தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்து வரும் மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள, நாளை (ஏப்ரல் 1) அங்கு செல்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். இந்த நிலையில், இப்போராட்டத்தை அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளதெனக் கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை, தாமிர உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, ஆலையின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது. இதற்கு, அப்பகுதியைச் சார்ந்த அ.குமரெட்டியாபுரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிப்ரவரி மாதம் முதல், இவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மார்ச் 24ஆம் தேதியன்று, இந்தப் போராட்டம் அடுத்தகட்டத்தை எட்டியது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும், ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்க வேண்டுமெனக் கோரி கடையடைப்பு மற்றும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இது, தமிழக அளவில் கவனம் பெறக் காரணமானது. இன்று (மார்ச் 31), ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம் 48வது நாளாகத் தொடர்கிறது. கல்லூரி மாணவர்களும் வேறு பகுதிகளைச் சார்ந்த மக்களும் இதில் கலந்துகொண்டு வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நாளை தூத்துக்குடி வரவுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு, அவர் பேசவிருக்கிறார்.
கமல் நாளை போராட்டத்தில் கலந்துகொள்ளும் நிலையில், இன்று அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். “ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது” என அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தங்களது போராட்டத்திற்கு ஆதரவு அளித்த ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளனர் குமரெட்டியாபுரம் மக்கள். இன்று காலை, இந்த மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். அங்குள்ள மக்கள் மத்தியில், அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பேசினார்.
�,