மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். “இது ஸ்பெஷல் டிஜிட்டல் திண்ணை “ என்ற தலைப்பில் போஸ்ட் செய்திருந்தது ஃபேஸ்புக்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க வேண்டும். சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதுதான் பன்னீர் அணியின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இரண்டுக்கும் பணிந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதற்கும் ஒருகட்டம் மேலே போய் போயஸ் கார்டனையும் ஜெயலலிதா நினைவு இல்லம் ஆக்கப்படும் என அறிவித்திருக்கிறார். எடப்பாடி பணிந்த பின்னணியைப் பார்க்கலாம்!
**ரகசிய தூதுவர்!**
அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் முக்கியப் பாலமாக இருந்தவர் மாஃபா பாண்டியராஜன்தான். அவர்தான் பன்னீர் அணிக்கும் எடப்பாடி அணிக்கும் இடையில் ரகசியத் தூதுவராகச் செயல்பட்டவர். எடப்பாடி பழனிசாமியையும் அவரது அரசையும் தினகரன் நேரடியாக விமர்சனம் செய்ய ஆரம்பித்ததும், பாண்டியராஜன்தான் பன்னீரிடம் பேசினாராம். ‘அந்தக் குடும்பத்தை ஒதுக்கிவைக்கச் சொல்லி நாம சொன்னோம். அது ஒதுக்கப்பட்டுவிட்டது. அம்மா மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க கமிஷன் அமைக்கச் சொல்லி நாம மறுபடியும் எடப்பாடிகிட்ட கேட்கலாம். அப்படி அவங்க அதுக்கும் சம்மதிச்சுட்டா அணிகள் இணைப்புல சிக்கல் இருக்காது. உங்களுக்கு முதல்வர் பதவி என்பது நிச்சயம் இப்போ கொடுக்க மாட்டாங்க. துணை முதல்வர் என்பது சரியா வருமான்னு எனக்கு யோசனையா இருக்கு. மூன்று முறை முதல்வராக இருந்துட்டீங்க. இப்போ துணை முதல்வராக இருப்பது எப்படி சரியா இருக்கும்? அம்மா இருந்த காலகட்டம் வேற… இப்போ வேற! அதனால எனக்கு ஒரு ஐடியா இருக்கு.
’கட்சிக்கு வழிகாட்டும் குழு தலைவர்’ என ஒரு பதவியை உருவாக்கி உங்களை வழிகாட்டும் குழு தலைவராக போடச் சொல்லி கேட்கலாம். இதெல்லாம் நாம அவங்ககிட்ட பேசினால்தான் நடக்கும். நம்ம அணியில் இருக்கும் சிலருக்கு அணிகள் இணைப்புல உடன்பாடு இல்லை. இப்படியே போயிட்டு இருந்தால், இங்கே இருக்கும் மிச்ச சொச்சம் பேரும் போயிடுவாங்க. அப்புறம் நாம கேட்கிற எதுவும் கிடைக்காது’ எனச் சொல்லியிருக்கிறார்.
அதற்கு பன்னீர், ‘இதைப் பற்றி வெளியில் யாருகிட்டயும் சொல்ல வேண்டாம். நீங்களே பேசிப் பாருங்க…’ என பாண்டியராஜனுக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். அதன் பிறகுதான் பாண்டியராஜன் ரகசிய ஆபரேஷனில் இறங்கினார்.
**தடைகளை உடைத்த மூவர்!**
இணைப்புப் பேச்சுவார்த்தை என்பது ஒருபக்கம் வெளிப்படையாக நடந்துவந்தாலும், பாண்டியராஜன் தனி ரூட்டில் சந்தித்தது செங்கோட்டையனையும் எஸ்.பி. வேலுமணியையும்! இருவரிடமும் பாண்டியராஜன் பேசியிருக்கிறார். ’ஆட்சிக்கு எதிராக தினகரனும் அவரது ஆட்களும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. இனியும் நாம இணையாமல் இருந்தால் அது ஒவ்வொரு நிமிஷமும் ஆட்சிக்குத்தான் கெட்ட பெயரை உண்டாக்கும். அம்மா மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க ஒரு கமிஷன் அமைக்க வேண்டும் என்பதுதான் எங்க பக்கம் முக்கிய கோரிக்கை. அதை மட்டும் செய்யுங்க. பன்னீர் அண்ணனை வழிகாட்டும் குழு தலைவராக நியமிக்கலாம். அவரும் 3 முறை முதல்வராக இருந்திருக்காரு. அதுக்காக அந்த மரியாதையாவது கொடுக்கணும். இதெல்லாம் செஞ்சுட்டா அணிகள் இணைவதில் எந்த சிக்கலும் இருக்காது. எங்க ஆட்கள் சிலருக்கே இணைவதில் உடன்பாடு இல்லை. அதனால நாம என்ன பேசி முடிச்சாலும் அதை கெடுத்துவிடலாம்னு சிலர் நினைக்கிறாங்க. அதை செஞ்சுட்டும் இருக்காங்க. எல்லோரையும் வெச்சுப் பேசாமல் காதும் காதும் வெச்ச மாதிரி சில விஷயங்களை நீங்க செஞ்சுடுங்க. இணைப்பு வேலைகளை சத்தமே இல்லாமல் முடிச்சுக்கலாம்!’ என சொன்னாராம்.
அதற்கு செங்கோட்டையன், ‘நீங்க சொல்றது சரிதான். நாங்க எடப்பாடிகிட்ட பேசுறோம்!’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அதன் பிறகுதான் எடப்பாடியின் திடீர் அறிவிப்புகள் வந்தன. பன்னீர் தரப்பு கோரிக்கைகள் அத்தனையும் எடப்பாடி நிறைவேற்றிவிட்டார். அணிகள் இணைவதற்கு எதெல்லாம் தடைகளாக இருந்ததோ அதெல்லாம் உடைக்கப்பட்டுவிட்டன.
**முட்டுக்கட்டையாக முனுசாமி!**
எடப்பாடியிடமிருந்து இப்படி ஒரு அறிவிப்பு வரும் என பன்னீர் அணியில் உள்ள கே.பி.முனுசாமி எதிர்பார்க்கவில்லை. அணிகள் இணைவதில் முட்டுக்கட்டையாக இருப்பவர் முனுசாமிதான்! அணிகள் இணைந்தால், பன்னீருக்கு உரிய பொறுப்பு கொடுக்கப்படும். பாண்டியராஜன் அமைச்சராகிவிடுவார். இவர்கள் எல்லோரும் இணைந்துவிட்டால் தன்னை அம்போவென விட்டுவிடுவார்கள் என முனுசாமி நினைப்பதாகச் சொல்கிறார்கள். அதனால்தான் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வந்ததும் உடனே ரியாக்ஷன் செய்தார் முனுசாமி. ‘ஜெயலலிதா மரணத்துக்கு ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைப்பதெல்லாம் கண் துடைப்பு நாடகம். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சசிகலா குடும்பத்தை இன்னும் முழுமையாக அவர்கள் கட்சியில் இருந்து நீக்கவே இல்லை. அதை நீக்க வேண்டும்!’ எனப் பேசினார் முனுசாமி.
எடப்பாடியின் இந்த அறிவிப்பு வந்ததும் பன்னீரையும் தொடர்புகொண்டு பேசி இருக்கிறார் முனுசாமி. ‘எல்லாம் ஏமாற்று வேலை. அவங்க சொல்றதை நீங்க நம்பிடாதீங்க. நாம நாளைக்கு நேரில் பேசலாம்!’ என சொன்னாராம். அதைத் தொடர்ந்துதான் இன்று ஆகஸ்டு 18ஆம் தேதி, மாலை பன்னீர் வீட்டில் அதிகாரபூர்வமாக ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது! அதில் முனுசாமி மறுபடியும் முட்டுக்கட்டை போடலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
**சசிகலாவுக்குப் பிறந்த நாள்!**
எடப்பாடியின் அறிவிப்புக்கு தினகரன் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக இருக்கிறார். இனி சசிகலாவை கேட்டு, அவரிடம் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்த கட்ட முடிவுகளை அறிவிக்கலாம் என தினகரன் நினைக்கிறார். ஆகஸ்ட் 18ஆம் தேதியான இன்று சசிகலாவுக்குப் பிறந்த நாள். சசிகலாவைச் சந்திக்க பெங்களூரு போயிருக்கிறார் தினகரன். சிறையில் சசிகலாவைச் சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டு, எடப்பாடியின் அறிவிப்புகள் தொடர்பாக அவரிடம் ஆலோசனை நடத்த தினகரன் திட்டமிட்டுள்ளார்.
சிறையில் இருக்கும் கைதிகளுக்குப் பிறந்த நாள் என்றால் சிறை விதிப்படி என்னவெல்லாம் செய்யலாம் என நேற்றே பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று அதிகாரிகளிடம் பேசியிருக்கிறார் புகழேந்தி. சிறையில் உள்ள கைதிகளுக்கு எல்லாம் இனிப்பு வழங்குவதற்கு சிறை விதிகளில் அனுமதி இருக்கிறதா என்றும் கேட்கப்பட்டிருக்கிறது. சிறை அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்துவிட்டனர். கர்நாடகாவில் உள்ள சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் சசிகலாவுக்கு சிறப்பு பூஜைகள் செய்ய புகழேந்தி தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘பிறந்த நாள்ல சின்னம்மாவுக்கு சந்தோஷமான செய்தியை சொல்லலாம்னு நினைச்சேன். ஆனால், எடப்பாடி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்காரு. போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்றப் போறாங்க என்பதை எப்படி அவங்ககிட்ட சொல்வேன். போயஸ் கார்டனை அவங்க கோயிலா நினைச்சிட்டு இருக்காங்க. அது கைவிட்டுப் போறதை நினைச்சா அவங்க அப்செட் ஆகிடுவாங்க. எப்படி அவங்களை சமாளிப்பது என்று தெரியலை!’ என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிப் புலம்பினாராம் தினகரன்.
இன்று பன்னீர் வீட்டில் ஒரு பக்கம் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இன்னொரு பக்கம் பரப்பன அக்ரஹாராவில் சசிகலாவுடன் ஆலோசனை நடக்கிறது. இரண்டு கூட்டங்களும் முடிந்தால்தான் அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியும்! அணிகள் இணையுமா, பதுங்கும் தினகரன் பாய்வாரா என்பதற்கெல்லாம் சசிகலா பிறந்த நாளில் விடை கிடைக்கும்! ” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.
அதற்கு லைக் போட்டதுடன் அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது வாட்ஸ் அப்.�,”