ஸ்டாலினை சந்திக்கவில்லை என்று மறுத்துள்ள தினகரன், “நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தாலே அது தெரியும்” எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
தேவர் குருபூஜையில் கலந்துகொள்ள வந்த திமுக தலைவர் ஸ்டாலினும், அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனும் ஒரே நேரத்தில் மதுரையிலுள்ள பப்பீஸ் ஹோட்டலில் தங்கியதாகவும், அங்கு இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும் குத்தீட்டி என்ற பெயரில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா செய்தி வெளியிட்டிருந்தது. இந்த சந்திப்புக்குப் பிறகுதான் 18பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை என்று தினகரன் தெரிவித்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றிலும் இதுகுறித்து விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து இன்று (நவம்பர் 2) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “மேலூரில் நடைபெற்ற என்னுடைய முதல் கூட்டத்திலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டாக மதுரை சென்றால் பப்பீஸ் ஹோட்டலில்தான் தங்குவேன். கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்றும் அதே ஹோட்டலில் தங்கியிருந்தேன். அப்போது ஸ்டாலின் அங்கு தங்கியிருந்தார். அவர் மட்டுமில்லாது ஜி.கே.வாசனும்தான் தங்கியிருந்தார்.
அதேபோல கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து அங்குதான் தங்கியிருந்தேன். நாங்கள் சந்தித்தோமா என்பது குறித்து சிசிடிவி காட்சிகளைக் கூட ஆய்வு செய்துகொள்ளுங்கள். அவர்கள் கூறும் நாளில் நிகழ்வுகளை முடித்துக்கொண்டு, இரவு 12மணிக்குத்தான் ஹோட்டலுக்கு வந்தேன். அப்போதுதான் என்னிடம் அங்கு ஸ்டாலின் தங்கியிருக்கும் தகவலையே சொன்னார்கள். அவர் காலை 7.30 மணிக்கே கிளம்பிச் சென்றுவிட்டார். நான் 8.30 மணியளவில் சென்றேன். இதனை நீங்கள் என்னிடம் தொலைபேசியில் கேட்டிருந்தால் நான் சொல்லியிருப்பேன். அதனைவிட்டு தொலைக்காட்சியில் விவாதம் நடத்தியிருக்கிறீர்கள்” என்று தெரிவித்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் நான் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது வாஜ்பாய் அஸ்தி தொடர்பான நிகழ்வுக்காக பாஜக தமிழக தலைவர் தமிழிசையும் அங்கு தங்கியிருந்தார். இதனைப் பற்றி ஏன் விவாதம் நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய தினகரன், “ஒரே ஹோட்டலில் பல தலைவர்கள் ஒரே நேரத்தில் தங்குவது சாதாரணமானதுதான்” என்றும் தெரிவித்தார்.
அதிமுக பேனர் கிழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பேசிய தினகரன், “காவல் துறையை வைத்து அரசாங்கம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. பேனரை கிழிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், நாங்கள் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பே கிழித்திருக்க முடியும். பேனரில் மட்டும்தான் அவர்கள் இருக்கிறார்கள். மக்கள் மன்றத்தில் நாங்கள்தான் இருக்கிறோம். பேனர்கள் கிழிக்கப்பட்டபோது, எங்கள் நிர்வாகிகளை விட்டு அதனை தடுக்கக் கூறினோம். ஆட்சியாளர்கள் மீதுள்ள கோபத்தில் மக்கள் பேனர்களை கிழித்திருக்கலாம். அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. வழக்கு போடப்பட்டவர்களுக்கு ஜாமீனும் வாங்கிவிட்டோம். வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம்” என்று தெரிவித்தார்.
ஸ்டாலினை சந்திக்கவில்லை என்று தினகரன் திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், சந்திப்பு உண்மை என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஸ்டாலினுடனான தினகரன் சந்திப்பு உண்மைதான். நான் ஆரம்பத்திலிருந்தே கூறிக்கொண்டிருக்கிறேன். ஸ்டாலினுடன் ஒப்பந்தம் போட்டுதான் ஆர்.கே. நகரில் நின்று தினகரன் வெற்றி பெற்றார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஒப்பந்தம் போட்டு செயல்பட்டார்கள். 20 ரூபாய் நோட்டு டோக்கன் மூலம் செயல்பட்டார்கள். இனி ஆர்.கே.நகர் போல மற்ற தொகுதி மக்கள் ஏமாற மாட்டார்கள்” என்று தெரிவித்தார்�,