�சிறப்புக் கட்டுரை: குழந்தைகளுக்கு முட்டையை மறுக்கும் அரசியல் சித்தாந்தம்!

Published On:

| By Balaji

தேவனிக் சகா

சுவாதி நாராயண் என்னும் செயற்பாட்டாளர் ‘உணவுக்கான உரிமை’ அமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அண்மையில் அரசின் தகவல்கள் மற்றும் ஊடக அறிக்கைகளைக் கொண்டு நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் வழங்கப்படும் மதிய உணவில் முட்டைகளின் சேர்ப்பு குறித்து ஓர் ஆய்வை நடத்தியுள்ளார். இந்த ஆய்வில், அரசியல் சித்தாந்தத்துக்கும், மதிய உணவில் முட்டைச் சேர்ப்புக்கும் இடையேயான தொடர்புகளை ஆராய்ந்து ஜூலை 8, 2018 அன்று அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

சுவாதியின் ஆய்வு உள்பட அரசின் ஊட்டச்சத்து விவரங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளைப் பார்க்கலாம்.

இந்தியாவில் ஊட்டச்சத்து வழங்கலில் மிக மோசமாக இருக்கும் பத்து மாநிலங்களில், வெறும் மூன்று மாநிலங்கள் மட்டுமே குழந்தைகளுக்கு முட்டை வழங்குகின்றன. அவை பிகார், ஜார்கண்ட், கர்நாடகா ஆகியனவாகும்.

பாஜகவோ அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளோ இந்தியாவில் 19 மாநிலங்களை ஆட்சி செய்கின்றன. பாஜக கட்சியிடம் மொத்தம் 15 முதலமைச்சர்கள் பொறுப்பில் உள்ளனர். ஆனால், வெறும் ஐந்து மாநிலங்கள் மட்டுமே குழந்தைகளுக்கு முட்டை வழங்குகின்றன.

பஞ்சாப், மிசோரம், டெல்லி போன்ற பாஜக ஆட்சியில் இல்லாத சில மாநிலங்களும் குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டை வழங்குவதில்லை. எனினும், பாஜகவின் மாநிலங்களே மதிய உணவில் முட்டை வழங்குவதற்குப் பெரிதும் தயக்கம் காட்டுகின்றன. அதற்குக் காரணம் அக்கட்சியின் ‘புலால் உண்ணாமை’ என்ற உணர்ச்சியும், கொள்கையுமே ஆகும்.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 2015-16இன் தகவலின்படி, இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 7.5 விழுக்காட்டினர் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதற்குக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தில் முட்டைகளைச் சேர்ப்பதே சிறந்த வழியாக இருக்குமென்று எல்லா நிபுணர்களுமே கருதுகின்றனர்.

புனேவின் ஆஷாகிரன் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரும், ஊட்டச்சத்து நிபுணருமான மன்சி பாட்டில் பேசுகையில், “குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கு முட்டை மிக உதவிகரமாக இருக்கும். ஏனெனில், தாவரங்கள் சார்ந்த புரதத்தை விட மாமிசம் சார்ந்த புரதம் சிறந்தது என்று அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன” என்கிறார்.

இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்கள் மதிய உணவுத் திட்டத்தை முன்னதாகவே அமல்படுத்தியிருந்தாலும், 2001ஆம் ஆண்டில்தான் அனைத்து மாநிலங்களும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கத் துவங்கின. இந்தியாவிலேயே முதல் முறையாக மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்திய பெருமையும், அதில் முட்டையைச் சேர்த்த பெருமையும் தமிழகத்தையே சேரும். 1989ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் கீழ் மதிய உணவுகளில் முட்டையைச் சேர்க்கும் திட்டம் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக இரண்டு வாரங்களுக்கு ஒரு முட்டை வழங்கப்பட்டது, பின்னர் ஒரு வாரத்துக்கு ஒரு முட்டை என்று உயர்த்தப்பட்டது.

எடை குறைவாக உள்ள குழந்தைகளின் விகிதம் குஜராத்தில் 39.3 விழுக்காடாகவும், மத்தியப் பிரதேசத்தில் 42.8 விழுக்காடாகவும் உள்ளது. பாஜக ஆட்சியிலிருக்கும் இம்மாநிலங்களில், குழந்தைகளுக்கான மதிய உணவில் ஏன் முட்டை வழங்கப்படுவதில்லை?

