�
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீனா மற்றும் கொரியாவைச் சேர்ந்த 2 நிறுவனங்கள் மட்டுமே 50 விழுக்காடு சந்தையை ஆக்கிரமித்துள்ளன.
இதுகுறித்து சர்வதேச தரவு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2018ஆம் ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன் விற்பனைச் சந்தையில் சீனாவைச் சேர்ந்த க்ஷியோமி மற்றும் தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனங்கள் மட்டும் 50 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ளன. க்ஷியோமி நிறுவனம் மட்டுமே 2018ஆம் ஆண்டுக்கான இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 28.9 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ளது. சாம்சங் நிறுவனம் 22.4 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 2018ஆம் ஆண்டில் 142.3 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இருப்பினும் 2018ஆம் ஆண்டில் சாம்சங் நிறுவனத்தின் சந்தைப் பங்கு வீழ்ச்சியையும், க்ஷியோமி நிறுவனத்தின் சந்தைப் பங்கு ஏற்றத்தையும் கண்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் க்ஷியோமி நிறுவனத்தின் சந்தைப் பங்கு 20.9 விழுக்காடாகவும், சாம்சங் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 24.7 விழுக்காடாகவும் இருந்தது.
2018ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் விவோ நிறுவனம் 14.2 விழுக்காடு சந்தைப் பங்கையும், ஒப்போ நிறுவனம் 10.2 விழுக்காடு சந்தைப் பங்கையும் டிரேன்சன் நிறுவனம் 6.4 விழுக்காடு சந்தைப் பங்கையும் கொண்டுள்ளன. இந்த 5 நிறுவனங்களும் 2018ஆம் ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 82 விழுக்காட்டைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தியுள்ளன. முதல் 5 இடத்தில் உள்ள இந்நிறுவனங்களில் சாம்சங்கை தவிர்த்து மற்ற 4 நிறுவனங்களும் சீனாவைச் சார்ந்தவையே.�,