ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குச் சுற்றுச் சூழல் துறையின் அனுமதி தேவையில்லை என்றும், அதுபோலவே மக்களின் கருத்துகளையும் கேட்கத் தேவையில்லை எனவும் மத்திய அரசு கடந்த 16ஆம் தேதி அறிவித்தது. இதற்கு தமிழகம் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என டெல்டா பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
அதுபோலவே டெல்டா மாவட்டங்களில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன்.
அவர் சார்பில் நேற்று (ஜனவரி 27) வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி டெல்டா பகுதி விவசாயத்துக்கு உயிர்நாடியாக இருக்கிறது. இந்தப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, நிலமே தரிசாக மாறிவிடும் சூழ்நிலை உருவாகும். இதனால் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, தமிழகத்தின் பொருளாதாரம் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகும். விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையும் ஏற்படும்.
இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசின் அனுமதி அவசியமில்லை என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால், அந்தச் சுற்றறிக்கைக்கும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ள அவர், மக்களின் கருத்துகளைக் கேட்காமல் எந்த ஒரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் எனவும் பி.ஆர்.பாண்டியன் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.�,