ஹைட்ரோ கார்பன் வேண்டாம்: டெல்டா கிராம சபை தீர்மானம்!

Published On:

| By Balaji

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச் சூழல் துறையின் அனுமதி தேவையில்லை என்றும், அதுபோலவே மக்களின் கருத்துக்களையும் கேட்கத் தேவையில்லை எனவும் மத்திய அரசு அறிவித்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என டெல்டா பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 26) தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள கறம்பக்காடு ஊராட்சியில் அதன் தலைவர் அர்ச்சனா தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதன்முடிவில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கத்திரிநத்தம், அழகிய நாயகபுரம் ஆகிய ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக் கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என மக்கள் ஆதரவோடு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தஞ்சை சேருவாவிடுதி இனாம், புதுக்கோட்டை மாவட்டம் செரியலூர் இனாம், திருவாரூர் மாவட்டம் கூடுர் என டெல்டாவின் பல பகுதிகளில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல இடங்களில் தீர்மானம் நிறைவேற்றவும் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த தீர்மானங்களை விரைவில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் நேரில் அளித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தங்கள் பகுதிகள் பாதிக்கப்படும் என்பதால் அதனை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு தெரிவிக்குமாறு வலியுறுத்தவுள்ளனர்.

இதனிடையே சென்னையில் நேற்று நடந்த மொழிப்போர் தியாகிகள் தின பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share