ராஜன் குறை
மிக விரைவாகப் பரவும் கொரோனா என்ற தொற்று நோயின் தாக்கத்தைக் குறைக்க மக்கள் கலந்து இயங்குவதைத் தவிர்க்க சமூக, பொருளாதார இயக்கத்தை 21 நாட்கள் நாடெங்கும் நிறுத்திவைக்க முடிவு செய்தது இந்திய அரசு. கடந்த செவ்வாய் மார்ச் 24ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நாட்டு மக்களுடன் பேசிய பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டு, அன்று நள்ளிரவிலிருந்து இந்த லாக் டவுண் எனப்படும் இயக்க நிறுத்தம் தொடங்கும் என்று அறிவித்தார்.
முற்றிலும் எதிர்பாராதபடி மும்பை, டெல்லி ஆகிய பெருநகரங்களிலிருந்து லட்சக்கணக்கான எளிய மக்கள் போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் தங்கள் சொந்த ஊரை நோக்கி 300, 400 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே செல்ல தலைப்பட்டார்கள். இவர்களில் சிலர் நடையில் களைத்துப் போய் சரியான உணவு இல்லாமல் இறந்தே போன செய்திகள் கடந்த இரு நாட்களாக ஊடகங்களில் அடிபடுவது கணிசமான அதிர்ச்சியையும், காலம் கடந்த மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களுக்கு ஏற்படுத்திய சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
இவ்வளவு பெரிய விபரீதம் எப்படி நிகழ்ந்தது? ஏன் அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இப்படி நகர்ப்புற உதிரிப்பாட்டாளி வர்க்க மக்கள் சமூக இயக்கம் நின்றால் ஊருக்குச் செல்லவே முயல்வார்கள் என்று தோன்றவில்லை? ஏன் அவர்களுக்குப் போக்குவரத்து வசதிகளைச் செய்து தந்துவிட்டு லாக் டவுண் அறிவிக்கவில்லை? இப்படி ஒரு பெரும் மக்கள் கூட்டம் நகரங்களில் வசிப்பதை இவர்கள் அறியவில்லையா? அவர்கள் கண்களுக்குப் புலனாகவில்லையா அல்லது கருத்துக்குப் புலனாகவில்லையா?
**கருத்துக்குப் புலனாகாத மக்கள்**
கண்ணுக்குப் புலனாகாத ஒன்றைப்பற்றி பேசுவோம். அது என்ன கருத்துக்குப் புலனாகாத மக்கள்? அவர்களை மத்தியதர வர்க்கத்தினரான நாம் தினமும் பார்ப்போம்; இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் மத்தியதர வர்க்கத்தினராகத்தான் இருப்பார்கள் என்று நான் அனுமானிப்பதால் நாம் பார்ப்போம் என்று எழுதுகிறேன். ஆனால், நாம் பார்க்கும் அவர்கள் நம் கருத்தில் பெரும்பாலும் தங்குவது இல்லை. அவர்களைக் குறித்து செய்தித்தாள்களில் நாம் படிப்பதில்லை; அவர்களை நாம் தொலைக்காட்சி சீரியல்களில் பார்ப்பதில்லை. அவர்கள் அமைப்பாகத் திரண்டு போராடுவதில்லை. அவர்களை நாம் நேரில் பார்த்தாலும், அவர்கள் அருவமாகவே இருக்கிறார்கள்.
உதாரணமாக நாம் குளிரூட்டப்பட்ட திரையரங்கில் படம் பார்ப்போம். பாப்கார்ன் ஆர்டர் செய்திருப்போம். அரை இருளில் ஒரு ஆணா, பெண்ணோ நமக்கு அந்த பாப்கார்னை கொண்டு வந்து கொடுப்பார்கள். இடைவேளையில் “ஒப்பனை” அறைக்குச் செல்வோம். அங்கே யாரேனும் தரைகளைத் துடைப்பானால் துப்புரவு செய்துகொண்டிருப்பார்கள். அவர்களை நாம் பார்ப்போம். ஆனால் அவர்களைக் குறித்து எதுவும் யோசிக்க வேண்டிய தேவை நமக்குக் கிடையாது.
