ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பிற்பகல் பதவியேற்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் வெற்றிபெற்று பாஜவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனையடுத்து, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியிலுள்ள மொரபடி மைதானத்தில் இன்று (டிசம்பர் 29) நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் திரவுபதி மர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அத்துடன் மூன்று அமைச்சர்களும் பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 25,000 பேர் அமரக்கூடிய அளவுக்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளன. விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் சிங் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக தலைவர் ஸ்டாலின், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
சென்னையிலிருந்து இன்று காலை 8 மணிக்கு தனி விமானத்தில் ராஞ்சி செல்லும் திமுக தலைவர் ஸ்டாலின், பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு இன்று மாலை 5 மணியளவில் மீண்டும் சென்னை திரும்புகிறார். ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார். இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடும் நிலையில், இந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
�,