‘ஏம்பா குமாரு, இந்த டெக்னாலஜி வரமா சாபமா?’ அப்படின்னு ஒருத்தர் கேட்டார். இதுக்கு சாதாரணமா பதில் சொல்ல முடியாதுண்ணே, ஒரு டீ சொல்லிட்டு இப்டிக்கா உக்காருன்னுட்டு சில கேள்விகள் கேட்டேன். கேள்வியையும் பதிலையும் வரிசையா சொல்றேன்.
*நான்:* பொன்பரப்பி ஊர்ல நடந்த கலவரத்தோட தாக்கம், அந்த வீடியோ இல்லைன்னா வெளிய தெரிஞ்சிருக்காது. இதுக்கு உதவுன டெக்னாலஜி நல்லதா கெட்டதா?
*அவர்:* நல்லது தான.
*நான்:* அந்த வீடியோவைப் பார்த்த சிலர், தகாத வார்த்தைகள்ல மத்த சமூகத்தினரை திட்டி வீடியோ போட்டு, அது பொன்னமராவதில சாதி கலவரத்தை உருவாக்குச்சே. இப்ப நல்லதா கெட்டதா?
*அவர்:* ரொம்ப கெட்டதா இருக்கேப்பா.
*நான்:* மதுரைல EVM மெஷின் வெச்சிருக்க ரூமுக்குள்ள தாசில்தார் போனதை கண்டுபிடிக்க ஒரு ஃபோட்டோ தான் உதவுச்சு. இது நல்லதா கெட்டதா?
*அவர்:* அட, ரொம்ப நல்லதா இருக்கேப்பா.
*நான்:* பா.ம.க கள்ள ஓட்டு போட்டதை ஒரு பெண் ரிப்போர்ட்டர் செய்தியாக்குனதுக்கு ஸ்மார்ட்ஃபோன் தான் உதவுச்சு.
*அவர்:* அடடே வெரி குட்.
*நான்:* இப்ப அந்த ரிப்போர்ட்டரை அந்த கட்சியைச் சேர்ந்தவங்க சோஷியல் மீடியால அசிங்கப்படுத்திக்கிட்டு இருக்காங்க.
*அவர்:*ஐயோ வெரி பேட்.
இப்படித்தாம்ணே, டெக்னாலஜி மாதிரி ஒவ்வொரு நூறு வருசத்துக்கும் எதாச்சும் ஒண்ணு புதுசா வந்துக்கிட்டே இருக்கும். அதை நாம எதுக்கு பயன்படுத்துறோம் அப்படின்றது தான் முக்கியம். ஆனால், இதுல முக்கியமான ஒரு விஷயம். மதச்சார்பின்மையும், முற்போக்கு சிந்தனையும் இல்லாம போனா, தமிழ்நாட்லயே இந்தந்த சாதிக்காரன் தான் கம்ப்யூட்டர் வெச்சிருக்கணும், ஸ்மார்ட்ஃபோன் யூஸ் பண்ணனும்னு கிளம்பிடுவாங்க. அதனால போங்க போய் புள்ள குட்டிங்களை படிக்க வைங்க. அப்படின்னு சொல்லி அனுப்பிட்டேன். இவண்ட போய் வாய் குடுத்தோமேன்னு டீ காசு குடுக்காமலே போய்ட்டாரு. நான் காசை குடுத்துட்டு வந்துடுறேன். அப்டேட்டைப் படிங்க.
**கட்டெறும்பு**
ஏமாற்றம் புதிதல்ல நான் ஏமாறும் விதம் தான் நாள்தோறும் புதிதாய் இருக்கிறது..!
**அன்னப்பறவை**
உறவுகளுக்கிடையே அன்பை பரிமாற சிறு சந்தர்ப்பம் போதும் அச்சந்தர்ப்பத்தில் உறவுகளின் வலிமை பொருந்திய அன்புச் சொற்களில் ஓராயிரம் கவிதைகளை வடிவமைத்து விடலாம்.
**இரா.சரவணன்**
2005-ல் எல்.ஐ.சி-யில் 3 லட்சம் லோன் வாங்கி, சொந்த வீடு கட்டினேன். 14 வருடங்களாக மாதம் மூவாயிரம் ட்யூ கட்டியும், இன்றுவரை அடைக்க முடியாத நிலை. வீடு கட்டுவது சாதாரண விஷயமில்லை. சாதி உள்ளிட்ட எதற்காகவும் வீடுகளை சேதப்படுத்தாதீர்கள். சொந்த வீடு என்பது தலைமுறைகளைத் தாண்டிய கனவு.
**கோழியின் கிறுக்கல்!!**
திருமணமாகாத ஆண்களே தாய் தந்தையரை ஓரளவிற்கு மேல் எதிர்த்து பேசாதீர்கள்!!
அளவு மீறும் சமயத்தில் நீங்கள் திருமணத்திற்கு தயாராகி விட்டதாகி நினைத்துக் கொண்டு உங்களை மாட்டி விட்டு விடுவார்கள்!!!
**ஜோக்கர்… **
இன்னைக்கு “தொப்பை” குறையலயேன்னு வருத்தபடுறவன்லாம் யாரு?!
ஒரு காலத்துல இந்த உடம்பு ஒல்லியா இருக்கேன்னு நினைச்சு வருத்தப்பட்டவங்க தான்..
