ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பேராசிரியர் பாத்திமா ஆகியோரின் மனுக்களை ஏற்றுக்கொண்டுள்ளது உயர் நீதிமன்றம்.
கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு ஆணை பிறப்பித்தது தமிழக அரசு. இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா குழுமத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வுக்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்தது சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத் துறை.
இன்று (ஜூன் 12) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் தொடுக்கப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்று கடந்த 23 ஆண்டுகளாகத் தான் சட்டப் போராட்டம் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார் வழக்கறிஞரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ.
அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வருபவர்கள் வணிக நோக்கங்களுக்காக இந்த வழக்கில் இணைந்திருப்பதாகத் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வைகோ மற்றும் பேராசிரியர் பாத்திமா ஆகியோரின் மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்தனர். இது தவிர மற்றனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
**
மேலும் படிக்க
**
**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**
**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)**
**[ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!](https://minnambalam.com/k/2019/06/12/46)**
**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**
�,”