ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களை நிறைவேற்றக்கூடாது என்று சேலத்தில் துண்டு பிரசுரம் விநியோகித்ததற்காக மாணவி உள்பட இருவரை கடுமையான சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் விராணம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி வேளாண் பட்டதாரியான இவர், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பு படித்து வருகிறார். இவரது தோழியின் தாய் ஜெயந்தி இவர்கள் இருவரும் சேலம் கோரிமேட்டில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரி முன்பு நின்று நெடுவாசல் கிராமத்தில் கொண்டுவரப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்றும், கதிராமங்கலத்தில் போராடிய கிராம மக்களை காவல்துறை கைது செய்ததை எதிர்த்தும் வருகிற 15-ந் தேதி புதுக்கோட்டையில் நடக்க உள்ள போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் நோட்டிஸ் விநியோகித்து வந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த அம்மாபேட்டை போலீசார் இருவரையும் கைது செய்து அவர்கள் மீது அரசுக்கு எதிராக கலகம் உருவாக்குதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வளர்மதி, நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்றதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளித்தலையில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி கூறுகையில்,’இயற்கையை காப்பாற்றவும் அதை எதிர்த்து போராடவும் துண்டு பிரசுரம் வழங்கியது பெரிய குற்றமா?. என்னை எதற்காக கைது செய்தார்கள்?. ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்திட அடிப்படை உரிமை கூட கிடையாதா?. போலீசார் என்னை, நக்சல் இயக்கத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு அவர்களிடம் என்ன ஆதாரம் உள்ளது? அதை காண்பிக்க முடியுமா? என்று தெரிவித்தார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’நெடுவாசல், மற்றும் கதிராமங்கலம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசுகளின் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராகவும், துண்டுப் பிரசுரங்களை மாணவர்கள் மத்தியில் விநியோகித்த பொழுது, இதழியல் படித்து வரும் கல்லூரி மாணவி வளர்மதி மற்றும் ஜெயந்தி ஆகிய இருவரையும் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் சேலம் போலீசார் கைது செய்து இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
ஜனநாயக அரசியல் அமைப்பில், மக்களுக்கும், தேச நலன்களுக்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிராக மத்திய மாநில அரசுகள் செயல்படுகிறபோது அதை, வாக்களித்த மக்களின் கவனத்திற்குக் கொண்டு சொல்கிற உரிமை, ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. இது அரசியல் சாசன ரீதியிலான உரிமையாகும். இதற்கு எதிராக போலீசார் இரண்டு பெண்களையும் கைது செய்து வழக்கு பதிவு செய்திருப்பது சட்டவிரோதமான அத்துமீறலாகும்.அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் இவர்களுக்கு ஆதரவு பெருகிவருகிறது.
கடந்த மே மாதம் மெரினா கடற்கரையில் ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்திய வழக்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஏற்கனவே தமிழக முதல்வர், பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து போராடுவதெல்லாம் இப்போது பேஷனாகி விட்டது என்று கூறியிருந்தார். தற்போது ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட அரசின் திட்டங்களுக்கு எதிராக நோட்டிஸ் விநியோகித்தவர்களை நக்சலுடன் தொடர்பு என்று கூறி காவல்துறை கைது செய்துள்ளது. ஆக இயற்கைக்கு எதிராக அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிரான எந்த வடிவிலான போராட்டத்தையும் ஒடுக்கும் செயல்களை காவல்துறை மூலமாக அரசு செய்து வருகிறது. ஏற்கனவே ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடியதாக பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
�,”