாகவும், அதைச் சரிக்கட்டுவதற்கு நாட்டு மாடுகளின் பயன்பாடு உகந்ததாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறைவான உணவு உட்கொள்ளுதல், அதிக பால் உற்பத்தி, நோய் எதிர்ப்பு சக்தி போன்ற சிறப்புகளுக்கு கேரளாவின் வெச்சூர் மாடுகள் பெயர்பெற்றவை. இம்மாடுகளின் பால் செரிமானத்துக்கு உகந்தவை.
நாட்டு மாடுகள் ஏ2 வகை பாலை உற்பத்தி செய்வதாகவும், இவ்வகைப் பால் மனித உடல்நலத்துக்குச் சிறந்தது என்றும் குமரவேலு கூறுகிறார். பால் உற்பத்தியாளர்களும் கூட கலப்பின மாடுகளின் பாலை விற்பனை செய்துவிட்டு, நாட்டு மாடுகளின் பாலையும், ஆட்டுப்பாலையும் உட்கொள்வதாகக் கூறுகின்றனர். இதற்கு அவர்கள் உடல்நலத்தையே காரணமாகக் காட்டுகின்றனர்.
நாட்டு மாடுகளைப் பாதுகாப்பதில் ஜல்லிக்கட்டு முக்கியப் பங்கு வகிப்பதாகவும், அதனால் ஜல்லிக்கட்டை ஊக்கப்படுத்த வேண்டுமெனவும் அனுகுலா கூறுகிறார். ஜல்லிக்கட்டு இல்லையென்றால் நாட்டு மாடுகளுக்கான தேவை இருக்காது என்கிறார் குமரவேலு. ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தபோது மதுரையில் புலிக்குளம் மாடுகள் விற்பனை செய்யப்பட்டதை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார் குமரவேலு.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாடுகளைக் கலப்பதின் வாயிலாக நாட்டு மாடுகளின் பால் உற்பத்தியை உயர்த்தியுள்ளார் கணேசன். அவர் பேசுகையில், “கிர் மற்றும் ரெட் சிந்தி மாடுகள் 15 லிட்டர் பாலும், சஹிவால் மாடுகள் 20 லிட்டர் பாலும் தருகின்றன” என்கிறார். ஆறு லிட்டர் பால் தரக்கூடிய தென்னிந்திய மாடுகளையும் அவர் உருவாக்கியுள்ளார்.
நாட்டு மாடுகளின் பயன்பாட்டினால் மட்டுமே வேளாண்மையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று கூறுகிறார் பிரஜ்வால். கஸ்பர் பேசுகையில், “நன்மைகளையும், தீமைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், நாட்டு மாடுகளின் பால் நமக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. முக்கியமாக, காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல்கள் இருக்கும் சூழலில் நாட்டு மாடுகள் நன்மை தரக்கூடியவை” என்று கூறி முடித்தார்.
**நன்றி:** [வில்லேஜ் ஸ்கொயர்](https://www.villagesquare.in/2018/07/20/native-cattle-breeds-gain-ground-in-tamil-nadu/)**
**தமிழில்: அ.விக்னேஷ்**
**நேற்றைய கட்டுரை:** [பணிகளுக்காக இடம்பெயரும் பெண்கள்!](http://www.minnambalam.com/k/2018/08/02/23)
�,”