பாஜக ஆளும் மாநிலங்களின் அரசு அதிகாரிகளிடம் பேசியபோது, புலால் உண்ணாதவர்களின் உணர்வைக் காயப்படுத்த விரும்பவில்லை என்று கூறிவிட்டனர். குஜராத்தின் மதிய உணவுத் திட்ட ஆணையரான ஆர்.இ.திரிவேதி பேசுகையில், “குஜராத்தில் பெரும்பாலான மக்கள் புலால் உணவு உண்ணாதவர்களாக உள்ளனர். மதிய உணவில் கூடுதலாக புரதம் நிறைந்த உணவாகப் பருப்புகளை தினமும் வழங்குகிறோம். ஆகையால் நாங்கள் முட்டை வழங்குவதில்லை” என்று கூறினார்.

குஜராத்தில் புலால் உண்ணாதவர்களின் விகிதம் குறித்து திரிவேதி கூறியது உண்மைதான். உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்த சமீபத்திய ஆய்வின்படி, குஜராத் மக்கள்தொகையில் 61 விழுக்காட்டினர் புலால் உணவு உண்ணாதவர்கள். எனினும், அனைத்திந்திய அளவில், 70 விழுக்காடு இந்தியர்கள் புலால் உணவு உண்கின்றனர்.

டெல்லியிலுள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரான பூர்ணிமா மேனன் பேசுகையில், “புலால் அல்லாத உணவில் உள்ள புரதத்தையும், புலால் உணவில் உள்ள புரதத்தையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். புலால் உணவிலுள்ள புரதத்தின் தரம் மற்ற உணவுகளை விட உயர்வாக உள்ளது” என்று தெரிவித்தார்.

இமாசலப் பிரதேசத்திலும் புலால் உண்ணாதவர்கள் குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அம்மாநிலத்தின் மதிய உணவுத் திட்ட அதிகாரியான நரேஷ் சர்மா பேசுகையில், “மதம் மற்றும் கலாச்சார காரணங்களால் நாங்கள் முட்டை வழங்குவதில்லை. இமாசலப் பிரதேசத்தின் மக்கள் முட்டையைப் புலால் உணவாகக் கருதுகின்றனர். ஆகையால், குழந்தைகளுக்கு முட்டை வழங்கினால் சில பெற்றோர் பிரச்சினை உண்டாக்கக் கூடும். சர்ச்சைகளைத் தவிர்க்க விரும்புவதால் நாங்கள் முட்டை வழங்குவதில்லை” என்று கூறினார்.

அம்பேத்கர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியரான தீபா சின்ஹா ‘உணவுக்கான உரிமை’ செயற்பாட்டாளருமாக உள்ளார். அவர் பேசுகையில், “பாஜக ஆட்சி செய்யாத பஞ்சாப், டெல்லி, மிசோரம் போன்ற மாநிலங்களும் முட்டை வழங்குவதில்லை. ஆனால் பாஜக பெரும்பான்மை பெற்ற ஜார்கண்ட் முட்டை வழங்குகிறது. ஆனால், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், முன்னேறிய சாதியினரின் இந்து உணர்வுகளுக்கு அஞ்சி, முட்டை வழங்குவது குறித்துப் பேசக் கூட முடியாது. பல ஆண்டுகளாக உணவில் முட்டையைச் சேர்க்கும்படி செயற்பாட்டாளர்கள் கோரி வருகின்றனர். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் கலாச்சார விவகாரங்களால் முட்டை வழங்குவதற்கு எதிர்ப்பு எழுகிறது” என்று கூறினார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான மனிஷா சச்ரா இந்து வலதுசாரிகள் குறித்தும், அவர்களின் சாத்விக உணவு சித்தாந்தம் குறித்தும் ஆய்வு நடத்தியுள்ளார். அவர் பேசுகையில், “சங் பரிவாரின் பிரிவான பாஜக, சித்தாந்த ரீதியாக இந்துத்துவாவின் அம்சங்களாக மேல்சாதி இந்துக்களின் நம்பிக்கையைக் கடைப்பிடித்து வருகிறது. இதில் சாத்விக உணவும் ஒன்று. சாத்விக உணவில் புலால் உணவு, வெங்காயம், பூண்டு போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முட்டைகளுக்கு உணவிலிருந்து விலக்கு அளித்ததில் ஒரு மிகப்பெரிய உணவரசியல் உள்ளது” என்று கூறினார்.

