ஹாசிம்புரா படுகொலை: 16 போலீசாருக்கு ஆயுள் தண்டனை!

Published On:

| By Balaji

உத்தரப் பிரதேசத்திலுள்ள ஹாசிம்புராவில் 36 முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட 16 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

1986ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி வளாகத்தில் ராமர் சிலையை வணங்க அனுமதியளித்து உத்தரவிட்டது பைசலாபாத் நீதிமன்றம். இதன் தொடர்ச்சியாக, வட மாநிலங்களில் இந்து மற்றும் முஸ்லிம் மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டன. 1987ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அம்மாநிலத்திலுள்ள மீரட் நகரில் தொடர்ச்சியாகக் கலவரங்கள் நடைபெற்றன.

1987ஆம் ஆண்டு மே 22ஆம் தேதியன்று, மீரட்டிலுள்ள ஹாசிம்புரா மொகல்லாவில் நுழைந்தது மண்டல ஆயுதப்படையில் 41வது பட்டாலியன் பிரிவு. அப்பகுதியில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தனர். அங்கிருந்த இளைஞர்களில் 42 பேர் ஆயுதப்படை வாகனத்தில் ஏற்றப்பட்டனர். 324 பேர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வாகனத்தில் ஏற்றப்பட்ட 42 பேர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர் ஆயுதப்படை போலீசார். கங்கை கால்வாய் பகுதியில் சிலரது சடலங்கள் வீசப்பட்டன. ஹிண்டன் கால்வாய் பகுதியில் சிலரது பிணங்கள் கிடைத்தன. இதில் 36 பேர் பலியாக, 6 பேர் உயிர் பிழைத்தனர். இந்த ஆறு பேரும் காவல் நிலையங்களில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வாகனத்தில் அழைத்துச்சென்று துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஆயுதப்படை போலீசார் அனைவருமே தங்களது முக அடையாளங்களை மறைத்திருந்தனர்.

காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட 324 பேர் மீரட் மற்றும் பதேகர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அங்கு நடந்த சித்திரவதையின் காரணமாக, சிறையிலேயே 5 பேர் உயிரிழந்தனர். இதேபோல, மலியானா என்ற ஊரில் நேரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர் ஆயுதப்படை போலீசார். இதில் 30 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.

ஹாசிம்புரா துப்பாக்கிச் சூடு தொடர்பாக, உ.பி.யிலுள்ள காசியாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஹாசிம்புரா பாதுகாப்பு கமிட்டியானது, இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தது. இதன்படி, 2002ஆம் ஆண்டு இவ்வழக்கு டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதற்குள், குற்றம்சாட்டப்பட்ட போலீசாரில் சிலர் பணி ஓய்வு பெற்றுவிட்டனர்.

2015ஆம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி நீதிமன்றம், ஹாசிம்புரா படுகொலைக்கு ஆயுதப்படை போலீசாரே காரணம் என்று தெரிவித்தது. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தான் அந்த படுகொலையைச் செய்தார்கள் என்பதற்கான எந்த சாட்சியங்களும் இல்லை என்று கூறி, அவர்களை விடுதலை செய்தது.

இந்த விவகாரம் பற்றி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று (அக்டோபர் 31) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது நீதிபதிகள் எஸ்.முரளிதர் மற்றும் வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு. கொலை, கடத்தல், குற்றச் சதி மற்றும் சாட்சியங்களை அழித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 16 ஆயுதப்படையைச் சேர்ந்த முன்னாள் போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.

31 ஆண்டுகள் கழித்து, இந்த வழக்கின் தீர்ப்பு தங்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் பாதிக்கப்பட்ட ஹாசிம்புராவாசிகள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share