�சினி டிஜிட்டல் திண்ணை: அரசியல் அனல் – தவிர்க்கும் ரஜினி; நெருங்கும் விஜய்

Published On:

| By Balaji

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகிய இரண்டும் ஒரே சமயத்தில் ஆன்லைன் வந்து டைப் செய்ய தொடங்கியதை typing… என்ற வார்த்தை காட்டிக்கொடுத்தது. அதில் முதலில் டைப் செய்து முடித்தது வாட்ஸ் அப்தான். ஆனாலும், ஃபேஸ்புக் முடிக்கும் வரை காத்திருந்து, ஃபேஸ்புக் போஸ்ட் செய்த ஸ்டேட்டஸைப் படிக்கத் தொடங்கியது.

“விஜய் சொன்னாரா, இல்லையா எனத் தெரியாமல் அவர் ரசிகர்களும், தொழிலாளிகளும் குழப்பமா இருந்தது குறித்து விசாரித்தபோது, ‘ஷூட்டிங்கை தமிழ்நாட்டுக்குள்ளவே நடத்துங்க. அப்பதான் நம்ம மக்களுக்கு வேலை கிடைக்கும்’ என்று விஜய் கூறியது உண்மை என்பது தெரியவந்தது. இது ஏன் என்று விசாரித்தபோது, “படத்துல அட்லீ வைத்திருந்த சில வசனங்களையும், மீடியால சமீபகாலமா அதிகம் வெளிப்படும் தகவல்களையும் சேர்த்துப் பார்த்த விஜய், தன் படத்துல வேலை செய்யும் ஆட்கள் தொடர்பான தகவல்களைக் கேட்டு வாங்கி பார்த்திருக்கார். சினிமாவின் சில பிரிவுகளைத் தாண்டி மற்ற எல்லாவற்றிலும் வெளிமாநிலத்தவர்கள் அதிகம் இருப்பதை அறிந்து, நம்ம இங்கே ஷூட்டிங் நடத்தினால்தான் இவங்களுக்குப் பிழைப்பு என்று ரிப்போர்ட் கொடுத்தவர்கள் சொல்ல, அப்படியே செய்திடலாம் என்று ஓகே சொல்லிவிட்டார்” என்று ஸ்மைலியுடன் பதிலனுப்பினார் படக்குழுவுக்கு நெருக்கமானவர். போட்டோ ஷூட்டுக்காக ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதையும் கேன்சல் செய்துவிட்டு, சென்னையிலேயே நடத்தச் சொல்லியிருக்கிறார். அதிலும், அவரது வீடு அமைந்துள்ள ஈசிஆர் பக்கத்திலேயே, படூர் பகுதியில் உள்ள ஓரிடத்தில் விஜய் 63 படத்துக்கான போட்டோஷூட்டை முடித்திருக்கிறார்கள்” என்ற ஃபேஸ்புக்கின் ஸ்டேட்டஸில் “அப்ப, தேர்தல் களத்தை விஜய் கவனிச்சிக்கிட்டு இருக்கார் தானே?” என்ற கமெண்ட் செய்துவிட்டு, தான் டைப் செய்து வைத்திருந்ததை அடுத்த கமெண்டில் சேர்த்தது வாட்ஸ் அப்.

“விஜய் இப்படி தொழிலாளர்களுக்காகச் செய்ததைப் பாராட்டிக்கொண்டே லைட்டை ரஜினி பக்கம் திருப்பியபோதுதான், ரஜினி 166 ஷூட்டிங் மும்பையில் தொடங்குகிறது என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் தொழிலாளர்கள் பலரும் செம அப்செட். ‘ஒரு ரஜினி படத்தில் நடிப்பதென்பது இரண்டு விஜய் படத்தில் நடிப்பதற்கும், மூன்று சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பதற்கும் சமம்’ என்ற தொழிலாளர்களின் கணக்கில் தவறில்லை. ரஜினி படம் என்றால் பிரமாண்டமான செட் இருக்கும் என்பதால், இரண்டு பேட்டாவாகக் கிடைக்கும். சம்மர் லீவுக்கு எல்லா நட்சத்திரங்களும் வெளிநாட்டுக்குப் பறக்கும்போது ஏற்படும் குறையைத் தவிர்க்க, வருடத்தின் ஆரம்பத்திலேயே தொடங்கப்படும் பெரிய பட்ஜெட் படங்கள் அதிகம் உதவும் என்பதால் ரஜினியின் படத்தை அதிகம் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஒன்றரை மாத ஷெட்யூலை முடித்துவிட்டு, ஜூன் மாதத்தில்தான் ரஜினியின் குழு சென்னையில் தஞ்சமடையப் போகிறது என்பது ஷாக் நியூஸாக வந்து விழுந்திருக்கிறது. இந்த ஷெட்யூல் பிரச்சினைக்கு ரஜினி தரப்பில் சொல்லும் பதில் வேறாக இருக்கிறது. எலெக்‌ஷன் நேரம் என்பதால், ரஜினியின் வாய்ஸ் எந்தப் பக்கம் என்பதை அறிய மீடியாக்கள் கடும் முயற்சியில் இருக்கின்றன. அரசியல் அனலில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே, ரஜினி அதிகம் விரும்பிய பரமஹம்ச யோகானந்தரின் ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ ஒலி நூல் வெளியீட்டு விழாவுக்கு மார்ச் 30ஆம் தேதி மிகவும் ரகசியமாகச் சென்றுவந்தார் ரஜினி. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும், ரஜினியின் வருகை ரகசியமாக இருக்க வேண்டும் என மிகவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தலுடன், சட்டமன்ற இடைத் தேர்தலும் தமிழகத்தில் நடைபெறுவதால் அடுத்த சில மாதங்களுக்குத் தமிழகம் சூட்டுடன் காணப்படும் என்பதால், மும்பையில் முதல் ஷெட்யூலைத் திட்டமிட்டிருக்கின்றனர் ரஜினி தரப்பில். இந்தக் காரணத்தையெல்லாம் சொல்லியே தமிழக ஷெட்யூலுக்கு யூனிட்களை புக் செய்து வருகின்றனர் தயாரிப்பு தரப்பினர்” என்ற வாட்ஸ் அப்பின் மெசேஜுக்கு லைக் போட்டு “அரசியல் அனலிலிருந்து ரஜினி விலகிச் சென்றுகொண்டிருக்கும்போது, விஜய் நெருங்கி வருகிறாரே” என்று கமெண்டுடன் காப்பி பேஸ்ட் செய்துவிட்டு லாக் அவுட் ஆனது ஃபேஸ்புக்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share