திமுக செயல் தலைவர் ஸ்டாலினை தமிழகத்தின் முதல்வராக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்து வருகிறார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை(இன்று) நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார்.நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ‘தமிழகத்தில் நடைபெறும் அனைத்துப் போராட்டங்களின் பின்னணியில் ஓ.பன்னீர்செல்வமும், மு.க.ஸ்டாலினும் உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வைத்த கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம். ஆனால், ஏன் அவர்களின் அணி பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என எங்களுக்குத் தெரியிவில்லை.மு.க.ஸ்டாலினை முதல்வராக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்து வருகிறார்.
இதேபோல், தமிழகத்தில் விலைவாசி உயரவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது.
மேலும், 142 ஆண்டுகளாக இல்லாத வறட்சி இப்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தேவைப்படும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
�,