�அதிமுக பேச்சாளர்களிடையே மோதல் : ஓ.பி.எஸ். அணிக்குச் செல்லும் நிர்மலாபெரியசாமி

public

அதிமுக நட்சத்திர பேச்சாளர்களிடையே ஏற்பட்ட மோதலால், நிர்மலாபெரியசாமி ஓ.பன்னீர்செல்வம் அணிக்குச் செல்ல முடிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் நிர்மலா பெரியசாமியும் கலந்து கொண்டார். அப்போது அவருக்கும், நடிகை சி.ஆர்.சரஸ்வதி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, குண்டு கல்யாணம் ஆகியோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதுகுறித்து நிர்மலா பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நட்சத்திரப் பேச்சாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற நான் என் அருகில் இருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ஓ.பி. அண்ணன் நமக்கு எதிரியா? அவரும் கட்சிக்காரர்தானே? எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்தால் நன்றாக இருக்குமே? என்று பேசிக்கொண்டிருந்தேன். இதை கேட்டுக்கொண்டு இருந்த சி.ஆர்.சரஸ்வதி வேகமாக எழுந்து, ‘ஓ.பி.எஸ்.ஸை எதிரி இல்லை என்று எப்படி நீ சொல்லலாம்’ என்றார்.

அதற்கு நான், ‘எனக்கு அவர் எதிரி இல்லை. அவரும் கட்சிக்காரர்தான்’ என்றேன்.

உடனே சின்னம்மாவை அவர் எப்படியெல்லாம் வசை பாடினார் தெரியுமா? என்றுகூறி, ஓ.பி.எஸ்.க்கு விசுவாசிபோல் என்னை பேசத் தொடங்கினார். நான் தேவையில்லாமல் பேசாதீர்கள். கட்சி ஒன்றாக இருக்க வேண்டும். இரட்டை இலைச் சின்னம் பறிபோய்விடக் கூடாது என்பதற்காகத்தான் சொல்கிறேன் என்றேன்.

உடனடியாக அவர்களுடன் குண்டு கல்யாணமும் சேர்ந்துகொண்டு என்னைத் திட்டியதோடு, நீங்கள் கட்சியைவிட்டு வேண்டுமானால் போங்கள் என்றார். அதைக் கேட்டதும் இப்படிச் சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று நான் கேட்டேன். அப்போது சமரசம் செய்வதுபோல் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வந்தார். அவரும் ஒருமையில் பேசத் தொடங்கினார்.

இப்படி ஒருமையில் பேசும் வார்த்தையெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் முன்னாள் அமைச்சர். அப்படி நடந்துகொள்ளுங்கள் என்றேன். அதன்பிறகு, என்னால் அங்கு இருக்க முடியவில்லை. அங்கிருந்து வெளியேறி மகாலிங்கத்திடம் நடந்த வி‌ஷயத்தை தெரிவித்துவிட்டு வந்துவிட்டேன்.

அம்மாவை சி.ஆர்.சரஸ்வதிபோல் மோசமாகப் பேசியது வேறுயாரும் கிடையாது. ஆனால் இப்போது அம்மா இல்லாததால் என்னவெல்லாமோ பேசுகிறார்கள். அம்மாவுக்கே வாழ்க்கை கொடுத்தது அவர்கள்தான் என்பதுபோல் பேசிவருகிறார்கள்.

நான் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு போகக்கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அங்கு தவறானவர்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். இனி, இது மாறவும் செய்யாது. எனக்கு மனசாட்சி உறுத்துகிறது. எனவே ஓ.பன்னீர்செல்வம் அணிக்குச் செல்ல முடிவுசெய்துள்ளேன் என்று அவர் கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *