ஸ்பெஷல் விசிட்: சென்னையில் கால்பதித்த தமிழ்நாடு டொர்னாடோக்கள்!

public

Pro Kabaddi League போட்டியின் 2017ஆம் ஆண்டுக்கான பயிற்சிகள் எல்லா மாநிலங்களிலும் தொடங்கிவிட்டன. முதன்முறையாக தமிழ்நாடு அணி இம்முறை களமிறங்குகிறது. அதன் சார்பில் 25 வீரர்கள் இருக்கிறார்கள்.

Iquest நிறுவனத்துடன், [சச்சின் டெண்டுல்கர்](http://minnambalam.com/k/2017/05/14/1494700225) இணைந்து இதன் உரிமையாளராக இருக்கிறார். தமிழ்நாடு அணியின் 25 வீரர்களில் பெரும்பாலானோர் சென்னைக்கு நேற்று (14.06.17) வந்து சேர்ந்தனர். ஜூலை 28ஆம் தேதி தொடங்கவிருக்கும் Pro Kabaddi Leagueஇன் ஐந்தாவது சீசனில் ஓர் அணியாக இணைந்து செயல்பட வேண்டிய பயிற்சிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அணி சென்னையில் முகாமிட்டிருக்கிறது. சிட்டி சென்டர் மாலில் பயிற்சியை மேற்கொள்ளும் இந்த வீரர்கள் ஜூலை 25ஆம் தேதியுடன் பயிற்சியை முடித்துக்கொள்கின்றனர்.

தமிழக வீரர்கள் அனைவருமே நேற்று (14.06.17) காலையில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கு முன்பே தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும், தற்போதைய இந்திய கபடி அணியின் பயிற்சியாளரான பாஸ்கரன் வந்திருந்தார். தமிழகம் முழுவதிலுமிருந்து வரவழைக்கப்பட்ட கபடி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் கைதட்டல்களுக்கு மத்தியில் இந்த வீரர்கள் சென்னையிலிருந்து தங்களது Pro Kabaddi League பயணத்தைத் தொடங்கினார்கள்.

தமிழக வீரர்கள் அனைவரும் வந்தடைந்துவிட்டதால், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களின் வரவேற்பு விழா நேற்று (14.06.17) மாலை நடைபெற்றது. முதலில் புவனேஷ்வரிலிருந்து சுஜித் மஹாராணா மற்றும் நாக்பூரிலிருந்து சாரங்க் அருண் தேஷ்முக் ஆகிய இருவரும் வந்தடைந்தனர். வீரர்களை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த கபடி உலகில் நன்கு அறியப்பட்ட தினகரன், வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் கைதட்டல்களுடன் இவர்கள் இருவரையும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

(காட்சிக்கு மட்டுமே பயன்படும் பொன்னாடையாக இல்லாமல் கதர் துண்டாக அந்தத் துணி இருந்தது, கபடி வீரர்களான அவர்களது வியர்வையைத் துடைக்க அதிகம் உதவக்கூடிய விதத்தில் இருந்தது. மழையும் வெயிலுமென சென்னையின் பருவநிலையும் உஷ்ணமாக இருந்ததால், விமான நிலையத்திலேயே அந்தத் துண்டு வீரர்களால் பயன்படுத்தப்பட்டது)

ஆல் ரவுண்டர் பொசிஷனில் விளையாடும் சுஜித் மற்றும் ரைடர் பொசிஷனில் விளையாடும் சராங்க் அருண் ஆகியோர்களுக்குப் பிறகு கர்நாடகாவிலிருந்து தர்ஷன்.J வந்து சேர்ந்தார். இவர் வலது கவரில் டிஃபண்டர் பொசிஷனில் விளையாடுபவர்.

விமான நிலையத்தில் யாருடைய வரவுக்காகவோ காத்திருந்தவர்களில் பலர், தமிழ்நாடு அணிக்காக விளையாடும் வீரர்கள் வந்துகொண்டிருப்பதை அறிந்து அங்கு நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் கபடி வீரர்களுடன் சேர்ந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். வீரர்களின் உடலமைப்பை வைத்தே இவர் இந்த பொசிஷனாகத்தான் இருக்க வேண்டும் என்றும், அந்த உடலமைப்பைப் பார்த்து சிலாகித்துக் கொண்டிருந்ததையும் பார்க்கும்போது கபடி போட்டி எந்தளவுக்கு தமிழக மக்களின் மத்தியில் வேரூன்றிப்போயிருக்கிறது என்பதைப் பார்க்க முடிந்தது.

கர்நாடகாவிலிருந்து வந்திருந்த தர்ஷன், இந்த வரவேற்பைப் பார்த்து மிகவும் பூரிப்படைந்தார். எல்லோருக்கும் தேடித்தேடி வணக்கம் சொன்னதுடன், வாங்க போட்டோ எடுத்துக்கலாம் (கன்னடத்தில்தான் பேசினார். கேமராவைக் காட்டிக்கேட்டதால் போட்டோ எடுக்க அழைப்பது புரிந்தது) என அழைத்து போட்டோ எடுத்துக்கொண்டார். இந்த வீரர்களை அனுப்பிவைத்தபிறகு, நேற்றைய நாள் வீரர்கள் வருகையில் கடைசி விமானத்துக்குக் காத்திருந்தோம். யார் வருகிறார்கள் என விழா ஏற்பாட்டாளர்கள் சொல்ல மறுத்துவிட்டார்கள். அத்தனை சஸ்பென்ஸுடன் யார் வருகிறதெனக் காத்திருந்தபோது வந்திறங்கினார் அமித் ஹூடா.

Pro Kabaddi Leagueஇல் மட்டுமல்லாமல், இந்திய கபடி உலகத்திலேயே முக்கியமான பிளேயரான அமித் ஹூடாவுக்கு வயது 21 தான் ஆகிறது. வலது ஓர டிஃபண்டராக விளையாடும் அமித் ஹூடா தமிழ்நாடு அணியின் முக்கிய பிளேயர். 32 Pro Kabaddi League போட்டிகளில் விளையாடியிருக்கும் அமித் ஹூடா மொத்தமாக 90 பாயிண்டுகளை எடுத்திருக்கிறார். அதில் ரெய்டு சென்று எடுத்த பாயிண்டுகள் 7. டிஃபன்ஸ் பாய்ண்டுகள் 83. அமித் ஹூடா தடுத்த எதிரணி ரெய்டர்களில் 78 பேரை வெற்றிகரமாக வீழ்த்தியிருக்கிறார்.

**நான் சென்னைக்கு ஏற்கெனவே வந்திருக்கிறேன். ஆனால், இப்போது வந்திருக்கும் காரணம் வேறு. தமிழ்நாடு அணிக்காக விளையாட வந்திருக்கிறோம். விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ்நாடு ரசிகர்கள் எவ்வளவு ஆதரவு கொடுப்பார்கள் என எங்களுக்குத் தெரியும். அந்த ஆதரவுடன் இந்த வருட Pro Kabaddi League போட்டியை வென்றுகாட்டுவோம்** என்று சொல்லிவிட்டு ‘வணக்கம் சென்னை’ என உரக்கப் பேசினார். அமித் ஹூடாவுடன் சங்கீத் சவான், அனில் குமார், பவானி ராஜ்புத் ஆகிய மூவரும் வந்திருந்தார்கள். இவர்களுக்கும் கைதட்டலுடன் கதர் துண்டு போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் கூடியிருந்த பலரும்கூட கைதட்டி இந்த வீரர்களை வரவேற்றது, தமிழக ரசிகர்கள் Pro Kabaddi League போட்டியில் தமிழ்நாடு அணியின் புதுவரவை எந்தளவுக்கு ஆதரிக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. அதே அளவுக்கு தமிழ்நாடு அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் கபடி வீரர்களும் தங்களது திறமையை நிரூபித்து, Pro Kabaddi Leagueஇல் என்ட்ரியான முதல் வருடமே சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கின்றனர்.

[தமிழ்நாட்டின் புதிய ஆட்டம் தொடங்குகிறது!](http://www.minnambalam.com/k/2017/05/27/1495823430)

**குறிப்பு:**

பல மணி நேர விமானப் பயணத்தில் வந்தவர்களிடம், அவர்களது கபடிப் பயணத்தைப் பற்றிப் பேச விமான நிலையத்தில் நேரம் போதவில்லை என்பதுடன், அவர்களும் கேமராவுக்கு முன்பு கூச்சம் நிறைந்தவர்களாக இருந்ததால் முழு தகவல்களைத் தர முடியவில்லை. விரைவில் தமிழ்நாடு அணியினரின் கபடி பயணம் குறித்து மின்னம்பலம் மொபைல் டிஜிட்டல் மீடியாவில் பதிவு செய்யப்படும்.

– சிவா

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *