~ஸ்பெஷல்: இந்தியா வென்ற கோடிக்கணக்கான இதயங்கள்!

public

ஸ்டைலாக வெற்றியை அனுபவிப்பது எப்படி என்று கிரிக்கெட் உலகுக்குக் காட்டியிருக்கிறார் விராட் கோலி. 46ஆவது ஓவர் முடிவடைந்தபோது, இந்திய அணியின் ஸ்கோர் 237க்கு மூன்று விக்கெட். கோலி 109 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 63 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். மனிஷ் பாண்டேவை 25ஆவது ஓவரில் 36 ரன்களில் அவுட் செய்தபிறகு சேர்ந்த இந்த ஜோடியை யாராலும் பிரிக்க முடியவில்லை.

47ஆவது ஓவரின் முதல் பந்தாக ஹசரங்கா வீசிய பந்தை கட் செய்ய முயன்ற ஜாதவின் பேட் சிறிது தாமதித்துவிட்டதால், பேட்டின் ஓரத்தில் பட்டு கீப்பரின் கைகளுக்குள் சென்று அடைக்கலம் புகுந்தது பந்து. கிட்டத்தட்ட இந்தியாவின் வெற்றி பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் விழுந்த விக்கெட் என்பதால் புத்துணர்ச்சி கிடைத்தது இலங்கை வீரர்களுக்கு மட்டுமல்ல; இந்திய ரசிகர்களுக்கும்தான். ஏனென்றால், கேதர் ஜாதவ்வுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே களம் கண்டவர் வின்னிங் ஷாட் நாயகன் மகேந்திரசிங் தோனி.

இரண்டு ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் போட்டி இருந்ததால், விக்கெட்டுகள் மட்டுமே மதிப்பு என நினைத்து, தோனிக்கு ஸ்லிப்பில் ஒருவரை நிற்கவைத்தார் கேப்டன் உபுல் தரங்கா. அடித்தால் சிக்ஸ், இல்லையென்றால் சிங்கிள் என்ற நிலையில் தோனி எதிர்கொண்ட 47ஆவது ஓவரின் இரண்டாவது பந்தை, ஒரு ஸ்டெப் பின்னால் வந்து கவர் திசையில் திருப்பிவிட்டு ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தை விராட் கோலி, லாங்க்-ஆஃப் பகுதியில் மிகவும் கச்சிதமான டிரைவ் செய்து ஒரு ரன் எடுத்து இந்திய அணியின் வின்னிங் ஷாட் அடித்தார்.

ஓர் ஆட்டத்தில் வென்றார்கள்; 5-0 என இந்தத் தொடரை வென்றார்கள் என்பதெல்லாம் வெற்றியல்ல. இலங்கை மண்ணில், இலங்கை அணியுடன் விளையாடிய அத்தனை போட்டியிலும் வென்று ஒயிட்வாஷ் செய்த அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றிருப்பது சிறந்த வெற்றியாக கருத வேண்டும். இதுமட்டும்தானா சாதனை என்றால், இல்லை.

ஒருநாள் போட்டியில் 30 சதங்கள் அடித்து இரண்டாம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் பாண்டிங்கின் சாதனையை, இந்தப் போட்டியில் அடித்த சதத்தின் மூலம் சமன் செய்திருக்கிறார் கோலி. முதல் இடத்தில் 49 சதங்களுடன் இருப்பவர் சச்சின்.

ஒரு குறிப்பிட்ட அணியுடன் அதிக சதம் அடித்த வீரராக, இலங்கை அணியுடன் 8 சதம் அடித்து இரண்டாவது இடம்பிடித்துள்ள சச்சினின் சாதனையைச் சமன் செய்திருக்கிறார். முதல் இடத்தில், ஆஸ்திரேலியா அணிக்கெதிராக 9 சதங்கள் அடித்து முதலிடத்திலிருப்பவரும் சச்சின்தான். இந்தியாவுக்கு எதிராக 7 சதங்கள் அடித்து மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜெயசூர்யாவையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

தொடர்ந்து அதிக சதங்கள் எடுத்த சாதனைப் பட்டியலில் 5 சதங்கள் அடித்து சாயித் அன்வர், சங்கக்காரா ஆகியோருடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் கோலி.

ஒவ்வொரு வருடமும் 1,000 ரன்களை அதிக முறை கடந்த வீரர் என்ற பெருமையை, 5 முறை பெற்று மூன்றாவது இடத்தில் கோலி இருக்கிறார். 7 முறை 1,000 ரன்களைக் கடந்த சச்சின் முதலிடத்திலும், 6 முறை கடந்து இரண்டாவது இடத்தில் கங்குலி, பாண்டிங், சங்கக்காரா ஆகியோர் இருக்கின்றனர்.

இவையெல்லாம் ஏற்கெனவே படைக்கப்பட்ட சாதனைகளை கோலி கடந்துவந்த தகவல்கள். ஆனால், இந்த ஆட்டத்தின் மூலம் படைக்கப்பட்ட புதிய சாதனை ஒன்று மிச்சமிருக்கிறது. அது, முதன்முதலாக ஒரு விக்கெட் கீப்பர் 100 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டிகளில் ஸ்டம்பிங் முறையில் வீழ்த்தினார் என்ற பெருமையை மகேந்திர சிங் தோனி பெற்றிருக்கிறார் என்பதுதான். மொத்தமாக 160 ஸ்டம்பிங் செய்திருக்கிறார் தோனி.

மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களில், இலங்கையை முதன்முறையாக ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி என்ற தகவலை கிரிக்கெட் ரசிகர்களில் பலர் ஏற்கமாட்டார்கள். ஏனென்றால், ஏற்கனவே 2014ஆம் ஆண்டு இந்திய அணி இலங்கையை ஒயிட்வாஷ் செய்திருக்கிறது. ஆனால், அந்தப்போட்டி இந்தியாவில் நடைபெற்றது. இலங்கை மண்ணிலேயே இலங்கையை 5 போட்டிகளில் தோற்கடித்த பெருமை இப்போது இந்தியாவுக்கே உரித்தானது.

[இலங்கை இன்னிங்க்ஸ் எப்படி இருந்தது?](http://www.minnambalam.com/k/2017/09/03/1504443659)

ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புவனேஷ்வர் குமார் (42 ரன்களுக்கு 5 விக்கெட்) **முதல் சில போட்டிகளில் நான் அதிக விக்கெட்டுகளை எடுக்கவில்லை. அதற்காக இப்போது என்னை நிரூபிக்கவும் இத்தனை விக்கெட்டுகளை எடுக்கவில்லை. எனக்கான வாய்ப்பு கிடைக்கும்போது, என் அணிக்கு என்னால் முடிந்த நன்மையை செய்ய வேண்டும் என்பதே எண்ணமாகக் கொண்டிருக்கிறேன்** எனப் பேசினார். தொடரின் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாஸ்பிரிட் பும்ராவும் இதே கதையைத் தான் சொன்னார்.

மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த இலங்கை அணியின் கேப்டனான உபுல் தரங்கா, அடிக்க வேண்டிய பந்தை எவ்வித ஆக்ஷனும் இல்லாமல் திடீரென பிளாங்காக நின்று விட்டுவிட்டதால் அவுட் ஆகி ஏற்கெனவே மன உளைச்சலில் இருந்தார். அவர் இந்தப் போட்டி பற்றி பேசியபோது **இது எங்களுக்குக் கஷ்டமான காலம். இந்தத் தொடர் முழுக்க இந்தியா சிறப்பாக செயல்பட்டது. நாங்கள் 260 முதல் 270 வரை ஸ்கோர் செய்ய நினைத்தபோது எங்களது பேட்டிங் சொதப்பிவிட்டது. நல்ல பார்ட்னர்ஷிப் அமையாமல் போனதற்கு, நல்ல பேட்ஸ்மேன்களை விரைவில் இழந்துவிட்டதே காரணம்** என்று கூறினார். சமீப காலமாகவே, உபுல் தரங்காவுக்கும் இலங்கை கிரிக்கெட் போர்டுக்கும் நல்ல உறவுமுறை இல்லாததால், அவரது பேச்சில் காரம் அதிகமாக இருந்தது எனக் கூறலாம்.

கோப்பையை வாங்கப் போகிற மகிழ்ச்சியுடன் மைக்குக்கு முன்பு வந்த கோலி **5-0 என வெற்றிபெற்றிருப்பது ஆச்சர்யமான ஒன்று. லிமிடெட் ஓவர் போட்டிகள் கொஞ்சம் சேலஞ்சான ஒன்றாக இருக்குமென எப்போதுமே நினைத்து வந்தோம். இந்த வெற்றி கொடுக்கும் பெருமையெல்லாம் டீமையே சேரும். ஸ்பின் பவுலர்கள், வேகப் பந்து வீச்சாளர்கள் என அனைவருமே சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடியிருப்பதாகவே நினைக்கிறோம். 3 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற முடியாது என்பதுதான் பேச்சாக இருந்தது. ஆனால், இப்போது 5 வெற்றி பெற்றுவிட்டோம். சொல்லப்போனால் இது ஆறாவது வெற்றி. வெஸ்ட் இண்டீஸுடன் ஒரு வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது இருக்கும் நிலையே ஆஸ்திரேலியாவிலும் தொடர்ந்தால் மேலும் நன்றாக இருக்கும். இங்கிருக்கும் ரசிகர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஆட்டத்தின் எந்த சூழலிலும் அத்தனை அமைதியாக போட்டியைப் பார்க்கிறார்கள். நம்மை நேசித்து, நாம் செய்வதைப் பாராட்டும் ரசிகர்கள் கிடைப்பது நல்லது. நாங்கள் மீண்டும் இங்கு வர விரும்புகிறோம்** என்று ஒரு பிரசங்கமே நடத்திவிட்டார். மற்ற வீரர்கள் கோலியைப் பார்த்து கத்திக்கொண்டே இருந்தார்கள். சீக்கிரம் பேச்சை முடித்தால் வெற்றிப் பரிசை வாங்கலாம் என்ற ஆசை அதற்குக் காரணம். அந்நிகழ்வும் நடைபெற்றது.

இந்திய அணியின் வெற்றிக்காகக் கொடுக்கப்பட்ட காரின் ஸ்டியரிங்கை தோனி பிடித்திருக்க, மற்ற வீரர்கள் பின்னால் ஏறிக்கொள்ள மைதானத்தை ஒரு ரவுண்டு வந்தனர் இந்திய அணியினர். கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டு எத்தனை கோடி இதயங்களை ஒரே நிகழ்வைப் பார்த்து ரசிக்க வைக்கிறது என்று நினைக்கும்போது வியப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

– சிவா�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *