�குற்றம்சாட்டப்பட்டவருக்குச் சாதகமாகச் செயல்பட்ட அரசு வழக்கறிஞர் தலைமறைவு!

Published On:

| By Balaji

சிவகங்கை மாவட்ட அரசு நீதிமன்றங்களுக்குப் புதிய நிரந்தர அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில்தான் போக்ஸோ வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வந்தன. 16.12.2019 அன்று போக்ஸோ நீதிமன்றம் தனியாகப் பிரிக்கப்பட்டது. மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சிறப்பு வழக்கறிஞராக இருந்த இந்திராகாந்தி, தனது செல்வாக்கு மூலம் போக்ஸோ நீதி மன்றத்துக்கும் சிறப்பு அரசு வழக்கறிஞர் பொறுப்பு வாங்கினார்.

பெரியநரிக்கோட்டையில் உள்ள ஜெயத்தோட்டம் மகிழ்ச்சி இல்ல விடுதியில் தங்கி நரிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துவந்த நான்கு மாணவிகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு புதிதாக உருவாக்கப்பட்ட போக்ஸோ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சாட்சிகளை மிரட்டியதாக ஆசிரியர் முருகன், அவரது மனைவி, அரசு வழக்கறிஞர் இந்திராகாந்தி மூவர் மீதும் சிவகங்கை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக 2020 பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 195ஏ படி மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ப.உ.செம்மல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பைப் பார்த்து, இந்த விவகாரத்தில் பட்டியலினச் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கும்போது ஏன் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார். போலீஸார் சட்டப்பிரிவு மாறுதல் அறிக்கை தயார்செய்து எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்த்தனர். பிறகு ஆசிரியர் முருகனைக் கைது செய்து, இந்த வழக்கைக் கவனிக்க ஏஎஸ்பி ஒருவரை நியமித்து உத்தரவு போட்டுள்ளார் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர்.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை பிரிவு சேர்க்கப்பட்டதாலும் இந்திராகாந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாலும் அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். மேலும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்துள்ளார். அரசு சிறப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு வராமல் இருப்பதால் வழக்குகளை நடத்த மகிளா நீதிமன்றத்துக்கு நிரந்தர வழக்கறிஞராக (ADOP) விஜயசங்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோலவே போக்ஸோ நீதிமன்றத்துக்கும் நிரந்தர புதிய வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள் சிவகங்கை வழக்கறிஞர்கள் வட்டாரத்தில்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share