**ரஹீம் கஸ்ஸாலி**
நியாயமா பார்த்தால் EVM இருக்கும் இடத்தில் மர்மப்பெண் நுழைந்தததுக்கு மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனும் இந்நேரம் பதறியிருக்கணும். ஆனால் கம்யூ, அமமுக வேட்பாளர்கள் மட்டுமே பதறுகிறார்கள். அதிமுக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. அதிமுக தரப்பின் மவுனம் சந்தேகத்தை இன்னும் வலுவாக்குகிறது.
**Nelson Xavier**
2019 மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளில் சட்டமன்ற தொகுதி வாரியாக பார்த்தால் தமிழகத்திலேயே மிக குறைவான வாக்கு பதிவான தொகுதி மயிலாப்பூர் – 54.78 %
**கோழியின் கிறுக்கல்!!**
“இங்க வந்து அம்மாவை என்னன்னு கேளுங்கப்பா” என்று மகன் அழைக்கும் பொழுது, கட்டத்துறையை எதிர்க்க கைப்புள்ளயை அழைத்து சென்ற அவரின் சங்கத்து ஆளின் நினைவு ஏனோ வந்து தொலைக்கிறது!!
**mohanram.ko**
கைக்கு எட்டாதது, வாய்க்கு எட்டுவதெல்லாம் ‘ஸ்பூன்’ இருந்தால் மட்டுமே சாத்தியம்
**ஜால்ரா காக்கா**
சீமான் பேச்சும் சந்திரமுகில வர பாம்பும் ஒன்னு…
பாக்க பயங்கரமா இருந்தாலும் கடைசிவரைக்கும் ஒன்னும் பன்னாது
**வெண்ணிலா**
17 முறை தோற்ற கஜினி தெரியும், தோற்கடித்த இந்திய மன்னன் பெயர் தெரியாது!
இப்படிக்கு முட்டாள்தனமான இந்திய வரலாறு syllabus.
**м υ я υ g α η . м**
மனசு ஏத்துக்கிட்டா ஒரு விஷயத்த சந்தோஷமா செய்யுறோம்.. அதே மனசு ஏத்துகிடலனா பிறர் பார்வைக்காக மட்டுமே சந்தோஷமா செய்யுறோம்.!
**kanagaraj**
மதுரை தாசில்தார் சம்பூர்ணம் அம்பு மட்டுமே; எய்தவர் யார்?
அந்த அறையின் சாவி மாவட்ட ஆட்சியரிடம்தானே இருந்திருக்கும்?எப்படி தாசில்தார் கைக்கு சென்றது?
**கவின்மலர்**
பா.ம.க. கள்ள ஓட்டுகள் போட்டதை செய்தியாக்கிய தி.இந்துவின் செய்தியாளர் பி.வி.ஸ்ரீவித்யா மீது இணைய தாக்குதல்களை தர்மபுரி பாமகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில் முன்னெடுத்திருக்கிறார். ஸ்ரீவித்யா குறித்து அவர் எழுதிய பதிவொன்றை வாசிக்க நேர்ந்தது.
ஒரு பத்திரிகையாளராக ஸ்ரீவித்யா என்ன செய்யவேண்டுமோ அதை நேர்மையாக தெளிவாகச் செய்திருக்கிறார். அதற்காக பாமக தன் வழக்கமான பாணியை கையில் எடுக்கிறது. இதற்கெல்லாம் பின்வாங்கக்கூடியவர் அல்ல ஸ்ரீவித்யா.
நானறிந்த பத்திரிகையாளர்களுள் நேர்மையானவர் அவர். ஏ.சி.ஜேவில் படித்துவிட்டு நகரங்களில் பணியாற்றாமல் கிராமப்புறங்களில் பணியாற்ற வந்த நிருபராக அவர் நாகப்பட்டினத்துக்கு வந்தார். நாகை மாவட்டத்தின் குக்கிராமத்தில் நடப்பவை கூட அவரால் தி இந்து நாளிதழில் செய்தி ஆனது. என்னைக் கவர்ந்த பத்திரிகையாளர் அவர்.
அவர் எழுப்பிய கேள்விகளுக்கும், ஆதாரங்களுடன் அவர் எழுதியவற்றை மறுக்க முடியாமல், கையும்.களவுமாக பிடிபட்ட கும்பல் இப்போது அவரைத் திட்டித் தீர்க்கத் தொடங்கி இருக்கிறது. எனக்கும் இப்படித்தான் தொடங்கினார்கள். பின் அந்தத் தாக்குதல்கள் எதுவரை சென்றதென் பலர் அறிவார்கள்.
நீங்கள் கள்ள ஓட்டு போடுவீர்கள். அதை ஒரு பத்திரிகையாளர் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவேண்டும். சாதிப்பாசத்திலோ அல்லது உங்கள் மிரட்டலுக்கும் அடாவடிக்கும் பயந்துமோ வாயை மூடிக்கொண்டிருப்பவர்களைப் போல் அல்ல ஸ்ரீவித்யா. உங்கள் லட்சணத்தைத்தான் அவர் எழுதுகிறார். பொய்யொன்றும் எழுதவில்லை. நான் உறுதியாக ஸ்ரீவித்யாவின் பக்கம் நிற்கிறேன். நிற்பேன்.
-லாக் ஆஃப்.�,”