நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் இறந்து கிடந்த காட்டெருமையை கூராய்வு செய்கையில், வயிற்றில் நூடுல்ஸ் பாக்கெட்டுகள், நைலான் கவர்கள் இருப்பதைக் கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வனமும் வனவிலங்குகளும் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகை, காடழிப்பு, கட்டுமானங்கள், வளர்ச்சிப் பணிகள் போன்ற பல காரணங்களால் சூழலியலில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
வாழிடங்களை இழந்துத் தவிக்கும் யானை, காட்டெருமை (பைசன்), கரடி போன்ற வன விலங்குகள் தேயிலைத் தோட்டங்களில் தஞ்சம் புகுவதோடு, உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுப்பதும் அதிகரித்து வருகிறது. இதனால், மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன.
இது மட்டுமல்லாது, குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படும் உணவுக் கழிவுகளை உண்ணும் வன விலங்குகள் பாதிக்கப்படுவதோடு சில நேரங்களில் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், குன்னூர் அருகில் உள்ள அளக்கரை தேயிலைத் தோட்டத்தில் காட்டெருமை ஒன்று இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் கட்டபெட்டு வனச்சரக வனத் துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, சுமார் ஆறு வயது மதிக்கத்தக்க காட்டெருமை இறந்திருப்பதை உறுதி செய்தனர். கூராய்வு மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
இறந்து கிடந்த காட்டெருமையை கூராய்வு செய்கையில், வயிற்றில் நூடுல்ஸ் பாக்கெட்டுகள், நைலான் கவர்கள் இருப்பதைக் கண்டு வனத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள வனத்துறையினர், “வனத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுவெளிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை மக்கள் வீசிச் செல்வதால் அவற்றை கால்நடைகளும் வன விலங்குகளும் சாப்பிட்டு பாதிப்படைகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளின் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆனால் எந்த பயனும் இல்லை. குப்பைகள் கொட்டப்படும் இடங்களைச் சுற்றி வேலி போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அறிவுறுத்தி வருகிறோம்” என்கின்றனர்.
**-ராஜ்**
.