ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார் நடிகர் விஷால்.
380 ஆண்டுகாலம் பழைமை வாய்ந்த ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் தொன்மையான மொழிகள் குறித்து ஆய்வு செய்வதற்கென இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்மொழிக்கென்று தனி இருக்கை அமைக்க அமெரிக்கா வாழ் மருத்துவர்களான சம்பத், ஜானகிராமன் ஆகிய இருவரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் இருக்கை அமைவதற்கு தோராயமாக ரூ.40 கோடி தேவைப்படும் நிலையில் தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் கொடுத்த நன்கொடையைச் சேர்த்து ரூ.17 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் விஷால் தன் பங்குக்கு ரூ.10 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் தமிழ் இருக்கை அமைக்க வேண்டியதன் கட்டாயம் குறித்து அவர், **“மூன்று கோடி பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடி பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால், எட்டு கோடி பேர் பேசும் தமிழுக்கு இருக்கை இல்லை என்பது நாம் கவலைப்பட வேண்டியது”** என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், **தமிழுக்கு இருக்கை அமைக்க ரூ.40 கோடி தேவைப்படும் நிலையில் இதுவரை சுமார் 17 கோடி ரூபாய் தான் சேர்ந்துள்ளது. எனவே உலகளாவிய தமிழர்கள் ஒன்றுபட்டு இதற்கான நிதி விரைவில் சேர உதவ வேண்டும் என்றும் மத்திய அரசும் இந்த வரலாற்று சிறப்புக்கு உதவ வேண்டும்** என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
�,