இவர்களில் பலர் நமக்கு இடையூறாகவும் தோன்றுவார்கள். எலெக்ட்ரிக் டிரெயினில் போகும்போதோ, நகரச் சந்திப்புகளில் சிக்னலுக்காக நிற்கும்போதோ, கடற்கரையிலோ, சுற்றுலாத் தலங்களிலோ, கோயில்களிலோ இவர்கள் ஏதாவது ஒரு பொருளை நம்மிடம் வாங்கச் சொல்லுவார்கள். சிடி தகடுகள், பொம்மைகள், கற்பூரம், கீ செயின் என்று ஏதேதோ விற்பார்கள். இது போன்ற பொருட்களை விற்று அவர்களால் ஒரு ஊதியத்தை ஈட்ட முடியுமா என்பது வியப்பாக இருக்கும்.
சமீப காலங்களில் ஒரு புதிய சமூக யதார்த்தத்தையும் பார்க்கிறோம். உணவகத்துக்குப் போனால், முடிதிருத்தப் போனால் அங்கே அந்நியமான முக அமைப்புடன் தமிழ் பேச முடியாமலோ. அல்லது ஒரு சில வார்த்தைகளில் சமாளித்துக் கொண்டோ பணியாளர்கள் இருப்பார்கள். அவர்கள் சிலரது முக அமைப்பு அவர்கள் வடகிழக்கு மாநிலத்தவர் என்று கூறிவிடும். வேறு சிலர் வடஇந்தியர்களாக இருப்பார்கள். அவர்கள் ஏன் தமிழகத்துக்கு வந்து வேலை செய்கிறார்கள்? அவர்களை யார் இங்கே கூட்டி வருகிறார்கள் என்று தெரியாது. அது குறித்தும்கூட நாம் பெரிதும் சிந்திப்பதில்லை; விவாதிப்பதில்லை.
மேலே சொன்ன பலவகைப்பட்ட உதிரி தொழிலாளர்களான இவர்கள் எல்லாம் எங்கே தங்குகிறார்கள்? எப்படி உண்கிறார்கள்? தனியாக இருக்கிறார்களா? குடும்பத்துடன் இருக்கிறார்களா? இது போன்ற அம்சங்களை நான் அறிந்தவரை யாரும் அதிகம் யோசிப்பதில்லை. அதனால்தான் அவர்களைக் கருத்துக்குப் புலனாகாத மக்கள் என்று அழைக்கலாம் என நினைக்கிறேன். இவர்களில் பெரும்பாலோர் நிலையான வருவாய் இல்லாதவர்கள்; முறையான தங்குமிடம், குடும்ப வாழ்க்கை போன்றவை அமையாதவர்கள். குடும்பத்தைப் பிரிந்து வந்து கிராமங்களிலிருந்தோ, எங்கெங்கிருந்தோ வந்து நகரங்களில் பிழைப்பு நடத்துபவர்கள்.
**முதலீட்டிய சமூக உருவாக்கம்**
இந்தியா கடந்த முப்பதாண்டுகளாக துரிதமான முதலீட்டிய வளர்ச்சியை அடைய முயன்று வருகிறது. நரசிம்ம ராவ் 1991ஆம் ஆண்டு பிரதமர் ஆனதிலிருந்து இந்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அந்நிய முதலீட்டை அனுமதித்தல் என்பது இதில் முக்கியமான திருப்பம். ஏற்கனவே நிகழ்ந்து வந்த நகர்மயமாதல், கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் புலம்பெயர்தல் போன்றவை கடும் வேகம் பிடித்தன.
புள்ளி விவரங்களை துல்லியமாக யோசிக்காமல் ஒரு யூகத்தில் சொன்னால் இந்தியாவின் 130 கோடி பேர்களில் ஒரு கோடி பேர் பணக்காரர்கள் என்ற வகைப்பாட்டில் வருவார்கள் என வைத்துக் கொள்ளலாம். இவர்களுக்கு அடுத்து பல அடுக்குகளில் நிலையான வருமானமும், சொத்துகளும் உள்ள சுமார் நாற்பது கோடி பேரை மத்தியதர வர்க்கம் எனலாம். மேலும் ஒரு 20 கோடி பேரை அதற்கு அடுத்த நிலையில் கீழ் மத்தியதர வர்க்கத்தில் ஓரளவு நிலையான வருவாய் உள்ளவர்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.
