ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி நியாயமற்ற வணிக முறைகளைப் பின்பற்றி வருவதாக இந்திய தேசிய உணவக சங்கம் (NRAI) தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, இந்த நிறுவனங்களை விசாரிக்க இந்தியப் போட்டியியல் ஆணையம் (சிசிஐ) உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்துக்குப் பிறகு ஸ்விக்கி, ஜொமேட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மக்கள் கடைகளுக்குச் செல்லாமல் இருக்கும் இடத்திலிருந்தே செயலி மூலமே தாங்கள் விரும்பிய உணவை வாங்கி உண்கின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி செயலிகளான ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி மீது கடும் குற்றச்சாட்டு ஒன்றை தேசிய உணவக சங்கம் வைத்துள்ளது.
இதன்படி ஜொமேட்டோ, ஸ்விக்கி இரு நிறுவனங்களும் உணவகங்களை மிரட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் கூடுதல் தள்ளுபடி வழங்க வேண்டும் இல்லையென்றால் ஜொமேட்டோ, ஸ்விக்கி தளங்களில் அந்த உணவகங்களின் பெயர் இடம்பெறாமல் அல்லது இறுதியில் இடம்பெறும்படி செய்துவிடுவோம் என மிரட்டுவதாகக் கூறப்படுகிறது.
தங்கள் செயலியை வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கூடுதல் தள்ளுபடி வழங்க கோரி உணவகங்களை மிரட்டுவதாகவும், இவ்வாறு குறைந்த விலைக்கு விற்கும்போது லாபம் வருவதில்லை என்றும் உணவக சங்கம் தெரிவித்துள்ளது. இதைத்தவிர உணவகங்கள் விலையைக் குறைத்தாலும் தங்களுக்கான டெலிவரி சார்ஜை இரு செயலிகளும் குறைப்பதில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டையடுத்து இரு நிறுவனங்கள் மீதும் விசாரணை நடத்தி 60 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய இந்திய போட்டியியல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
**ராஜ்**
.