செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கோரி ஹர்திக் படேல் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
பட்டிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி தலைவரான ஹர்திக் படேல், குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று கோரிப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். கடந்த மாதம் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் சார்பில் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட ஹர்திக் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஒரு வழக்கில் வெளியான தீர்ப்பு அதற்குத் தடையாக அமைந்தது.
2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் மெஹ்சனா மாவட்டத்தில் உள்ள விஸ்நகரில் நடந்த போராட்டத்தின்போது திடீரென்று வன்முறை ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய விஸ்நகர் செஷன்ஸ் நீதிமன்றம், ஹர்திக் மற்றும் அவரது இரண்டு நண்பர்களுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கோரி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். கடந்த மார்ச் 29ஆம் தேதியன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய குஜராத் உயர் நீதிமன்றம் ஹர்திக்கின் கோரிக்கையை நிராகரிப்பதாகத் தெரிவித்தது.
குஜராத் மாநிலத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் வரும் 4ஆம் தேதியுடன் முடிவடையும். இதனால், தனது தண்டனையை நிறுத்தக் கோரி அவரது சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக ஏற்குமாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று (ஏப்ரல் 2) இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா, எம்.எம்.சந்தானகவுடர், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த உத்தரவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடப்பட்டது எனவும், அதனை இப்போது அவசரமாக விசாரிக்க வேண்டியது ஏன் என்றும் கேள்வி எழுப்பியது நீதிபதிகள் அமர்வு.
இதையடுத்து, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி ஹர்திக்கின் கோரிக்கையை நிராகரித்தது.�,