இதெல்லாம் அதிகப்படி அறுபத்தைந்து கோடி ஆனாலும், அதற்கும் கீழே இருக்கும் ஐம்பது சதவிகித மக்கள் எப்படிப்பட்ட வருமானத்தைக் கொண்டு வாழ்கிறார்கள் என்பதைக் கூறுவது கடினம். இவர்களில் பெரும்பாலோர் தினக்கூலிகளாக, பல்வேறு சுய தொழில்கள், சிறு வியாபாரங்கள் செய்பவர்களாக, உதிரிகளாக இருக்கிறார்கள். இந்த வகையினரில் ஒரு பிரிவினர் சுலபமாகக் கிராமத்திலிருந்து மிகக் குறைந்த வருவாய் உள்ள வேலைகளுக்காகச் சிறு நகரங்கள், நகரங்கள், பெரு நகரங்களுக்குக் குடிபெயர்கிறார்கள். இவர்களே கருத்தில் புலனாகாத நகரவாசிகள்.
நிலையான வருமானம், ஓரளவு நிலையான வருமானம் கொண்ட ஐம்பது சதவிகித மத்தியதர வர்க்கமே மிகப்பெரிய நுகர்வுப் பரப்பை இந்தியாவில் உருவாக்கியுள்ளது. இந்த ஐம்பது சதவிகிதம் பேரின் நுகர்வுக்காகப் பொருட்களையும், சேவைகளையும் வழங்கும் தொழில்களை நடத்தும் ஒரு சதவிகிதப் பணக்கார வர்க்கம் உள்ளது.
அரசு ஐம்பது சதவிகித எளியோருக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கத்தான் செய்கிறது. வெகுஜன, தேர்தல் அரசியலில் இவர்களைச் சுத்தமாகப் புறக்கணிக்க முடியாது என்பதால் இவர்களை உள்ளடக்கிய பல நலத்திட்ட உதவிகள் உருவாக்கப் படத்தான் செய்கின்றன. நூறு நாள் வேலைத்திட்டம் போன்றவை கிராமப்புறங்களில் உதவிகளை செய்கின்றன. ஆனாலும் அமைப்பு சார் தொழிலாளர்கள் உள்ளடங்கிய நுகரும் வர்க்கத்துக்கும், அமைப்பு சாராத உதிரி பாட்டாளி வர்க்கத்துக்கும் கணிசமான வேறுபாடுகள் உள்ளன. அதில் முக்கியமானது புலம்பெயர்ந்து சென்று வேலை செய்யும் நிலை.
கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும், பெரு நகரங்களுக்கும் செல்லுதல் என்பது மிகப்பெரிய அளவில் கடந்த முப்பதாண்டுகளில் நிகழ்ந்துள்ளது. இவர்கள்தான் நகரங்களில் உணவகங்களில், மால்களில், பெட்ரோல் பங்குகளில், ஏராளமான உதிரித் தொழில்களில், தெருவோர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்ந்து கண்ணுக்குப் புலனானாலும், கருத்துக்குப் புலனாக மாட்டார்கள். இவர்கள் நகரங்களில் மிகக் குறைந்த வசதிகளுடன் தங்கியுள்ளார்கள். இவர்களது குறைந்த வருவாய் மிகப்பெரிய பொருளாதார இயக்கத்தில் கசிந்து வருவது. கருத்தில் புலனாகாத உதிரி பாட்டாளிகள் நுகர்வுச் சமுதாயத்தின் பொருளாதார இயக்கத்தில் ஒட்டுண்ணி வாழ்க்கை நடத்துபவர்களாக இருக்கிறார்கள். அந்த இயக்கம் குறைந்தால், ஓய்ந்தால் முதலில் பாதிக்கப்படுவது இவர்கள்தான்.
**கொரோனா தடுப்பின் மத்தியதர வர்க்கப் பின்னணி**
கொரோனா நோய் தொற்று குறித்து ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிய நாள் முதலே அது மத்தியதர வர்க்கத்தை மனத்தில் கொண்டுதான் நிகழ்ந்தது. அனைவரும் வீட்டினுள் இருங்கள்; சமூக விலக்கம் செய்து கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் ஆறடி இடைவெளி விட்டுச் செயல்படுங்கள் போன்ற அறிவுரைகள் எல்லாமே மத்தியதர நுகரும் வர்க்கத்தை நோக்கிய அறிவுரைகள்தாம்.