டெல்லியிலும் மதிய உணவுத் திட்டத்தில் முட்டைகளை வழங்குவதாக ஆம் ஆத்மி கட்சி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டது.

அருணாசலப் பிரதேசத்தின் 2018-19 மதிய உணவுக் கொள்கையில், “குறைவான விலையில் பச்சைக் காய்கறிகளும், பழங்களும் கிராமப்புறப் பகுதிகளில் கிடைக்கின்றன. இவை மதிய உணவில் முக்கியப் பொருட்களாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் முட்டைகள் கிடைப்பதுமில்லை, விலை உயர்வாகவும் உள்ளன” என்று கூறப்பட்டுள்ளது. ஆக, நிதி ஆதாரம் இல்லாதது மற்றும் உற்பத்திக் குறைபாட்டாலும் அருணாசலப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் முட்டை வழங்கப்படுவதில்லை என்பது விளங்குகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் முட்டைகளின் விலை மிக உயர்வாக இருப்பதால் அரசால் கொள்முதல் செய்யமுடிவதில்லை. இதுபற்றி சுவாதி நாராயண் பேசுகையில், “முட்டை வழங்குவதற்குத் தேவையான நிதியுதவியை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசால் வழங்கியிருக்க முடியும். ஆனால் மத்திய அரசு அவ்வாறு செய்யவில்லை” என்று கூறுகிறார்.

மதிய உணவில் முட்டை வழங்குவதற்கு விலை மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளதாக முன்னாள் மத்திய சுகாதாரத் துறை செயலாளரான கே.சுஜாதா ராவோ தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் முட்டை உற்பத்தி செய்வதை ஊக்குவித்து, பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு முட்டை விநியோகித்தால் சிறப்பாக இருக்கும். அரசு மட்டுமல்லாமல் கிராமப்புற சமூகங்களும் இதில் ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

மதிய உணவில் முட்டையைச் சேர்ப்பது குறித்து சில எச்சரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. மன்சி பாட்டில் பேசுகையில், “குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு இருந்தால், அவர்களது உணவில் முட்டையைச் சேர்ப்பதற்குப் பதிலாக முட்டையை அறிமுகப்படுத்த வேண்டும். உடனடியாக முட்டை சேர்க்கப்பட்டால் அவர்களது உடலில் பாதிப்பு ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, வாரத்துக்கு 2 முதல் 3 முட்டைகளை வழங்கலாம். பின்னர், மெதுவாக எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ளலாம். உடலுக்குக் கொழுப்பும், மாவுச்சத்தும் வேண்டுமென்பதை நாம் உணர வேண்டும். ஊட்டச்சத்துகள் சரியான விகிதத்தில் கலந்து அளிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

கோழி வளர்ப்புப் பண்ணைகளில் பறவைகள் மிகவும் துன்புறுத்தப்படுவதால், புலால் அல்லாத சைவ உணவே சிறந்தது என்று கால்நடை ஆர்வலர்கள் கூறுகின்றனர். கோழி வளர்ப்புப் பண்ணைகளின் தரம் உயர்த்தப்பட வேண்டுமென்பதை சுவாதி நாராயண் ஒப்புக்கொள்கிறார். ஆனால், அந்த ஒரு காரணத்தால் மட்டும் குழந்தைகளுக்கு முட்டை மறுக்கப்படக் கூடாது என்று அவர் கருதுகிறார்.

**நன்றி:** [இந்தியா ஸ்பெண்ட்](http://www.indiaspend.com/cover-story/bjp-states-most-resistant-to-eggs-in-mid-day-meals-cite-vegetarian-sentiments-72283)

**தமிழில்: அ.விக்னேஷ்**

**நேற்றைய கட்டுரை:** [விவசாயக் குடும்பங்களின் அவலநிலை!](https://minnambalam.com/k/2018/08/22/22)

**மின்னஞ்சல் முகவரி**: [feedback@minnambalam.com](mailto:feedback@minnambalam.com)

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**

**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**

**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**

**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share