பாப்பிரெட்டிபட்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பழனியப்பன், கும்பகோணம் தொகுதி வேட்பாளர் ரத்னா உள்ளிட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 47 வேட்பாளர்களை, மதுரையில் நேற்று நடந்த அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார் ஜெயலலிதா. அப்போது பேசிய அவர், ‘மதுரை மாவட்டத்தில் கிரானைட் கடத்தலின் மூலம் அரசுக்கு ரூபாய் 16,000 கோடிக்கும் அதிகமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. கிரானைட் கொள்ளையில் திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை. கிரானைட் கொள்ளை பற்றி தகவல் கொடுத்தவர்மீது நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி. கிரானைட் கொள்ளையைப் பற்றி செய்தி வெளியிட்டவரை சிறையில் அடைத்தவர் அவர்.
திமுக ஆட்சியில் இருக்கும்வரை கிரானைட் கொள்ளையில் எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில்தான் கிரானைட் கொள்ளை பற்றி ஆய்வுநடத்த உத்தரவிடப்பட்டது. 2012-ம் ஆண்டு கிரானைட் கொள்ளை மூலம் ரூ.16,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் கிரானைட் கொள்ளையர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்டச் சட்ட ஆணையர் ஆய்வு நடத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில், கிரானைட் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய நிறுவனங்களில் ஒலிம்பஸ் என்ற நிறுவனமும் ஒன்று. அந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் குடும்பத்துக்குச் சொந்தமானவர். அப்படி இருக்கும்போது கருணாநிதி எப்படி நடவடிக்கை எடுப்பார்?
நான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டேன். நீங்கள் நினைக்காத, கேட்காத திட்டங்களை எல்லாம் நிறைவேற்றியுள்ளேன். ஒரு தாய்க்குத்தான் பிள்ளைகளுக்கு என்ன தேவை என்று தெரியும். உங்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் உங்களுக்கு இன்னும் செய்வேன்.
கருணாநிதி தன்னலம் என்றால் தமிழகத்தையே அடகு வைத்து விடுவார். பொதுநலம் என்றால் பொறுமை காப்பார். முல்லைப்பெரியாறு பாசனத்தை நம்பியிருந்த மக்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி. அதிமுக ஆட்சியில் 5 மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்னை தீர்க்கப்பட்டது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக ஆட்சியில் முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது. முல்லைப்பெரியாறு அணை தண்ணீரை 152 அடியாக உயர்த்துவோம் என திமுக வாக்குறுதி அளித்தது. 2006-ல் வெற்றி பெற்ற கருணாநிதி அளித்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டார். மக்களால் நான்… மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை கடைபிடித்து பணியாற்றி வருகிறேன்.
உங்களால் நான் உங்களுக்காகவே நான்… உங்களுக்காகவே அர்பணிக்கப்பட்டது என் தவ வாழ்வு’ என்றார்.
இவ்வாறு பேசிய ஜெயலலிதா ஒரு இடத்தில் கூட விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பற்றி குறிப்பிடவே இல்லை. பொத்தாம் பொதுவாக மாவட்ட ஆட்சியர் என்றே தனது உரை முழுவதும் குறிப்பிட்டார். அதேபோல, 2011 மற்றும் 2014 தேர்தலைப் போல் அழகிரியைத் தாக்கிப்பேசாமல் அவரது பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.�,