புலம்பெயர்ந்த உதிரி பாட்டாளி மக்களுக்கு இவை முற்றிலும் தொடர்பற்றவை. முதலில் அவர்கள் வேலை செய்ய மட்டுமே நகரங்களில் இருக்கிறார்கள், அவர்களுக்கு முறையான வசிப்பிடம் கிடையாது. சமூக பொருளாதார இயக்கம் நின்றுவிட்டால் அவர்களுக்கு வருமானம் கிடையாது என்பது மட்டுமல்ல, அவர்களில் பலர் அது போன்ற ஒரு சமூக விலக்க வாழ்க்கைக்கான சாத்தியத்துடன் நகரங்களில் வசிக்கவில்லை. உதாரணமாக பலர் அவர்கள் வேலை செய்யும் உணவகங்களிலேயே தங்கிக்கொள்வார்கள். அதிலேயே சாப்பிடுவார்கள். பத்து பேர், பதினைந்து பேர் கும்பலாக ஓர் அறையில் தங்கியிருப்பார்கள். “அங்காடித் தெரு” படம் பார்த்திருப்பீர்கள்தானே? அது போலத்தான். அந்த உணவகம் இயங்குவதை நிறுத்திவிட்டால் அவர்கள் அங்கே எதற்காக வசிக்க வேண்டும் என்பதுடன், அதில் எந்த சமூக விலக்கமும் சாத்தியமில்லை.
தவிரவும் இது சாதாரண விடுமுறையல்ல. மிகக் கொடூரமான ஒரு நோய் பரவுகிறது என்ற நிலையில் நிகழும் லாக் டவுண். மத்தியதர வர்க்கத்தினர் அவர்கள் நண்பர்கள், உறவினர்களைச் சந்திக்கவே அஞ்சி வீட்டுக்குள் இருக்கிறார்கள். அடுக்கு மாடி குடியிருப்புகளில்கூட ஒரு ஃபிளாட்டிலிருந்து, இன்னொரு ஃபிளாட்டிற்கு யாரும் செல்வதில்லை. வாட்ஸ்அப் செய்கிறார்கள். அவ்வளவு அச்சம். அந்த அச்சம் உதிரி பாட்டாளி வர்க்கத்தினருக்கு இருக்காதா? மாநில அரசுகள் நாங்கள் சாப்பாடு தருகிறோம் என்று சொன்னால் மட்டும் போதுமா? அவர்கள் சமூகரீதியாகத் தனிமைப்பட முடியாமல் எப்படி தொற்றுநோயை எதிர்கொள்வார்கள்?
ஆட்சியாளர்களால் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நுகர்வுச் சமுதாயமான மத்தியதர வர்க்கத்தாலும் இந்தக் கருத்துக்குப் புலனாகாத மக்களை குறித்து யோசிக்க முடியவில்லை. அவர்கள் பேருந்து நிலையங்களில் குவிவதைப் பார்த்து “ஐயோ, இவர்கள் ஏன் ஊருக்குச் செல்கிறார்கள்? நோய் பரவிவிடுமே?” என்றுதான் பலரும் நினைத்தார்கள். அக்கறையுடனும், பரிவுடனும்தான் அப்படி நினைத்தார்கள். ஆனால் அதில் கருத்துக்குப் புலனாகாத வாழ்நிலை குறித்த சிந்தனை இல்லை.
அவர்கள் ஊருக்குச் செல்லாமல் நகரத்திலே தங்கியிருந்தால் அவர்களால் சமூக விலக்கம் செய்துகொள்ள முடியுமா? அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டால் சிகிச்சையளிக்க நகரங்களில் போதுமான வசதி உள்ளதா? கணிசமான இட நெருக்கடியில் வசிக்கும் அவர்கள் தொடர்ந்து அப்படி வசிப்பது தொற்று நோய் பரவ வழி வகுக்காதா என்பதையெல்லாம் ஆட்சியாளர்கள் யோசிக்கவில்லை என்பதல்ல. எந்த காலத்திலுமே கருத்துக்குப் புலனாகாத இவர்களைக் குறித்து இப்படியெல்லாம் யாரும் யோசிக்க வாய்ப்பேயில்லை.
அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான வசிப்பிட வசதிகள் எல்லா காலத்திலும் வேண்டும் என்பதை லட்சியமாகக் கொள்ளாத சமூகம், தன்னையே ஒட்டுமொத்த சமூகமாகக் கற்பித்துக்கொள்ளும் மத்தியதர வர்க்கம், இதுபோன்ற ஆபத்துக் காலத்தில் எப்படி எளியோரின் துயரங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்பதுதான் கேள்வி. அதனால்தான் யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்வைப் பணயம் வைத்து அவர்கள் சாரி, சாரியாக நடந்தே சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். அவர்களும் கொரோனாவிலிருந்து தப்பித்துத்தான் செல்கிறார்கள்; அவர்களறிந்த வகையில்.
**கட்டுரையாளர் குறிப்பு**
கட்டுரையாளர்: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com)�,”