கொரோனா லாக் டவுனைத் தொடர்ந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு தொடங்குகிறது. இந்த நேரத்தில் காய்கறிகள் மற்றும் மளிகைச் சாமான்கள் போதிய அளவு கையிருப்பில் இல்லையா அல்லது இருக்கிறதை சரியான முறையில் பயன்படுத்த முடியுமா என்று யோசிக்கிறீர்களா… கவலை வேண்டாம். இருப்பதை வைத்து விதவிதமாகச் சமைப்பது எப்படி என்பது குறித்த சில ஆலோசனைகள்…
* எப்போதும் வாழைக்காய் ரோஸ்ட், உருளைக்கிழங்கு ரோஸ்ட்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வாழைக்காய் பொடிமாஸ், உருளைக்கிழங்கு பொடிமாஸ் போன்ற எண்ணெய் அதிகம் தேவைப்படாத தொடுகறிகளைச் செய்யலாம்.
* புளித்த மோரை வைத்து மோர்க்கூழ், மோர்க் களி, மோர்க்குழம்பு என்று விதவிதமாகச் செய்யலாம்.
* காய்கறிகள் வைத்து குறைந்த எண்ணெயில் வறுவல் செய்யும்போது மிளகாய்ப் பொடிக்குப் பதிலாக ரசப்பொடியை மேலே தூவினால் வாசனையாக இருக்கும். ரசப்பொடியில் தனியா, மிளகு, சீரகம் எல்லாம் இருப்பதால் காரமும் வாசனையும் நன்றாக இருக்கும். பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்தும் வறுவல் செய்யலாம்.
* எளிதில் பழுத்து விடும் கோவைக்காய், வாழைக்காய்களை வாரத்தின் முதல் சில நாட்களிலும் அடுத்து பீன்ஸ், கேரட் போன்றவற்றையும் சேனை, சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை வாரத்தின் கடைசி இரண்டு மூன்று நாள்களுக்கு முன்பும் சமைக்கலாம்.
* கடையிலிருந்து வாங்கிவைத்த பாகற்காயை இரண்டு மூன்றாக வெட்டி ஒரு கவரில் போட்டுவைத்தால் சீக்கிரம் பழுக்காது.
* காய்கறிகளுடன் வாங்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றைப் பயன்படுத்தி தினம் ஒரு சட்னி செய்யலாம்.
* ஒருநாள் கறிவேப்பிலைத் துவையல், கொத்தமல்லித் துவையல், பீர்க்கங்காய்த் துவையல் என்று ஏதேனும் ஒரு துவையலைச் செய்து சாதத்துடன் பிசைந்து துவையல் சாதமாக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
* தக்காளியைத் தொக்கு செய்து வைத்துக் கொண்டால், தக்காளி சாஸ் இல்லையே என்ற கவலை இல்லாமல் சாண்ட்விச், இட்லி, தோசை, தயிர் சாதம் போன்ற எல்லாவற்றுக்கும் தொட்டுச் சாப்பிடலாம்.
* பிரெட்டை வைத்து சாண்ட்விச் மட்டுமே செய்ய முடியும் என்பதில்லை. பிரெட்டைத் துண்டுகளாக நறுக்கி அதில் மைதா, உப்பு, தயிர், சோடா மாவு சேர்த்துப் பிசைந்து பரோட்டா செய்யலாம். ரவைக்குப் பதிலாக பிரெட்டைப் பயன்படுத்தி பிரெட் உப்புமா செய்யலாம்.
* முதல் நாள் மீந்துவிட்ட சாதத்தை மிக்ஸியில் போட்டு, கொஞ்சம் வெந்நீர் ஊற்றி மைய அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு கப் ஊறவைத்த அரிசியை மைய அரைத்து அதனுடன் கொஞ்சம் வறுத்த ரவை மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். இதை அரைத்து வைத்திருக்கும் சாதத்துடன் நன்கு கலந்து தோசை வார்த்துக் கொடுக்கலாம்.
[நேற்றைய ரெசிப்பி: நெல்லிக்காய் இனிப்பு ஊறுகாய்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2020/04/25/3/kitchen-keerthana-Gooseberry-sweet-pickle)
�,