�சிறப்புக் கட்டுரை: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அணு ஆயுதப் போர் நடக்குமானால்….

Published On:

| By Balaji

(வாஷிங்டனிலிருந்து பிடிஐ நிறுவனம் அனுப்பிய செய்தி)

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடக்குமானால் ஒரே வாரத்தில் 50 முதல் 125 மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள் என்றும், இது இரண்டாம் உலகப் போர் நடந்த ஆறு ஆண்டுகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வறிக்கையொன்று கூறுகிறது.

இந்தியா, பாகிஸ்தான் ஆகியன தலா 150 அணு ஆயுதங்களை (போர் விமானங்கள், கப்பல்கள் மூலமும் ஏவுகணைகள் மூலமும் எடுத்துச் செல்லப்படுபவை – மொழிபெயர்ப்பாளர்) வைத்திருக்கின்றன என்றும் இவற்றின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 200 ஆக உயரும் என்றும் இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அணு ஆயுதப் போர் நடக்குமானால் உலகில் மனிதர்களின் இறப்பு விகிதம் இரட்டிப்பாகிவிடும் என்று கொலொரடோ பூல்டெர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ப்ரையன் டூன் கூறுகிறார். “இத்தகைய போரில் அணுகுண்டுகள் எந்த இடங்களைக் குறியிலக்காகக் கொண்டுள்ளனவோ… அவற்றோடு சேர்த்து உலகம் முழுவதையும் அச்சுறுத்தும்” என்று நியூ ப்ரன்ஸ்விக்கிலுள்ள ருட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும் மேற்சொன்ன ஆராய்ச்சியாளர்களில் ஒருவருமான ஆலன் ரோபோக் கருதுகிறார்.

2025இல் நடக்கக்கூடும் என்று இந்த ஆராய்ச்சியாளர்களால் அனுமானிக்கப்படும் இதன் போர் சூழ்நிலை பற்றிய ஆய்வுக்கட்டுரையை ’ஜேர்னல் ஆஃப் சயன்ஸ் அட்வான்ஸெஸ்’ என்னும் ஏடு வெளியிட்டுள்ளது. 2025இல் இரண்டு அண்டை நாடுகளுக்கும் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 400 முதல் 500 வரை இருக்கும் என்று கூறுகிறது அந்த அறிக்கை. “இரண்டு நாடுகளும் மிக வேகமாகத் தங்கள் ஆயுதங்களையும் ராணுவத் தளவாடங்களையும் அதிகரித்து வருகின்றன. இரண்டு நாடுகளிலும் பெரும் மக்கள்தொகை உள்ளது. எனவே ஏராளமானோர் இந்த ஆயுதங்களாலும் ராணுவத் தளவாடங்களாலும் கிடங்குகளால் அச்சுறுத்தப்படுகின்றனர். போதாததற்குத் தீர்க்கப்படாத காஷ்மீர் பிரச்சினை வேறு உள்ளது” என்கிறார் ஆராய்ச்சியாளர் டூன்.

அத்தகைய போரில் வெடிக்கும் அணு குண்டுகளிலிருந்து 16 முதல் 36 மில்லியன் டன் கரிப்புகை –மிகச் சிறிய நுண்துகள்களைக் கொண்ட புகை – வெளியேறி மேல் வளிமண்டலத்துக்குச் சென்று உலகம் முழுவதற்கும் இரண்டு வாரங்களில் பரவும் என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்தப் புகை கரி சூரியக் கதிர்வீச்சை உட்கிரகித்துக்கொண்டு காற்றைச் சூடாக்கி, அந்தப் புகையைத் துரிதமாக மேல் நோக்கிச் செல்ல வைக்கும். இதன் காரணமாக, புவிக்கோளத்துக்கு வந்து சேரும் சூரிய ஒளியில் 20 முதல் 35 விழுக்காடு வரை குறையுமாதலால் புவியின் மேற்பரப்பு 2 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் அளவுக்குக் குளிர்ச்சியடையும்.

உலகம் முழுவதும் மழைப்பொழிவு 15 முதல் 20 விழுக்காடு வரை குறையும். புவி குளிர்ச்சியடைவதும் மழைப்பொழிவு குறைவதும் சேர்ந்து பிரதேச ரீதியான பாதிப்புகளை இன்னும் அதிகரிக்கும்.

உலகளவில் தாவரங்களின் வளர்ச்சி 15 முதல் 30 விழுக்காடு வரையிலும் கடல்வாழ் உயிரினங்களின் உற்பத்தி 5 முதல் 15 விழுக்காடு வரையிலும் குறையும். அணுப் போரால் ஏற்படும் அழிவுகளிலிருந்து மீண்டு வர பத்தாண்டுகளுக்கு மேல் பிடிக்கும். அதற்குக் காரணம் மேல் வளிமண்டலத்தில் புகை இருந்து கொண்டிருக்கும் காலம் நீடித்திருக்கும் என்பதுதான்.

உலகில் ஒன்பது நாடுகளில் அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால், அணு ஆயுதங்களைத் துரிதமாக அதிகரித்துக்கொண்டு வரும் நாடுகள் பாகிஸ்தானும் இந்தியாவும் மட்டுமே என்று கூறும் ரோபோக், இந்த இரண்டு அணு ஆயுத நாடுகளுக்குமிடையே நீடித்து வரும் பிணக்கு – குறிப்பாக காஷ்மீர் தொடர்பான பிணக்கு – ஓர் அணு ஆயுதப் போரின் பின்விளைவுகளைப் புரிந்து கொள்வதை முக்கியமானதாக்குகிறது என்கிறார்.

2025ஆம் ஆண்டில் இந்த அணு ஆயுதங்களின் வெடிப்புச் சக்தி 15 கிலோ டன்களிலிருந்து (1945இல் அமெரிக்கா ஹிரோஷிமாவில் வீசிய அணு குண்டின் வெடிப்புச் சக்தி) – சில நூறு கிலோ டன்கள் வரை இருக்கக்கூடும் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு போர் நடக்குமானால், அணு ஆயுதங்களால் ஏற்படுத்தப்படும் நேரடி விளைவுகளால் 50 முதல் 120 மில்லியன் மக்கள் இறப்பர். இது போக உலகம் முழுவதிலும் பட்டினியால் சாகின்றவர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருக்கும்.

விவேகமான முறையில் நடத்தப்படும் போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாது என்றாலும் தற்செயலாகவோ அல்லது அவற்றை ஏவப் பயன்படுத்தப்படும் கருவிகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை எவரேனும் ‘ஹேக்கிங்’ செய்தாலோ, பீதியின் காரணமாகவோ, அல்லது பித்தம் தலைக்கேறிய உலகத் தலைவர்களாலோ ஆணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது நேரிடலாம் என்று ரோபோக் சொல்கிறார்.

அவரைப் பொறுத்தவரை, தற்செயலாக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி அவற்றை ஒழித்துக் கட்டுவதுதான்.

**தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை**

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும் எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

நன்றி:[The Telegraph, Kolkatta,](4.10.2019 https://www.telegraphindia.com/india/terrifying-india-and-pakistan-nuclear-war-toll-projected/cid/1709721?ref=india_india-page&utm_source=pushengage&utm_medium=push&utm_campaign=IND-14-NA)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share